கிரகங்களே தெய்வங்களாக
ஜோதிடத்தில் ஒன்பதாம் பாவகம் என்பது தெய்வீகத்தையும் பக்தியையும் குறிப்பதாகும். நாம் தெய்வீகத்தை வழிபட நமது வெற்றியானது இயக்கப்படும் என்பது ஜோதிடத்தின் சூட்சுமம். ஆகவே, பெரியோர்களும் முன்னோர்களும் தெய்வீக நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு வழி என பலருக்கும் உணர்த்தியுள்ளனர். நமக்கு பல நம்பிக்கைகள் இருந்தாலும் இறை நம்பிக்கை நம்மை கரை சேர்க்கும் நிச்சயம் உண்மை.இறையைப் பற்றி குறிப்பிடும் தருணத்தில் திருவாலங்காடு வட ஆரண்யேஸ்வரர் கோயிலைப் பற்றி அறிவோம். இந்த தலம் தேவாரப் பாடல் பெற்றது. நிசும்பன், அசும்பன் என்ற இருவர் ஆலமரங்களாக இருந்து மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் துன்பம் விளைவித்தனர்.
இதனை பார்வதி தேவியிடம் முறையிட்டனர். பார்வதிதேவி தனது திருஷ்டியால் காளியை ஆலங்காட்டில் ஆவாகனம் செய்து அரக்கர்களை அழித்து அவர்களின் ரத்தத்தை பருகினாள். இதனால், அந்த அரக்கர்களின் குணம் இவளுக்கும் வந்தது. இந்த காளியின் கோரச் செயலை மூஞ்சிகேச கார்கோடக முனிவர் சிவனிடம் பிரார்த்தனை செய்து முறையிட்டார். சிவபெருமானும் கோர வடிவத்துடன் ஆலங்காட்டை அடைந்தார்.அவரைக் கண்ட காளி நீ என்னுடன் நடனமாடி வெற்றி பெற்றால் இந்த ஆலங்காடு உன் வசமாகி ஆளலாம் என்றாள். சிவ பெருமானும் காளியும் தாண்டவம் ஆடினர். அச்சமயம், தன் காதின் ஆபரணம் கீழே விழ வைத்து அதனை ஆடிக்கொண்டே தன் இடக்கால் பெருவிரலால் காதில் பொருத்தவே காளி அதிசயித்து இது என்னால் இயலாது என ஒப்புக் கொள்ளவே.
காளியின் முன் சிவபெருமான் தோன்றி என்னையன்றி உனக்கு சமமானவர்கள் யாரும் இல்லை காட்சி கொடுத்தார். ஆகவே, இங்கு காளியை வழிபட்டு பின்பு சிவபெருமானை வழிபட்டால் முழுப்பலன் கிட்டும் என்பது ஐதீகம்.இத்தலம் நடராஜரின் ஐந்து சபைகளில் இது ரத்தின சபையாக உள்ளது. இத் திருத்தலத்தில்தான் காரைக்கால் அம்மையார் தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியில் கீழிருந்து நடராஜரின் நடனத்தில் திளைத்திருக்கும் திருத்தலம். இத்தலம் அம்மனின் சக்திப் பீடங்களில் ஒன்றாகும் இது காளி பீடமாகும்.
இத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் தெய்வங்களின் நாமங்களுக்கு சூரியன், சனி, புதன், ராகு ஆகியவை நாமாகரணம் செய்துள்ளது.
ரிஷபம் மற்றும் விருச்சிகத்தில் சூரியன் அல்லது சந்திரனோடு ராகு – கேது இணைவு இருந்தால் சர்ப்ப சாந்தி செய்தால் சர்ப்ப தோஷம் விலகும். கிரகண தோஷத்தன்று இங்கு வழிபாடு செய்தால் கிரகண தோஷம் விலகும்.
ரிஷபத்திற்கு 2ம் பாவகத்திலும் 4ம் பாவகத்திலும் செவ்வாயுடன் – ராகு/கேது தொடர்பிருந்தால் அந்த தோஷத்தை அதிகப்படுத்தும். ஆகவே, நவமி திதி அன்று அல்லது மிருகசீரிஷ நட்சத்திரம் அன்று சுவாமிக்கு அறுகம்புல் நீரினால் அபிஷேகம் செய்து சிவப்புப் பட்டு வஸ்திரம் கொடுத்து சுவாமியை வழிபட்டால் தொலைந்த பொருள் திரும்ப கிடைக்கும். திருமணம் விரைவில் கைகூடும்.
புனர்பூசம் நட்சத்திரத்தன்று பசுவின் நெய்யினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
சுவாமிக்கு சிவப்பு வஸ்திரமும் பச்சை வஸ்திரமும் கொடுத்து வழிபட்டால் பூர்வீக நிலப்பிரச்னை மற்றும் நீதிமன்றத் தொடர்பான பிரச்னைகள் இருந்தால் நல்ல தீர்வுகள் உண்டாகும்.
ராகுவின் கேடு பலன்களில் இருந்து விடுபட இக்கோயிலில் கோதுமையில் செய்த பிஸ்கட் அல்லது சப்பாத்தியை சுற்றித் திரியும் நாய் போன்ற பிராணிகளுக்கு கொடுத்தால் சர்ப்ப தோஷங்களில் தீர்வுகள் கிடைக்கும். இத்தலம் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.
ஜோதிட ஆய்வாளர் திருநாவுக்கரசு
The post திருவாலங்காடு வட ஆரண்யேஸ்வரர் கோயில் appeared first on Dinakaran.