×

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை: காலை 10 மணிக்கு முடிவு தெரியும்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. காலை 10 மணிக்கு முடிவு தெரிய வாய்ப்புள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 46 பேர் போட்டியிட்டனர். கிழக்கு தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில், 74 ஆயிரத்து 260 ஆண் வாக்காளர்களும், 80 ஆயிரத்து 376 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை (8ம் தேதி) நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாளை காலை 5 மணிக்கு மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் சீல் வைத்து இருப்பு வைக்கப்பட்டுள்ள தபால் வாக்கு பெட்டிகள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், துணை ராணுவ வீரர்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இதையடுத்து காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட உள்ளன. தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்குகிறது. 17 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட உள்ளது. காலை 10 மணியளவில் முடிவு தெரிய வாய்ப்புள்ளது.

 

The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை: காலை 10 மணிக்கு முடிவு தெரியும் appeared first on Dinakaran.

Tags : Erode East midterm election ,Erode ,Erode East ,EAST ASSEMBLY CONSTITUENCY MIDTERM ELECTIONS ,Dimuka ,V. C. Chandrakumar ,Nadaka ,Dinakaran ,
× RELATED வன்முறையை தூண்டும் வகையில் பேசிய...