×

இந்த வார விசேஷங்கள்

8.2.2025 – சனி பீஷ்ம ஏகாதசி

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறை என்னும் இரண்டு காலங்களிலும் இரண்டு ஏகாதசி திதிகள் வரும். ஆக, ஓராண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள். சில ஆண்டுகள் 25ம் வருவதுண்டு. மற்ற திதிகளைவிட ஏகாதசி மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. கங்கையைவிட சிறந்த தீர்த்தம் இல்லை; விஷ்ணுவைவிட உயர்ந்த தெய்வம் இல்லை; காயத்ரியைவிட உயர்ந்த மந்திரம் இல்லை; தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை; ஏகாதசியைவிட சிறந்த விரதம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. அதிலும், இன்றைய ஏகாதசி சிறப்பானது. உத்தராயனப் புண்ணிய காலத்தில் வரும் ஏகாதசி. ரத சப்தமியை அடுத்து வரும் இந்த ஏகாதசிக்கு, பீஷ்ம ஏகாதசி என்று பெயர். பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்து, விஷ்ணு சகஸ்ரநாமத்தை இந்த உலகுக்கு வழங்கினார். எனவே, இந்த ஏகாதசி மிகவும் உயர்வானதாகக் கருதப்படுகிறது. இன்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யவேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம் ஒலிக்கும் இடங்களிலிருந்து பாவங்கள் விலகிஓடும். தினமும் வீட்டில் சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது அவசியம். இயலாதவர்கள், குறைந்தபட்சம் ஏகாதசி தினத்தன்று மட்டுமாவது விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் படிக்கவோ, கேட்கவோ வேண்டும். உத்தராயன புண்ணிய காலத்தில் வரும் இந்த ஏகாதசி தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால், இருளில் தவிக்கும் முன்னோர்கள் நற்கதி அடைவர் என்பது ஐதிகம். இதனால், முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும். வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிட்டும். எனவே, இந்த ஏகாதசி விரதத்தைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

8.2.2025 – சனி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் எடுப்புத்தேர்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டு தை மாத தெப்பத்திருவிழா கடந்த மாதம் 31ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் நான்கு சித்திரை வீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் அம்மன், சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. இன்று காலை எடுப்புத்தேர். நான்கு சித்திரை வீதிகளில் எழுத்தருளல் நடைபெறும். மாலை சப்தாவர்ணம். நாளை 9ம் தேதி தீர்த்தம், தெப்பமுட்டுத் தள்ளுதல் (தெப்பகுளம் முக்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருளல்) 10.02.2025 அன்று கதிர் அறுப்புத் திருவிழா (சிந்தாமணியில் எழுந்தருளல்) 11.02.2025 தெப்பத்திருவிழா (வண்டியூர் மாரியம்மன் தெப்பத்தில் எழுந்தருளல். முக்கிய விழாவான தெப்ப உற்சவத்தன்று அதிகாலையில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் சென்று தெப்பத்தில் காலையில் 2 முறையும், அன்றிரவு மின் அலங்காரத் தெப்பத்தில் எழுந்தருள்வர். பின்னர் 10 மணிக்குமேல் கோயிலுக்கு திரும்புகின்றனர். அத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது)

8.2.2025 – சனி கண்ணப்ப நாயனார் குருபூஜை

‘‘கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்’’ என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், ‘‘நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்’’ என பட்டினத்தாரும் கண்ணப்பரை குறிப்பிடுகின்றனர். திண்ணன் என்பது இவர் பெயர். வேடர் குலத்தில் பிறந்தவர், வேட்டை ஆடுவதில் சிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, காளத்தி மலையில் குடுமித்தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார். அந்த நாள் முதல் வாயில் நீர்சுமந்து வந்து அபிஷேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர்களாலும், இலைகளாலும் அர்ச்சனை செய்து, பக்குவப்பட்ட பன்றி இறைச்சியைப் படைத்தும் வந்தார். இதைக்கண்டு ஆகம விதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவகோசரியார் மனம் வருந்தினார். இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவ கோசரியாருக்கு உணர்த்த ஒரு நாடகம் நடத்தினார் ஈசன். திண்ணனார் வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான். கண்ணில் குருதி வடிவதைக் கண்டு திண்ணனார் அழுதார். இறைவனுக்கே இந்த நிலையா என்று தவித்தார். பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். ஆயினும் பலன் இல்லை.இதற்கு ஏதேனும் ஒரு வழி செய்தே தீர வேண்டும் என்று துடித்த அந்த துடிப்பில், தன் கண்ணை பறித்து லிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். லிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்றது. ஆனால், இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, “இது என்ன சோதனை?” என்று நினைத்த திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டார்.தன்னுடைய காலால், இறைவன் கண் உள்ள இடத்தை அடையாளப்படுத்திக் கொண்டு, தன் கையிலிருந்த அம்பால், தன் கண்ணை பறித்து, இறைவனுக்கு வைக்கத் துணிந்தார். ‘‘கண் கொடுத்த அப்பா, கண்ணப்பா,’’ என்று இறைவன் அழைத்து, “நில் கண்ணப்ப” என்று சொன்னார். அவருடைய வைராக்கியத்தையும் தியாகத்தையும் கண்டு சிவபெருமான் காட்சி தந்தார். கண்ணப்ப நாயனாரின் குருபூஜை தை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. அந்த தினம் இன்று.

