கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 2022 ஜூலை 17ம் தேதி மாணவி மரணத்துக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் எனக் கூறி, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள், பள்ளிக்குள் நுழைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்ததுடன், பொருட்களையும் திருடிச் சென்றனர். இந்த கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டன. அதில் கலவரத்தில் ஈடுபட்ட 916 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதில் 53 பேர் இளம்சிறார்கள். பலர் கைது செய்யப்பட்டனர். அதேநேரத்தில் மாணவி இறப்பு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியை சேதப்படுத்திய விவகாரத்தில் 21 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கை, காவல்துறை வாகனத்தை சேதபடுத்திய விவகாரத்தில் 10 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கை, உயர் அதிகாரிகளை தாக்கிய விவகாரத்தில் 9 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கை, பசுமாடுகளை துன்புறுத்திய விவகாரத்தில் 150 பக்க குற்றப்பத்திரிக்கை என மொத்தம் 4 வழக்குகளில் 41 ஆயிரத்து 250 பக்கம் குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தாக்கல் செய்து உள்ளனர். இதில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 40,150 பக்கங்களும், விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் 1100 பக்கங்களும் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் குற்றவாளியாக உயிரிழந்த மாணவி மதியின் தாயார் செல்வி பெயரும், இரண்டாவது குற்றவாளியாக விசிக பிரமுகர் திராவிடமணி பெயரும் இடம் பெற்றுள்ளது.
The post கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு 41,250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் appeared first on Dinakaran.