×

நெல்லை அல்வாவை விட ஒன்றிய அரசு தரும் அல்வா தான் ‘பேமஸ்’ தமிழகத்துக்கு நீதியும் இல்லை, நிதியும் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

நெல்லை: திருநெல்வேலி அல்வா என்றால் உலக அளவில் புகழ்பெற்றது. ஆனால், இப்போது, மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் அல்வா தான் அதைவிட புகழ் பெற்றதாக இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது; நீதியும் கிடையாது என்று நெல்லையில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். நெல்லை மாவட்டத்தில் ரூ.9,371 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா, 75 ஆயிரம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நேற்று காலை நடந்தது.

விழாவில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு, வெள்ளநீர் கால்வாய், நதிநீர் இணைப்பு திட்டத்தை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து, ரூ.180 கோடியில் தாழையூத்து – கொங்கந்தான் பாறை வரை புறவழிச்சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்து, 75 ஆயிரம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 2023ம் ஆண்டு டிசம்பரில் எப்படிப்பட்ட கனமழை பெய்தது என்று உங்களுக்கு தெரியும். அதனால், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் எப்படியெல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டது என்றும் உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த பாதிப்புகளிலிருந்து மீள, ஒன்றிய அரசிடம் நாங்கள் நிதி கேட்டோம். இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் வந்தார்கள்.

ஆனால், உடனடியாக இடைக்கால நிதி உதவியைக் கூட செய்யவில்லை. நயினார் நாகேந்திரன் கோபித்துக் கொள்ளக் கூடாது. அவருக்கும் உண்மை தெரியும். ஆனால், அவர் பேசமாட்டார். நீங்கள் பேசுங்கள் என்றுதான் எனக்கு அனுமதி கொடுப்பார். இருந்தாலும், மாநில அரசின் நிதியை வைத்து நிவாரண பணிகளை நாங்கள் செய்தோம். தொடர்ந்து ஒன்றிய அரசிடம் நிதி கேட்டு வலியுறுத்தினோம். கொடுக்காத அவர்களை கண்டித்தோம். அப்போதும் வரவில்லை. நாடாளுமன்றத்திலும் பேசினோம். அப்போதும் வரவில்லை. ஏன், நீதிமன்றம் சென்றோம். அதன்பிறகு தான் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியை அறிவித்தார்கள்.

அதுவும் எவ்வளவு? நாம் கேட்டது, ரூ.37 ஆயிரத்து 907 கோடி, வேறு வழியில்லாமல் ஒன்றிய அரசு கொடுத்தது, வெறும் ரூ.276 கோடி. நாங்கள் கேட்டதில் ஒரு சதவீதத்தை கூட கொடுக்கவில்லை. இப்படிதான் ஒன்றிய பாஜ அரசு நடந்து கொண்டு இருக்கிறது. சரி போகட்டும். இந்த பட்ஜெட்டிலாவது நாங்கள் கேட்ட நிதிகளை ஒதுக்கித் தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று ஒதுக்கி விட்டார்கள், மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது, ஒன்றிய பா.ஜ.க. அரசு. அவர்களை பொறுத்தவரை, கூட்டணியில் இருக்கும் மாநிலங்களுக்கும், தேர்தல் வரும் மாநிலங்களுக்கும் மட்டும்தான் அறிவிப்புகளையும், நிதியையும் கொடுப்பார்கள். திருநெல்வேலி அல்வா என்றால் உலக அளவில் புகழ்பெற்றது. ஆனால், இப்போது, மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் அல்வா தான் அதைவிட புகழ் பெற்றதாக இருக்கிறது.

அதனால்தான் நாங்கள் கேட்கிறோம். இந்தியாவின் வரைபடத்தில் மட்டும், தமிழ்நாடு இருந்தால் போதுமா? அரசாங்கம் வெளியிடும் நிதிநிலை அறிக்கையில் இருக்க வேண்டாமா? ஒன்றிய அரசின் திட்டங்களில் தமிழ்நாட்டின் பெயர் இருக்க வேண்டாமா? தமிழ்நாட்டிற்கு சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டாமா? தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்க மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தால் போதும் என்று நினைக்கிறார்களா? இப்படி நாங்கள் கேட்கும் கேள்விகள் எதற்கும், பா.ஜ.கவிடம் இருந்து எந்த பதிலும் வராது.

