திருவண்ணாமலை, பிப். 8: திருவண்ணாமலை மாவட்டத்தில், 195 மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வை இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் 28,540 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். அதையொட்டி, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நேற்று தொடங்கியது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில், 145 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 2 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள், 24 தனியார் மேல்நிலைப் பள்ளிகள், 78 மெட்ரிக் பள்ளிகள் உள்பட 249 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அதற்கான செய்முறை தேர்வு மையங்கள், மொத்தம் 195 மையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் செய்முறைத் தேர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் அக மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட்டுளளனர். அறிவியல் பாடங்களுக்கு, 30 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. செய்முறைத் தேர்வின் முதல் நாளான நேற்று, பெரும்பாலான பள்ளிகளில் இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கான செய்முறை நடந்தது. அறிவியல் பாட மாணவர்கள், ஆர்வமுடன் செய்முறை தேர்வில் பங்கேற்றனர். ஒவ்வொரு பள்ளிக்கும் செய்முறைத்தேர்வுக்கான கால அட்டவணை தனித்தனியே வெளியிப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், செங்கம் அடுத்த இறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பிளஸ் 2 செய்முறை தேர்வை கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த செய்முறைத் தேர்வு மையங்களை, முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் வரும் 14ம் தேதிக்குள் நடத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
The post பிளஸ் 2 செய்முறைத் தேர்வு 195 பள்ளிகளில் தொடங்கியது கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.