புதுடெல்லி: அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக சென்று செட்டில் ஆவதற்காக ரூ.40 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவளித்த 104 இந்தியர்கள், தற்போது கை, கால், இடுப்பில் விலங்கிட்ட நிலையில் நாடு திரும்பிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள், ேநற்று முன்தினம் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்குவர். இதுதொடர்பான வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்பு ரோந்து படையின் தலைவர் மைக்கேல் பாங்க் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டது ஏன்? இந்தியர்களை தீவிரவாதிகளை போன்று நடத்தியது ஏன் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் அளித்த பதிலில், ‘வெளிநாடுகளில் சட்டவிரோதமாக குடியேறியர்களை திரும்ப அழைத்துக் கொள்வது அந்தந்த நாடுகளின் கடமை. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவது புதிது கிடையாது. இது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 16 ஆண்டுகளில் மட்டும் அமெரிக்காவில் இருந்து 15,652 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் கை, கால்களில் விலங்கிடுவது அந்த நாட்டின் சட்டம். எனினும் இந்தியர்களை திருப்பி அனுப்பும்போது அவர்களை கண்ணியமாக நடத்துவது தொடர்பாக அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களில் ஆண்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கபபட்டு இருந்தன. பெண்கள், குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை’ என்றார்.
இந்தியா திரும்பிய பஞ்சாபை சேர்ந்த ஜஸ்பால் சிங் கூறும்போது, ‘வேலைவாய்ப்புக்காக ஒரு ஏஜெண்டிடம் ரூ.42 லட்சம் அளித்து அமெரிக்கா சென்றேன். கத்தார், பிரேசில், பெரு, கொலம்பியா, பனாமா, மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்தேன். தற்போது கை, கால்களில் விலங்கிடப்பட்டு கைதி போல இந்தியாவுக்கு திரும்பி உள்ளேன்’ என்றார். மற்றொரு பெயர் வெளியிட விரும்பாத இந்தியர் கூறுகையில், ‘சுமார் 40 மணி நேர விமான பயணத்தில் போதிய உணவு வழங்கப்படவில்லை. கழிப்பறையை பயன்படுத்த முடியவில்லை. அமெரிக்க அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் செயல்படவில்லை’ என்றார். மற்றொரு பெண் லவ்பிரீத் கவுர் கூறுகையில், ‘எனது 10 வயது மகனுடன் இந்தியா திரும்பினோம். நாங்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்பட்டோம். கைவிலங்குகள், இடுப்பு, கால்களைச் சுற்றி சங்கலிகளால் கட்டப்பட்டிருந்ததால், எங்களால் கழிப்பறைக்கு கூட செல்ல முடியவில்லை. விமானத்தின் உட்பகுதியில் செல்ல அனுமதிக்கவில்லை. அனைவரும் நேருக்கு நேர் உட்கார வைக்கப்பட்டோம்; யாருடனும் பேச அனுமதிக்கவில்லை.
சிலர் கைது செய்யப்படுவதற்கு முன்பு சில நாட்கள் தடுத்து வைக்கப்பட்டனர். சிலர் பல வாரங்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். எங்களது செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நகைகள், பணம் பறிக்கப்பட்டன. குளிரான இடத்தில் தங்கவைக்கப்பட்டோம்’ என்றார். மற்றொரு இந்தியரான சுக்பால் சிங் கூறுகையில், ‘சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் அறையின் வெப்பநிலையை வேண்டுமென்றே குறைவாக வைத்தனர். மிகக் குறைந்த அளவு உணவு வழங்கப்பட்டது. பலருக்கு அந்த உணவும் வழங்கப்படவில்லை. எங்களை அழைத்து சென்ற முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமெரிக்கா செல்வதற்காக ரூ.40 லட்சம் முதல் ரூ.1.05 கோடி வரை பலரும் பணத்தை இழந்துள்ளனர். கடன்வாங்கி தான் பலரும் அமெரிக்கா சென்றனர்’ என்று கவலையுடன் கூறினார்.
இந்தியா திரும்பிய 104 பேரின் பின்னணி குறித்த விபரங்களை புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய காலகட்டத்தில், அவர்களின் தொடர்புகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் நலன்களை பாதுகாக்க புதிய சட்டத்தை இயற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக குடியேறியதாக இந்தியர்கள் பிடிபட்டால் அவர்களை பாதுகாப்பாகவும், அவர்களை கவுரவமாக இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பாக புதிய சட்டத்தில் பல்வேறு விதிகள் வரையறுக்கப்பட உள்ளதாகவும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
The post அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக சென்று செட்டில் ஆவதற்காக ரூ.40 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவழித்த இந்தியர்கள்: ஒன்றிய அமைச்சரின் விளக்கத்திற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.