திராவிட மாடல் அரசை பொறுத்தவரை, ஒன்றிய அரசை பொருட்படுத்தாமல், நமக்கு நாமே என்று தமிழ்நாட்டை மேம்படுத்தி வருகிறோம். அதனால்தான், ஒன்றிய அரசு வெளியிடும் எல்லா புள்ளி விவரங்களிலும் முன்னணியில் இருக்கிறோம். அதற்கு காரணம், வாக்களித்த மக்களான உங்களுக்கு, நாங்கள் உண்மையாக இருக்கிறோம். ஒன்றிய அரசு மேல் குறை சொல்லிக்கொண்டு எந்த திட்டத்தையும் உருவாக்காமல் விட்டு விடவில்லை. நாளுக்கு நாள் புது புது திட்டங்கள், வந்து கொண்டே இருக்கிறது. நாங்கள் உருவாக்கிக்கொண்டே இருப்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* நாங்குநேரியில் 2,291 ஏக்கரில் புதிய சிப்காட் தொழில் பூங்கா
நெல்லை மாவட்டத்தின் எதிர்கால தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நாங்குநேரி தாலுகா, மறுகால்குறிச்சி மற்றும் திருவரமங்கைபுரம் கிராமங்களில் 2 ஆயிரத்து 291 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும். அதுமட்டுமல்ல, மூலக்கரைப்பட்டி பகுதியில் இருக்கும் ஆயிரத்து 200 ஏக்கர் தரிசு நிலங்களில் மேலும் ஒரு புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுதவிர நெல்லை மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களையும் முதல்வர் அறிவித்தார்.

* பொருநை அருங்காட்சியக பணி ஏப்ரலில் முடியும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘தமிழரின் வரலாற்றுப் பெருமைக்கும் இந்த நெல்லை மண்தான் அடையாளம். தமிழர்களின் தொன்மையை நிலைநாட்டி வரும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அதை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை மூலமாக தொடர்ச்சியாக செய்துகொண்டு வருகிறோம். அந்த ஆய்வுகள் பல்வேறு திருப்புமுனைகளை உருவாக்கி வருகிறது. தமிழ்நாட்டில் நகர நாகரிகமும், எழுத்தறிவும் கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது என்று கீழடி அகழாய்வு முடிவுகள் மூலம் நிறுவியிருக்கிறோம். இரும்பின் தொன்மை 5 ஆயிரத்து 300 ஆண்டுகள் என்று சில வாரங்களுக்கு முன்பு நாம் உலகத்திற்கு அறிவித்தோம். பொருநை ஆற்றங்கரையில் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பே வேளாண் பயிர் தொழிலில் நெல் பயிரிடப்பட்டிருக்கிறது என்று சிவகளை அகழாய்வு முடிவில் வெளிப்படுத்தி இருக்கிறோம். இங்கு பொருநை அருங்காட்சியகப் பணிகளும் ரூ.33 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் முடிவு பெற இருக்கிறது’ என்றார்.

* ‘அப்பாவுக்கு நன்றி’ நெகிழ்ந்து போனேன்
விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘டாடா தொழிற்சாலை மூலமாக மட்டும் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதில் முக்கியமானது என்ன என்று கேட்டால், 80 சதவீதம் பேர் பெண்கள். அந்த நிறுவனத்திற்கு நான் சென்றபோது, அங்கிருந்த ஒரு பெண் தொழிலாளர் என்னிடம் சொன்னது, ‘அப்பா, எங்கள் ஊரில் எவ்வளவு பெரிய தொழிற்சாலையைக் கட்டி எங்களுக்கு வேலை கொடுத்திருக்கிறீர்கள். நன்றி’ என்று அந்த மகள் சொன்னபோது நான் நெகிழ்ந்து போனேன்’ என்றார்.

* ‘அடுத்த 5 ஆண்டுகளில் தென் மாவட்ட வளர்ச்சி புலிப் பாய்ச்சலாக இருக்கும்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘நவீன தொழில்களின் மையமாக தமிழ்நாட்டை உயர்த்தவேண்டும். சென்னை, கோவை மட்டுமல்லாமல், தென் தமிழ்நாட்டில் பிரம்மாண்ட தொழிற்சாலைகள் நிறைய அமைய வேண்டும். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது தான் எனது இலக்கு. அதை முன்னுரிமையாக கொண்டு தான் திட்டங்களை தீட்டி, முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் தந்து புதிய வரலாற்றை திராவிட மாடல் ஆட்சி படைத்துக் கொண்டு இருக்கிறது. இந்த தென்பாண்டிச் சீமையை, தொழில் வளர்ச்சி நிறைந்த சீமையாக மாற்றியது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி என்று வரும் காலம் சொல்லும். அந்த அளவுக்கு, வலுவான அடித்தளத்தை உருவாக்கி இருக்கிறேன்.

