×

தமிழக முதல்வர் உத்தரவிட்டதையடுத்து பொலிவுபெறும் மூவர் மணி மண்டப வளாகம்

திருச்சி, பிப்.7: தமிழக முதல்வர் உத்தரவிட்டயைடுத்து, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மூவர் மணி மண்டப வளாகம் புல்தடை வசதிகளுடன் பொலிவு பெறுகிறது. இப்பணிகளை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு செய்தார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மணிமண்டபங்கள், பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக கிடங்கு மற்றும் குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று நோில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கடந்த பிப்.2 ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்தபோது, மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மணிமண்டபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகளை காட்சி படுத்திடவும், மண்டப வளாகத்தில் செயற்கை நீருற்று, பூச்செடிகள், புல்தரை அமைத்து அழகுபடுத்தவும் அறிவுறுத்தினார். அதனை தொடா்ந்து மணிமண்டபத்தை அழகுபடுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அப்பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேற்று நோில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக, திருச்சி பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை நோில் பார்வையிட்டு தற்போது வரை முடிக்கப்பட்டுள்ள பணிகளின் விபரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு மீதமுள்ள பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினார். தொடா்ந்து, திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் கலைஞா் நூற்றாண்டு விழா நூலகம் அமையவுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு அமைந்துள்ள இடத்தினை நோில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து விரைவாக அங்கு உள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னா், குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணி வேலைகள் மற்றும் திருக்குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகளை நோில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மீதமுள்ள பணிகளை விரைவாக மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையா் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், திருச்சி வருவாய் கோட்டாட்சியா் அருள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (கட்டிடம்) அன்பரசி, உதவி செயற்பொறியாளா்கள் வெங்கடேசன், தேவேந்திரன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளா் சிற்றரசு, குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலா் அருண்பாண்டியன், மாநகராட்சி அலுவலர்கள், அரசு துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.

The post தமிழக முதல்வர் உத்தரவிட்டதையடுத்து பொலிவுபெறும் மூவர் மணி மண்டப வளாகம் appeared first on Dinakaran.

Tags : Muvar Mani Mandapa complex ,Tamil Nadu ,Chief Minister ,Trichy ,Trichy Central Bus Stand ,Muvar Mani Mandapa ,Dinakaran ,
× RELATED இருமொழி கொள்கை நமது உயிர் கொள்கை. இது...