குன்னூர், பிப்.7: குன்னூரில் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் காட்டு மாடு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டத்தில் 40க்கும் மேற்பட்டோர் கிராம உதவியாளராக பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு நேற்று முன்தினம் மாலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுமாடு ஒன்று போராட்டம் நடைபெற்ற கூட்டத்திற்குள் திடீரென புகுந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளர்களை முட்ட பாய்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 15 நிமிடங்கள் அங்கும் இங்கும் உலாவிய காட்டுமாடு, அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின், காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
The post காத்திருப்பு போராட்ட கூட்டத்தில் காட்டு மாடு புகுந்ததால் பரபரப்பு: கிராம உதவியாளர்கள் அலறி அடித்து ஓட்டம் appeared first on Dinakaran.