×

5 ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ரெப்போ வட்டி 6.25 சதவீதமாக குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: 5 ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி 6.25 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்மூலம் வீடு, வாகன, தனிநபர் கடன் வட்டியை வங்கிகள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டத்தை நடத்துகிறது. இதில் வட்டி குறைப்பு உள்ளிட்ட முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கடைசியாக 2020 மே மாதம் ரெப்போ வட்டியை 6.25 சதவீதமாக குறைத்தது.

பின்னர் கொரோனா பரவலுக்குப் பிறகு பொருளாதாரம் மீளத்தொடங்கியதும் ரெப்போ வட்டியை 6.5 சதவீதமாக உயர்த்தியது. இதன்பிறகு நிதிக்கொள்கை கூட்டம் 11 முறை நடந்தும், ரெப்போ வட்டி எந்த மாற்றமும் இன்றி 6.5 சதவீதமாக நீடிக்கிறது. ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியாக ரெப்போ வட்டி நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், நடப்பு மாதத்துக்கான சீராய்வுக் கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை கவர்னர் நேற்று அறிவித்தார்.

அவர் கூறியதாவது: குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.25 சதவீதம் குறைந்து 6.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதிக்கொள்கை சீராய்வு குழுவில் உள்ள 6 உறுப்பினர்களும், வட்டி குறைப்பை ஏக மனதாக ஆதரித்துள்ளனர். பண வீக்கத்தை கட்டுக்குள் வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும். வரும் நிதியாண்டுக்கான நாட்டின் ஜிடிபி 6.7 சதவீதமாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் பண வீக்கம் ஏற்கனவே கணிக்கப்பட்டபடி 4.8 சதவீதாக இருக்கும். அடுத்த நிதியாண்டில் இது 4.2 சதவீதமாகக் குறையும்.

வரும் நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.2 சதவீதம், 2ம் காலாண்டில் 4.5 சதவீதம், 3ம் காலாண்டில் 3.8 சதவீதம், 4ம் காலாண்டில் 4.2 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் முந்தைய நிதிக்கொள்கை முடிவுகளால், சில்லறை விலைப் பண வீக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த டிசம்பரில் 4 மாதத்தில் இல்லாத சரிவாக 5.22 சதவீதமாக இருந்தது. காய்கறி, உணவுப் பொருட்கள் விலை குறைந்ததே இதற்குக் காரணம். இவ்வாறு ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா கூறினார்.

ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியானது. இதன் தொடர்ச்சியாக, ரெப்போ வட்டி குறைப்பை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2019 அக்டோபர் மாதத்துக்குப் பிறகு பெரும்பாலும் ரெப்போ வட்டி அடிப்படையிலேயே வீடு, வாகன மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டியை வங்கிகள் நிர்ணயிக்கின்றன. எனவே வீடு, வாகன, தனிநபர் கடன் வட்டியை வங்கிகள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி குறைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என ரிசர்வ் வங்கி கூறினாலும், நேற்றைய பங்குச்சந்தையில் இந்த அறிவிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பை
வங்கிகள் அமல்படுத்தினால்
வட்டி எவ்வளவு குறையும்?
வீட்டுக்
கடன் இஎம்ஐ
(8.75% வட்டி) இஎம்ஐ
(8.5%வட்டி) ஆண்டுக்கு
சேமிப்பு
ரூ.20 லட்சம் ரூ.17,674 ரூ.17,356 ரூ.3,816
ரூ.30 லட்சம் ரூ.26,511 ரூ.26,035 ரூ.5,712
ரூ.50 லட்சம் ரூ.44,186 ரூ.43,391 ரூ.9,540
வாகன
கடன் இஎம்ஐ
(9.4% வட்டி) இஎம்ஐ
(9.15% வட்டி) ஆண்டுக்கு
சேமிப்பு
ரூ.5 லட்சம் ரூ.10,477 ரூ.10,416 ரூ.732
ரூ.7 லட்சம் ரூ.14,667 ரூ.14,582 ரூ.1,020
ரூ.10 லட்சம் ரூ.20,953 ரூ.20,831 ரூ.1,464
மேலே உள்ள வட்டி விகிதம் மற்றும் இஎம்ஐ
உதாரணத்துக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

* சைபர் குற்றங்களை தடுக்க புது முயற்சி
சைபர் குற்றங்களை தடுத்து பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், ‘பேங்க்.இன்’ (bank.in) என்ற இணைய முகவரியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த இணைய முகவரிக்காக வரும் ஏப்ரல் மாதம் முதல் பதிவு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வங்கி நிதிச் சேவைகள், பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்ள உதவும். இதுபோல், வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கான ஃபின்.இன் (fin.in) என்ற இணைய முகவரியை உருவாக்கும் திட்டமும் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

* ரூபாய் வர்த்தகத்துக்கு வாஸ்ட்ரோ கணக்கு
ரிசர்வ் வங்கி இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட், இந்தோனேஷியா, மாலத்தீவு போன்றவற்றுடன் உள்ளூர் கரன்சியில் வர்த்தகம் மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாக , நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜிதின் பிரசாதா கூறியிருந்தார். இதுவரை, இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் 30 நாடுகளுடன் ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கான 156 வாஸ்ட்ரோ கணக்கு தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உதாரணமாக, வெளிநாட்டு வங்கியின் வாடிக்கையாளருக்கு ரூபாய் வர்த்தகத்துக்காக இந்தியாவில் உள்ள வங்கியில் இத்தகைய கணக்கு தொடங்கப்படும்.

The post 5 ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ரெப்போ வட்டி 6.25 சதவீதமாக குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Reserve Bank ,Mumbai ,Dinakaran ,
× RELATED இண்டஸ்இண்ட் வங்கியின் நிதிநிலை சீராக உள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கம்