சென்னை: ‘பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் விசாரணை நீதிமன்றங்கள் ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடக்கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில், பள்ளி மாணவிக்கு, மாணவன் மஞ்சள் கயிறு கட்டியது தொடர்பான வழக்கு, தர்மபுரி மாவட்டத்தில் நடந்த இளவயது திருமணம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி கடந்தாண்டு ஜூன் 15ல், இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மாநிலத்தில் இரு விரல் பரிசோதனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன் ஆஜராகி, பாலியல் குற்ற வழக்குகளில் விசாரணைக்காக பாதுகாத்து வைக்கப்படும் முழு வளர்ச்சி, வளர்ச்சி பெறாத கருவை பராமரிப்பது தொடர்பாக, இந்த நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை பின்பற்றுவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
அதாவது, பெரும்பாலான மருத்துவமனைகள், தடய அறிவியல் மையங்களில் கருவை பாதுகாக்கும் வசதிகள் இல்லாததால், விசாரணை முடியும் வரை அவற்றை பராமரிப்பது கடினம் என்றார். இதையடுத்து நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களை ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்த வலியுறுத்தக்கூடாது என்ற உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுமாறு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும், டி.ஜி.பி., சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
அத்தகைய சோதனை மேற்கொள்ளப்படாமல் இருப்பதை, டாக்டர்களும் உறுதி செய்ய வேண்டும். பெரும்பாலான வழக்குகளில், இளம் சிறார்கள் திருமணம் செய்து கொள்ளும்போது, மைனர் பையன் மீது, குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இவ்விவகாரத்தில், இளம் சிறார் நீதிவாரியமும், இயந்திரத்தனமாக செயல்படுவது, இந்த நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. மைனர் சிறுவர்களை கைது செய்ய வேண்டாம் என, காவல்துறையினருக்கு டி.ஜி.பி., அறிவுறுத்த வேண்டும்.
மைனர் சிறுவர்களை, கண்காணிப்பு இல்லங்களுக்கு அனுப்ப, இளம் சிறார் நீதி வாரியம் இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கக்கூடாது. இது தொடர்பாக நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடைய கருவை பராமரிப்பது தொடர்பாக, தற்போது உள்ள வசதிகள் என்னென்ன என்பது குறித்து, தடய அறிவியல் துறை அதிகாரிகள் ஆஜராகி விளக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் விசாரணை நீதிமன்றங்கள் ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.