திருப்பூர்: திருப்பூரிலிருந்து நேற்று காலை கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ், புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் மாடசாமி ஓட்டிச்சென்றார். பெருமாநல்லூர் அடுத்த பல்லகவுண்டம்பாளையம் சாம்ராஜ்பாளையம் பிரிவு பகுதியில் முன்னே சென்ற லாரியை, பஸ் டிரைவர் முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சிறிய பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
இதில் ஈரோடு தனியார் கல்லூரி பி.காம் (சிஎஸ்) முதலாமாண்டு பயிலும் திருப்பூர் விருமாண்டபாளையத்தை சேர்ந்த பெரியசாமி (19), அதே கல்லூரியில் முதலாமாண்டு பி.எஸ்.சி (சிஎஸ்) பயிலும் சுண்டாக்காம்பாளையத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து ஊத்துக்குளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து கிரேன் உதவியுடன் பஸ்சை மீட்டனர். காயமடைந்த 34 பேரை மீட்டு பெருந்துறை அரசு மற்றும் பள்ளகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.இந்த விபத்து காரணமாக கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
* தலா ரூ.3 லட்சம் நிதி :முதல்வர் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பூரில் இருந்து நேற்று காலை 8.45 மணியளவில் ஈரோடு சென்று கொண்டிருந்த தனியார் பஸ் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியை கடந்துசெல்ல முயன்றபோது கவிழ்ந்து கல்லூரி மாணவர்கள் பெரியசாமி, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, தலா ரூ.3 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
The post தனியார் பஸ் கவிழ்ந்து 2 மாணவர்கள் பலி: 34 பேர் படுகாயம் appeared first on Dinakaran.