×

வியாசர்பாடியில் உள்ள ரவீஸ்வரர் கோயில் இட ஆக்கிரமிப்பு அகற்றம்: போலீசார் பாதுகாப்புடன் நடவடிக்கை

பெரம்பூர்: வியாசர்பாடி பகுதியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடம் வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவில் சுமார் 22 கிரவுண்ட் இடம் உள்ளது. இதனை பல்வேறு தரப்பினர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2022ம் ஆண்டு சுமார் 18 கிரவுண்ட் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு இடம் மீட்கப்பட்டது. அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணிகளும் மேலும் மீதி உள்ள இடத்தை மீட்கும் பணிகளும் தற்போது நடந்து வருகின்றன. மீண்டும் அந்த இடத்தில் சிலர் ஆக்கிரமிப்புகளை வைத்து தொடர்ந்து கோயில் நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலின் இடத்தை கோயில் பணியாளர்கள் மீட்கும்போது கோயில் பணியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் என்ற நபரை கைது செய்தனர். இந்நிலையில் மொத்தம் உள்ள 22 கிரவுண்ட் இடத்தில் 18 கிரவுண்ட் இடங்கள் கோயில் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள இடத்தை நேற்று முன்தினம் கோயில் நிர்வாகத்தினர் போலீஸ் பாதுகாப்புடன் மீட்க தொடங்கினர்.

இதில் 2 கிரவுண்ட் இடத்தில் போடப்பட்டிருந்த ஷீட் உள்ளிட்டவற்றை பொக்லைன் இந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினர். நேற்று முன்தினம் சுமார் ஒரு கிரவுண்ட் இடம் மீட்கப்பட்டது. மீதமுள்ள இடம் விரைவில் மீட்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்து சமய அறநிலைய துறை சென்னை மண்டலம் ஒன்று தாசில்தார் திருவேங்கடம், நில அளவையர் புருஷோத்தமன், கோயில் செயல் அலுவலர் ஆட்சி சிவப்பிரகாசம், மேலாளர் தனசேகர் மற்றும் வியாசர்பாடி போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது உடனிருந்தனர்.

The post வியாசர்பாடியில் உள்ள ரவீஸ்வரர் கோயில் இட ஆக்கிரமிப்பு அகற்றம்: போலீசார் பாதுகாப்புடன் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Raveeswarar temple ,Vyasarpadi ,Perambur ,Vyasarpadi Balakrishnan Street ,
× RELATED தலித்துகள் மீது வன்முறை கண்டித்து ஆர்ப்பாட்டம்