×

செல்போன் பறித்த 5 வாலிபர்கள் அதிரடி கைது திருவண்ணாமலையில் வழிப்பறியில் ஈடுபட்டு

திருவண்ணாமலை, பிப்.7: திருவண்ணாமலை பகுதியில் வழிப்பறி மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்டதாக 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, செல்போன்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை பகுதியில் டவுன் ஏஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில், தாலுகா போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருவண்ணாமலை -வேலூர் சாலை பகுதியில் சந்தேகத்திற்குரிய 5 நபர்கள் பைக்கில் சென்றனர். வாகன தணிக்கைக்காக போலீசார் தடுத்து நிறுத்தியும் அவர்கள் நிற்கவில்லை.

எனவே, சந்தேகம் அடைந்த போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டு செல்போன்களை அபகரித்ததும், பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 5 பைக், மற்றும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, திருவண்ணாமலை செட்டிக்குளம் மேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் மகன் குகனேஸ்வரன் (21), ஜெய்பீம் நகர் சின்னத்தம்பி மகன் திருமலை (19), வேங்கிக்கால் பகுதி கந்தன் மகன் விஷ்ணு (20), திருவண்ணாமலை அம்பேத்கர் தெரு முருகன் மகன் தளபதி (21), திருவண்ணாமலை பேகோபுரம் 8வது தெருவை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மகன் கலையரசன் (24) ஆகியோரை கைது செய்தனர். பின்னர், திருவண்ணாமலை ஜேஎம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post செல்போன் பறித்த 5 வாலிபர்கள் அதிரடி கைது திருவண்ணாமலையில் வழிப்பறியில் ஈடுபட்டு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Town ,ASP ,Sathishkumar ,
× RELATED கஞ்சா விற்ற அதிமுக பிரமுகர் அதிரடி கைது