வாஷிங்டன்: சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் தங்களது நிலைப்பாட்டை கூறியிருந்த நிலையில், இந்தியா எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஏற்று கொண்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைதிகளை போல் கை, கால்களில் விலங்கிட்டு அந்தந்த நாடுகளுக்கு நாடு கடத்தி வருகிறார். இதற்கு பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மெக்சிகோ
டிரம்பின் நாடு கடத்தல் நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என விமர்சித்துள்ளது. பிராந்திய ஸ்திரத்தன்மை பற்றி கவலை எழுப்புவதாக கூறி, அமெரிக்க ராணுவ விமானம் தனது நாட்டில் தரையிறங்க அனுமதி மறுத்துள்ளது. அத்துடன் கைவிலங்குகள் மற்றும் ராணுவ விமானங்களை பயன்படுத்துவதற்கும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
கொலம்பியா
சிறிய நாடான கொலம்பியாவும் ராணுவ விமானத்தில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் 25% வரி விதிப்பேன் என்று டிரம்ப் அச்சுறுத்தியதும் அழுத்தத்திற்கு பணிந்த கொலம்பியா அமெரிக்க ராணுவ விமானங்கள் தரையிறங்க அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் சட்டவிரோத குடியேறிகளை டிரம்ப் குற்றவாளியாக்குவதையும் கொலம்பியா கண்டித்துள்ளது.
பிரேசில்
டிரம்பின் நாடு கடத்தல் நடவடிக்கை மனித உரிமைகளை மீறும் வகையில் இருப்பதாக பிரேசில் பகிரங்கமாக விமர்சித்துள்ளது.
ஹோண்டுராஸ்
அமெரிக்காவின் இந்த கொள்கை குறித்து விவாதிப்பதற்கு ஹோண்டுராஸ் நாடு பிராந்திய உச்சி மாநாட்டிற்கு அவசர அழைப்பு விடுத்தது. ஆனால் மாநாட்டில் பங்கேற்க கொலம்பியா அதிபர் மட்டுமே முன்வந்தால் லதின் அமெரிக்கா மற்றும் கரோபிய நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டை கடந்த வாரம் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
கவுதமாலா
அமெரிக்காவின் மிக அருகே உள்ள கவுதமாலாவும் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கையை ஒப்பு கொண்டாலும், அவர்களை மனிதாபிமான அடிப்படையில் நடத்த வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
இந்தியா
இந்த வரிசையில் அமெரிக்காவின் நாடு கடத்தல் நடவடிக்கைக்கு இந்தியா எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்காமல் ஏற்று கொண்டுள்ளது. குடியேறிகளை அந்நாட்டு சட்டப்படியே கை, கால்களை விலங்கிட்டு ராணுவ விமானத்தில் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளதாகவும் இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
The post சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தி வரும் அமெரிக்கா: அதிபர் டிரம்பின் நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.