மும்பை : வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டது. கொரோனா தாக்கத்தையொட்டி கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டு 4% ஆக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்ட ரெப்போ வட்டி விகிதம் 2023 பிப்ரவரியில் 6.5% ஆக அதிகரித்துள்ளது. அதன் பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக அண்மையில் பதவியேற்ற சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில், நிதி கொள்கை கூட்டம் கடந்த 5ம் தேதி முதல் இன்று வரை நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் அறிவிப்புகளை வெளியிட்டார் சஞ்சய் மல்ஹோத்ரா.
அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.25%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார். இந்திய ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்ற பிறகு முதல் முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.கடந்த 11 முறை மாற்றம் செய்யப்படாத நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் கால் சதவீதம் குறைப்பால் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. 2026ம் ஆண்டிற்கான பணவீக்கம் 4.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் காலாண்டில் 4.5%, இரண்டாவது காலாண்டில் 4% மற்றும் மூன்றாவது காலாண்டில் 3.8% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கை 6.6% லிருந்து 6.7% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
The post 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.25% ஆக குறைப்பு : ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!! appeared first on Dinakaran.