×

தியாகதுருகம் அடுத்த சூளாங்குறிச்சி மணிமுத்தா அணையில் பழைய கதவணைகளை சீரமைக்க முடிவு: ஆட்சியர் நேரில் ஆய்வு

தியாகதுருகம், பிப். 7: தியாகதுருகம் அடுத்த சூளாங்குறிச்சி மணிமுத்தா அணையின் பயன்பாடற்ற நிலையில் உள்ள நீர் போக்கி கதவுகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த சூளாங்குறிச்சியில் மணிமுத்தா அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் சுமார் 4,250 ஏக்கர் புதிய பாசன நிலங்களும் 1,243 ஏக்கர் பழைய பாசன நிலங்களும் பயனடைந்து வருகின்றன. இதன் மூலம் சுமார் 11 கிராமங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணை முழு கொள்ளளவு எட்டியதும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த அணையில் மிக நீர் போக்கி கதவணை எண்கள் 1, 2, 3 கதவுகள் மூலம் பழைய பாசன வாய்க்கால்கள் மற்றும் வெள்ளக் காலங்களில் அணையில் நிரம்பும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது இந்த மூன்று பழைய நீர் போக்கி கதவுகளும் பழுதடைந்து உள்ளது. இதே நிலை நீடித்தால் நீர் போக்கி கதவுகள் வழியே தொடர்ந்து தண்ணீர் கசிவு ஏற்படுவதோடு வரும் காலங்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே இந்த பழுதடைந்த கதவணைகளை மீண்டும் சீரமைத்து முழு பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து மணிமுத்தா அணையில் பயன்பாடற்ற நிலையில் உள்ள பழைய கதவணைகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கூறுகையில், ‘பருவ மழைக்காலங்களில் பழுது ஏற்படுவதை தடுக்கவும், அணையின் நீர்மட்டத்தை சீராக பராமரித்து சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டத்தை குறையாமல் பாதுகாக்கவும், பழுதடைந்த மூன்று பழைய கதவுகளையும் மாற்றிட உரிய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தார். மேலும் திட்ட அனுமதி பெற்று மழைக்காலங்களில் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைத்து பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கும் புதிய சட்டங்களை அமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மோகன், துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post தியாகதுருகம் அடுத்த சூளாங்குறிச்சி மணிமுத்தா அணையில் பழைய கதவணைகளை சீரமைக்க முடிவு: ஆட்சியர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Choolankurichi Manimutha Dam ,Thiagadurugam ,Kallakurichi ,District ,Collector ,Prashanth ,Manimutha Dam ,Choolankurichi ,Kallakurichi district ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சியில் பைக் மீது டிப்பர் லாரி மோதி கணவன் கண்ணெதிரே மனைவி பலி