சென்னை: பணி மாறுதல் தொடர்பாக பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ராஜரத்தினம் மைதானத்தில் காவலரின் காலை உடைத்த விவகாரத்தில், ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு காவலர்கள் 3 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பணி மாறுதல் தொடர்பாக பணம் வாங்கல் மற்றும் கொடுக்கல் தகராறில் திருவல்லிக்கேணி காவல் நிலைய ரோந்து வாகன டிரைவரான காவலர் ரங்கநாதன் (39) மற்றும் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் டிரைவராக பணியாற்றி வரும் ஆனந்த் (33), சுந்தர்ராஜன் (38), மணிபாபு (30) ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது, சக காவலர்கள் முன்பு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் திருவல்லிக்கேணி காவல் நிலைய ரோந்து வாகன டிரைவர் ரங்கநாதனை 3 காவலர்கள் சரமாரியாக தாக்கியதால் அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுதொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் படி போலீசார், சக ஆயுதப்படை காவலர்களான ஆனந்த், சுந்தர்ராஜன், மணிபாபு ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
அதேநேரம் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 3 காவலர்களிடமும், ஆயுதப்படை துணை கமிஷனர் (மோட்டார் வாகன பிரிவு) ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.
அப்போது ரோந்து வாகன டிரைவர் ரங்கநாதனை ராஜரத்தினம் மைதானத்திற்கு வரவழைத்து அவரை தாக்கியது உறுதியானது. அதைதொடர்ந்து ஆயுதப்படை துணை கமிஷனர் அளித்த அறிக்கையின் படி, ஆயுதப்படையில் வாகன டிரைவர்களாக பணியாற்றி வரும் ஆனந்த், சுந்தர்ராஜன், மணிபாபு ஆகியோரை உயர் அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். மேலும், சக காவலரின் காலை உடைத்த வழக்கில் எழும்பூர் போலீசார், 3 ஆயுதப்படை காவலர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
The post ராஜரத்தினம் மைதானத்தில் சக காவலரின் காலை உடைத்த விவகாரம் ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் சஸ்பெண்ட்: விசாரணைக்கு பிறகு கைது appeared first on Dinakaran.