9.2.2025 – ஞாயிறு அரிவாட்டாய நாயனார் குருபூஜை

சைவசமய நாயன்மார்கள் 63 பேர். அதில் ஒருவர் அரிவாட்டாய நாயனார். இவர் கணமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர். கணமங்கலம் தற்போது தண்டலைச்சேரி என்றழைக்கப்படுகிறது. இது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. இவருடைய இயற்பெயர் தாயனார் என்பதாகும். இவரும் இவர் மனைவியும் சிவபெருமானிடம் மாறாத சிவபக்தியில் திளைத்தவர்கள். அரிவாட்டாய நாயனார் தினசரி செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் வைத்து கணமங்கலத்தில் கோயில் கொண்டிருந்த நீள்நெறி நாதருக்கு அமுது செய்விப்பார். செல்வந்தரான அவருடைய பெருமையை உலகுக்குக் காட்ட எண்ணிய சிவபெருமான், அவருடைய செல்வத்தை நீக்கி வறுமையை உண்டாக்கினார். கூலிக்கு வேலை செய்தாலும், நெல் வயலில் கிடைத்த நெல்லைக் கொண்டு இறைவனுக்கு திருவமுது ஆக்கினார். ஒரு நாள் அவர் தன் வயலில் விளைந்த செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஒரு மண் கலயத்தில் சுமந்து சிவபெருமானுக்கு சமர்ப்பிக்கச் செல்லுகின்ற போது கீழே விழுந்து கலயம் உடைந்து, எல்லா உணவுகளும் சிந்தியதைக் கண்டு மனம் நொந்தார்.
“இனி சிவபெருமானுக்கு எப்படி அமுது செய்விப்பது? இன்றைய பூஜை வீணாயிற்றே? இனி உயிரோடு இருந்து என்ன பலன்?” என்று தம்மை மாய்த்துக் கொள்ள முயன்றார். அப்பொழுது சிவபெருமான் அவர் முன் தோன்றி தடுத்தாட்கொண்டு, அவருக்கு நற்பதம் அளித்தார். தன் கழுத்தை அரிவாள் பூட்டி அறுக்க முயன்ற காரணத்தால், அரிவாட்டாய நாயனார் என்ற திருநாமத்தைப் பெற்றார். தவறாது கடைபிடித்து வந்த சிவபாட்டிற்குரிய பொருட்களை தவற விட்டதால், தன் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்த அரிவாட்டாய நாயனாரை, சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்’ என்று வியக்கிறார். அவருடைய குருபூஜை நாள் தை மாதம் திருவாதிரை. அந்த நாள் இன்று.

10.2.2025 – திங்கள் பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கும்பாபிஷேகம்

