சுற்றுலா விசா மூலம் சென்று கம்போடியா, லாவோஸ் நாடுகளில் சர்வதேச சைபர் குற்றவாளிகளிடம் 1,130 தமிழர்கள் சிக்கித் தவிப்பு

* தமிழர்களை மீட்க சிபிசிஐடி தொடர் நடவடிக்கை
* 6 மலேசிய நாட்டவர் உட்பட 54 இடைத்தரகர்கள் கைது

சென்னை: சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைக்காக கம்போடியா, லாவோஸ் நாடுகளுக்கு சென்றுள்ளவர்களில் 1,130 தமிழர்கள் சைபர் மோசடி நபர்களிடம் சிக்கி நாடு திரும்ப முடியாமல் தவிர்த்து வருவதாகவும், அவர்களை மீட்க சிபிசிஐடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 19 குற்றவாளிகளுக்கு லுக்அவுட் நோட்டீசும் விடுக்கப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்தோர் பிரிவு இணை செயலாளர் சுரீந்தர் பகத், வெளியுறவு அமைச்சக அதிகாரி ராஜ்குமார் மற்றும் புலம் பெயர்ந்தோர் பாதுகாவலர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

அக்கூட்டத்தில் சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகமைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும், சைபர் குற்றவாளிகளை கைது செய்வது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்து கணினி, தட்டச்சு மற்றும் ஆங்கில மொழிப் புலமை வாய்ந்த நபர்களை சைபர் குற்றவாளிகள் இடைத்தரகர்கள் மூலம் சுற்றுலா விசாவில் தாய்லாந்திற்கு சென்று அங்கிருந்து லாவோஸ் மற்றும் கம்போடியாவிற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்படி அழைத்து செல்லப்பட்ட நபர்களுக்கு ஊதியத்துடன் தங்கும் இடம் வழங்கி, கம்பி வேலி போடப்பட்ட கட்டிடங்களில் அடைத்து வைத்து, அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்டு, பெடெக்ஸ் மோசடி, முதலீட்டு மோசடி, சட்டவிரோத கடன் வழங்கும் செயலி மோசடி, திருமண மோசடி, காதல் மோசடி போன்ற இணைய மோசடிகள் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

அப்போது மோசடி நபர்களிடம் இருந்து தங்களை விடுவிக்க கோரும் நபர்களிடம் பல கோடி ரூபாய் கேட்டு மிரட்டும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதுபோன்ற மோசடி நபர்களிடம் இருந்து தப்பி கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நாடு திரும்பிய நபர்கள், இதுதொடர்பாக இந்திய சைபர் க்ரைமில் விரிவான புகார்களை அளித்துள்ளனர். இதுதொடர்பாக இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையம், தெற்காசிய நாடுகளுக்கு சென்று சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு திரும்பாத பயணிகள் தொடர்பான விவரங்களை பெற்று, அது தொடர்பாக அனைத்து துறைகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தியது.

அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா விசா மூலம் சென்று நாடு திரும்ப முடியாமல் 1,465 பேர் சிக்கியுள்ளனர். அவர்களில் 335 பேர் குடும்பம் மற்றும் உறவினர்கள் முலம் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த தவலின் படி சட்ட விரோதமாக ஆட்களை அனுப்பியதாக தமிழகம் முழுவதும் சென்னை, சேலம், கடலூர், தஞ்சை, திருவாரூர், மதுரை, அரியலூர், மதுரை நகரம் மற்றும் விருதுநகர், நாகர்வோவில் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 24 வழக்குகள் சிபிசிஐடி போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் சிபிசிஐடி நடத்திய விசாரணையில், சுற்றுலா விசா மூலம் மியான்மர், லாவோஸ், கம்போடியா போன்ற நாடுகளுக்கு ஆட்கள் அனுப்பியதாக 6 மலேசியா நாட்டவர் உட்பட 54 சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் குற்றம் சாட்டப்பட்ட சிலரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு நிறுவனங்களுடன் தமிழ்நாடு காவல்துறையின் ஒருங்கிணைந்த முயற்சியின் காரணமாக லாவோஸ், கம்போடியாவுக்கு செல்ல இருந்த 29 பேர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மோசடியில் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 28 பேருக்கு லுக்அவுட் நோட்டீசும் விடப்பட்டுள்ளது. அதில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 19 பேரை தொடர்ந்து கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மியான்மர், லாவோஸ், கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து இதுவரை தமிழகத்தை சேர்ந்த 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த 372 சட்டவிரோத ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ், சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்களின் 101 சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சிபிசிஐடி போலீசார் சென்னை பெருநகர காவல்துறையுடன் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பியதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 முகவர்களை கைது செய்துள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட நபர்களுக்கு ஊதியத்துடன் தங்கும் இடம் வழங்கி, கம்பி வேலி போடப்பட்ட கட்டிடங்களில் அடைத்து வைத்து, அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து கொண்டு, பெடெக்ஸ் மோசடி, முதலீட்டு மோசடி, சட்டவிரோத கடன் வழங்கும் செயலி மோசடி, திருமண மோசடி, காதல் மோசடி போன்ற இணைய மோசடிகள் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

The post சுற்றுலா விசா மூலம் சென்று கம்போடியா, லாவோஸ் நாடுகளில் சர்வதேச சைபர் குற்றவாளிகளிடம் 1,130 தமிழர்கள் சிக்கித் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: