×

தை மாத பவுர்ணமி கிரிவலம் * பக்தர்கள் விரைவு தரிசனத்துக்கு ஏற்பாடு * முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு திருவண்ணாமலையில் வரும் 11ம் தேதி

திருவண்ணாமலை, பிப்.8: திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி, தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 11ம் தேதி காலை 7.51 மணிக்கு தொடங்கி, 12ம் தேதி காலை 8.16 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, வரும் 11ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதையொட்டி, கிரிவல பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. அதில், கோயில் இணை ஆணையர் ஜோதி, ஏஎஸ்பி சதீஷ் குமார் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தை மாத பவுர்ணமியை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து துறை வாரியாக கலெக்டர் ஆய்வு நடத்தினார். மேலும், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யவும், நீண்ட நேரம் வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டார். மேலும், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1200 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல், பவுர்ணமி நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் சென்னை – திருவண்ணாமலை இடையிலான சிறப்பு ரயில்கள் இந்த மாதமும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், வழக்கம் போல சென்னை பீச் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கவும், திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கிரிவலம் செல்லும் பக்தர்களின் மனம் வேதனைப்படும்படி திருநங்கைகள் நடந்து கொள்வதாகவும், இடையூறு செய்வதாகவும் தொடர்ந்து புகார்கள் வருவதால், உரிய கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் சமூக நலத் துறையினர் ஈடுபடுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

அதோடு, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் திருநங்கைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். அதேபோல், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். மேலும், ஆதரவின்றி கிரிவலப்பாதையில் தங்கியுள்ள முதியவர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு காப்பகத்தில் சேர்க்கவும், அன்னதானம் வழங்கும் இடங்கள் தூய்மையாகவும், உணவு தரமாகவும் இருக்கிறதா எனவும் கண்காணிக்குமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து நேற்று மாலை அண்ணாமலையார் கோயில் மாட வீதி, தற்காலிக பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கிரிவல பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் தர்ப்பகராஜ் களஆய்வு மேற்கொண்டார்.

The post தை மாத பவுர்ணமி கிரிவலம் * பக்தர்கள் விரைவு தரிசனத்துக்கு ஏற்பாடு * முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு திருவண்ணாமலையில் வரும் 11ம் தேதி appeared first on Dinakaran.

Tags : Girivalam ,Tiruvannamalai ,Girivalam… ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம்...