பெண்ணாகடம் பிரளயகாலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலமாகும். தேவகன்னியரும் (பெண்) + காமதேனுப் பசுவும் (ஆ) + வெள்ளை யானையும் (கடம்) வழிபட்டதால் இத்தலத்திற்கு பெண் + ஆ + கடம் = பெண்ணாகடம் என்று பெயர் ஏற்பட்டது. ஆனால், அப்பெயர் காலபோக்கில் மறுவி தற்காலத்தில் பெண்ணாடம் என்று நிலையான பெயராகிவிட்டது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடத்தில் அமைந்துள்ளது. விருத்தாசலம் – திருச்சி நெடுஞ்சாலையில் மேற்கே 17 கி.மீ தொலைவில் வெள்ளாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. மெய்கண்டார் அவதரித்ததும் கலிக்கம்ப நாயனார் பேறு பெற்றதும் இத்தலத்தில்தான். தேவ கன்னியரும், காமதேனுவும், வெள்ளை யானையும் வழிபட்ட தலமென்பதும் அப்பர் சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலமென்பதும் ஐதிகம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து உயிர்களையும் உடைமைகளையும் அழித்து வந்தது. ஆனால், வெள்ளாற்றிற்கும், தென்பெண்ணை ஆற்றிற்கும் இடைப்பட்ட நடுநாட்டில் மட்டும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதற்கு, அங்குள்ள இறைவனே காரணம் என்பதை தேவர்களும், முனிவர்களும் உணர்ந்தனர். அத்தல இறைவனிடம் மக்களைக் காத்தருள வேண்டி நின்றனர். அதற்குச் செவிசாய்த்த இறைவன், பிரளயத்தை தடுக்குமாறு நந்திதேவருக்கு ஆணையிட்டார். நந்திதேவர் ஊழி வெள்ளத்தைத் தன் வாயால் உறிஞ்சி உலகைக் காத்தருளினார். எனவே இத்தல இறைவன் ‘பிரளயகாலேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் ஆமோ தனாம்பாள். இக்கோயிலின் மூலவர் இருக்கும் கருவறை தூங்கானை மாடம் (வடமொழில் கஜபிருஷடம்) வடிவில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் தமது திருமேனியில் திரிசூலக் குறியும் இடப முத்திரையும் பெற்ற தலமிது. இத்தலத்து மூலவரை முன் வாயில் மூலம் மட்டுமல்லாமல் மற்ற மூன்று புறத்திலிருந்தும் பக்தர்கள் வணங்குவதற்காக பலகணிகள் உள்ளன. கிழக்கு நோக்கிய பிரதோஷ நந்திதேவர் காட்சிதர, பிரளயகாலேஸ்வரர் சந்நதி அமைந்துள்ளது. இவர் எண்பட்டை வடிவில் சதுர வடிவ ஆவுடையாரில், பிரம்மாண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார். இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது.

10.2.2025 – திங்கள் திருக்குறுங்குடி கோயில் குடமுழுக்கு

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோயில், திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், வள்ளியூர், நாங்குனேரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக சொல்வர். திருவாலித் திருநகரியில் அவதரித்து தலங்கள் பல சென்று பரந்தாமனைப பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்துதான் திருநாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் (முக்தியடைந்தார்). அவருடைய திருவரசு இங்கு உள்ளது. ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு உபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும். சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோயிலில் சிவனுக்கென்று தனிச் சந்நதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர். இக்கோயிலுள் நடராஜர், சிவகாமி, சோமாஸ்கந்தர், சுப்ரமணியர், பிள்ளையார் ஆகிய எல்லோரும் செப்புச்சிலை வடிவில் எழுந்தருளியிருக்கின்றனர். மகேந்திரகிரிநாதருக்குப் பக்கத்திலேயே கால பைரவருக்குத் தனிச் சந்நதி இருக்கிறது. இந்த குறுங்குடி நம்பியை நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர். இத்தனைச் சிறப்பு பெற்ற இந்த ஆலயத்தில் இன்று காலை 9.27க்கு மேல் 10.57 மணிக்குள் மீன லக்கினத்தில் ஜீர்ணோத் தாரண மகாஸம்ப்ரோக்ஷணம் (குடமுழுக்கு) நடைபெறுகிறது.

10.2.2025 – திங்கள் மாம்பலம் கோதண்டராமர் தெப்பம்

150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோயில் மாம்பலம் கோதண்டராமர் கோயில். இங்கு ஒரு தெப்பமும் உள்ளது. சென்னை மாம்பலம் ரெயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ½ கிலோமீட்டர் தொலைவிலும், மேட்லி ரோடு சுரங்கப் பாதைக்கு அருகாமையிலும் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோதண்டராமர் திருக்கோயிலில் இன்று முதல் ஐந்து நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

விஷ்ணுபிரியா

9.2.2025 – ஞாயிறு – ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் விழா ஆரம்பம்.
10.2.2025 – திங்கள் – மகா பிரதோஷம்.
10.2.2025 – திங்கள் – எம்பார் திருநட்சத்திரம் சாற்றுமுறை.
11.2.2025 – செவ்வாய் – தைப் பூசம், பௌர்ணமி.
12.2.2025 – புதன் – திரிபுரசுந்தரி ஜெயந்தி.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Sani Bishma Ekadasi ,Ekadashi ,Valarpirai Theipirai ,
× RELATED கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் பலி...