தேனி, பிப். 7: பெரியகுளம் அருகே கீழ வடகரை ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் புரத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன்கடையை திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பெரியகுளம் அருகே கீழ வடகரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியாக பெருமாள்புரம், கரட்டூர் ஆகிய பகுதிகள் உள்ளன. இதில் கரட்டூர் பகுதிக்கான ரேஷன்கடை தற்போது சமுதாய கூட கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. ரேஷன் கடைக்கான புதிய கட்டிடம் கரட்டூரில் பெருமாள்புரத்தில் இருந்து கும்பக்கரை அருவி செல்லும் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இக்கட்டிடம் கட்டி முடித்து நீண்ட நாட்கள் ஆகியும் இன்னமும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இக்கட்டிட வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது. இப்புதிய கட்டிடத்தில் செயல்பட வேண்டிய ரேஷன் கடையானது தற்போது சமுதாயக் கூடத்தில் செயல்பட்டு வருவதால் இப்பகுதி மக்கள் தங்களுக்கான சிறிய விழாக்களை குறைந்த கட்டணத்தில் சமுதாயக் கூடத்தில் நடத்த முடியாத அவலம் தொடர்ந்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம், கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள ரேஷன்கடை கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post பெரியகுளத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன்கடையை திறக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.