உலக அளவிலான முதலீட்டாளர்களாக இருந்தாலும், இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களாக இருந்தாலும், அவர்களை நான் சந்தித்தால், ‘தென்மாவட்டங்களில் தொழில் தொடங்க வாருங்கள்’ என்று தான் நான் கேட்பேன். நான் மட்டுமல்ல, நம்முடைய அமைச்சர்களும், அதிகாரிகளும் தென்மாவட்டங்களில் முதலீடு செய்ய பரிசீலனை செய்யுங்கள் என்று தான் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் தென் மாவட்டங்களின் வளர்ச்சி ‘புலிப் பாய்ச்சலாக’ இருக்கும். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற பகுதிகளின் முகமே மாறும் அளவுக்கு முன்னேற்றம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. அது நிச்சயம் நனவாகும்’ என்றார்.

* சதி, துரோகிகளை முறியடிப்போம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘நம்முடைய வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், நம்முடைய ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு செய்தியும் எப்படியெல்லாம் திரிக்கிறார்கள்? கருத்துருவாக்கம் செய்கிறார்கள். அவர்களின் நோக்கம் ஒன்று தான். திமுக-வை எப்படி அழிக்கலாம்? தமிழ்நாட்டின் வளர்ச்சியை எப்படி கெடுக்கலாம்? அவர்கள் என்ன சதி திட்டம் தீட்டி, நேரடியாக வந்தாலும் சரி, துரோகிகளை துணைக்கு அழைத்துக்கொண்டு வந்தாலும் சரி, அதை நாங்கள் நிச்சயம் முறியடிப்போம்’ என்றார்.

* மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் சந்திப்பு
நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த முதல்வரை சந்திக்க 100க்கும் மேற்பட்ட மாஞ்சோலை தொழிலாளர்கள் நேற்று காலையில் காத்திருந்தனர். முதல்வரின் அலுவல் பணி காரணமாக சிலர் மட்டுமே முதல்வரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டவர்களை போலீசார் சமசரப்படுத்தினர். மாஞ்சோலை கவுன்சிலர் ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் முதல்வரிடம் அளித்த மனுவில் ‘மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகளை அரசு வெவ்வேறு பகுதிகளில் ஒதுக்கியுள்ளது. அவர்களுக்கு ஒரே இடத்தில் சமத்துவபுரம் உருவாக்கி குறைந்த பட்சம் 3 சென்ட் நிலத்துடன் வீடு கட்டித் தர வேண்டும். மாஞ்சோலையில் உள்ள வழிபாட்டிடங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறையாவது தங்கு தடையின்றி செல்ல வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். மாஞ்சோலை தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு தொழில் தொடங்க அரசு உதவி செய்ய வேண்டும். ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்திற்கு கீழ் தான் பெறுவதால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மாஞ்சோலை பெண்களுக்கு வழங்க வழி வகை செய்ய வேண்டும்’ என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* 2வது நாளாக முதல்வர் ‘ரோடு ஷோ’
நெல்லை மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வண்ணார் பேட்டையிலிருந்து 2 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோவாக சென்று பொதுமக்களை சந்தித்தார். 2வது நாளான நேற்று நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார். இதற்காக காலை 9 மணிக்கு வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்ட அவர், வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்களிடம் கை குலுக்கி வரவேற்பை பெற்றார். நேற்றும் சமாதானபுரம், ரகுமத்நகர் பகுதியில் நடந்தே சென்றார். பொதுமக்கள் அவரை பார்த்து உற்சாகமாக கையசைத்தனர். பல இடங்களில் அவருடன் பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வண்ணார்பேட்டையில் இருந்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மைதானம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறங்களிலும் ஆண்கள், பெண்கள் திமுக கொடி மற்றும் கருப்பு, சிவப்பு பலூன்களுடன் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். பாளையில் அவர், வரும் போது பெண்கள் முதல்வர் மீது மலர் தூவி வரவேற்றனர்.

The post நெல்லை அல்வாவை விட ஒன்றிய அரசு தரும் அல்வா தான் ‘பேமஸ்’ தமிழகத்துக்கு நீதியும் இல்லை, நிதியும் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Nellai ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Tirunelveli ,Nellai… ,Nellai halwa ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய...