×

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்த இந்திய வம்சாவளிக்கு விசா மறுப்பு: ஒன்றிய அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தூதரகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் வசிப்பவர் ஷாமா சாவந்த். இந்திய வம்சாவளியான ஷாமா சியாட்டில் மாநகராட்சி கவுன்சில் உறுப்பினராக முன்பு பதவி வகித்துள்ளார். பெங்களூருவில் உள்ள ஷாமாவின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் அவரை பார்ப்பதற்காக ஷாமாவும், அவரது கணவரும் இந்தியாவுக்கு வருவதற்காக விசாவுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் ஷாமாவின் கணவருக்கு விசா கிடைத்துள்ளது. ஷாமாவின் விசா நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் சியாட்டிலில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்திற்கு சென்று அங்கு உள்ள அதிகாரிகளிடம் விசா மறுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டார். மேலும் அவர் தொடர்ந்து அலுவலக வளாகத்தை விட்டு வெளியே செல்ல மறுத்து அங்கே நிற்கிறார். இது குறித்து ஷாமா எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்,’ என்னுடைய விசா மறுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கேட்ட போது, என்னுடைய பெயர் நிராகரிப்பு பட்டியலில் இருப்பதாக அதிகாரிகள் கூறினர். காவல் துறையினரை அழைப்பதாக கூறி மிரட்டுகின்றனர்.

விசா ஏன் மறுக்கப்படுகிறது என்பதற்கான காரணம் தெரிகிறது. மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து சியாட்டில் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சாதி பாகுபாட்டிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றி வரலாறு படைத்து உள்ளோம்’ என குறிப்பிட்டுள்ளார். தூதரக அலுவலகத்தை ஷாமா சாவந்த் முற்றுகையிட்டுள்ள நிலையில் அவருடைய ஆதரவாளர்களும் அங்கு குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்த இந்திய வம்சாவளிக்கு விசா மறுப்பு: ஒன்றிய அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தூதரகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Visa ,Union government ,New York ,Shama Sawant ,Seattle, USA ,Shama ,Seattle City Council ,Bengaluru ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் கோல்டன் விசாவை...