விருத்தாசலம், பிப். 8: கடலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் விருத்தாசலத்தில் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகள் விளைவித்த நெல், மணிலா, கம்பு, சோளம், கேழ்வரகு, எள், உளுந்து உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்து பொருட்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். விருத்தாசலம் பகுதியில் தற்போது நெல் சாகுபடி முடிவடைந்துள்ளதை தொடர்ந்து விவசாயிகள் விளைவித்த நெல்மூட்டைகளை விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, நல்லூர், கம்மாபுரம், மங்கலம்பேட்டை, வேப்பூர் மற்றும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தானிய பயிர்களை இங்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இதனால் ஒரு நாளைக்கு சராசரியாக 10 ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் தற்போது விருத்தாசலம் பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் முடிவடைந்து அறுவடை பணிகள் தொடங்கியுள்ளதால், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று மட்டும் 12 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்வதற்காக ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் 75 கிலோ அளவுள்ள நெல் மூட்டைகளில் பிபிடி ரகம் அதிகபட்சமாக ஆயிரத்து 992 ரூபாய்க்கும், குறைந்த விலையாக ஆயிரத்து 649 ரூபாய்க்கும், மணிலா அதிகபட்சமாக 7 ஆயிரத்து 679 ரூபாய்க்கும், எள் 8 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், உளுந்து 7 ஆயிரத்து 689 ரூபாய்க்கும், தேங்காய் பருப்பு மூட்டை 8 ஆயிரத்து 569 ரூபாய்க்கும் விலை போனது.
The post விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு ஒரே நாளில் 12 ஆயிரம் நெல் மூட்டைகள் குவிந்தன appeared first on Dinakaran.