இந்த நிலையில் முதற்கட்டமாக சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்களை ஏற்றி வந்த அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதில் அரியானா மற்றும் குஜராத்தில் இருந்து தலா 33 பேர், பஞ்சாபில் இருந்து 30 பேர், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து தலா 3 பேர், சண்டிகரில் இருந்து இருவர் இருந்தனர். அவர்களில் பெண்கள், குழந்தைகள் தவிர மற்றவர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு இருந்தது.
அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பிறகு தான் தங்கள் கைகள், கால்களில் இருந்து விலங்குகள் அகற்றப்பட்டதாக நாடு கடத்தப்பட்டவர்கள் தெரிவித்தது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் நாடாளுமன்றத்திலும் நேற்று இந்த பிரச்னை எதிரொலித்தது. இந்த பிரச்னை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அவைத்தலைவர் ஓம்பிர்லா கேள்வி நேரத்தை தொடங்கி திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கீர்த்தி ஆசாத்தை கேள்வி கேட்க அழைத்தார்.
இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களை சமாதானப்படுத்த சபாநாயகர் ஓம்பிர்லா முயன்றார். அவர் கூறுகையில்,’ பிரச்சினை தீவிரமானது. வெளியுறவுக் கொள்கை விவகாரம். அரசு அதை சீரியஸாக எடுத்துள்ளது. வெளிநாட்டிற்கும் சொந்த விதிமுறைகள் உள்ளன. மதியம் 12 மணிக்கு உங்கள் பிரச்சினைகளை எழுப்பலாம். தற்போது கேள்வி நேரத்தை சுமூகமாக நடத்த அனுமதிக்க வேண்டும். ஏனெனில் கேள்வி நேரம் முக்கியமானது.
மக்கள் தங்கள் பிரச்சினைகளை சபையில் எழுப்ப உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் நீங்கள் போராட்டங்களை நாடுகிறீர்கள், இந்த முறை நல்லதல்ல. உங்கள் கூட்டணி கட்சி உறுப்பினர் தான் முதலில் பேச உள்ளார். ஆனால் அவர் பேசுவதற்கு கூட நீங்கள் அனுமதிக்கவில்லை. திட்டமிட்டு அவையை சீர்குலைக்கிறீர்கள். இது நல்லதல்ல’ என்றார். இருப்பினும் அமளி தொடர்ந்ததால் முதற்கட்டமாக அவை நண்பகல் 12 மணி ஒத்திவைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து மதியம் 2 மணி வரையும், பிற்பகல் 3.30 மணி வரையும் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. அப்போது இந்தியர்களை கைவிலங்குடன் நாடு கடத்திய விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாலை 3.30 மணிக்கு அவையில் அறிக்கை வெளியிடுவார் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சபையில் தெரிவித்தார். மக்களவை மீண்டும் கூடியதும், நாடு கடத்தல் விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை வெளியிட்டார்.
அதை ஏற்காமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். ஜெய்சங்கர் கூறுகையில்,’ நாடுகடத்தப்பட்டவர்கள் விமானத்தில் எந்த வகையிலும் தவறாக நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அதே நேரத்தில், சட்டப்பூர்வ பயணிகளுக்கான விசாவை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்போது, சட்டவிரோத இடம்பெயர்வுத் தொழிலுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்கப்படும்.
இருப்பினும் நாடு கடத்துவது புதிதல்ல, இது கடந்த காலத்திலும் நடந்துள்ளது’ என்றார். ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பியதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இதே பிரச்னை எதிரொலித்தது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், திரிணாமுல், ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் விதி 267ன் கீழ் நோட்டீஸ் அளித்தனர். இந்த நோட்டீசுகளை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் நிராகரித்தார்.
இதனால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு அவை கூடியதும் அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ெஜய்சங்கர் அவையில் விளக்கம் அளித்தார். அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார்.
* எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விதம் குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:
* மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ் தலைவர்): இந்தியா கூட்டணியான நாங்கள், இந்திய நாட்டினரை அவமானப்படுத்துவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்.நாடு கடத்தப்பட்டது குறித்து விரிவான அறிக்கையை மோடி அரசு வெளியிட வேண்டும். ராணுவ விமானம் நம் மண்ணில் தரையிறங்குவதற்குப் பதிலாக, இந்தியர்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் அழைத்து வர, சொந்த விமானத்தை ஏன் அனுப்பவில்லை.
* அகிலேஷ்யாதவ் (சமாஜ்வாடி தலைவர்): இந்தியர்கள் மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் திருப்பி அனுப்பப்படுவது பற்றிய கேள்வி மட்டுமல்ல. இந்தியா விஸ்வகுருவாகப் போகிறது என்று மக்களுக்கு ஒரு கனவைக் காட்டினார்கள். இப்போது அவர்கள் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். எங்கள் வெளியுறவு அமைச்சகம் என்ன செய்கிறது? மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படும் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற அரசாங்கம் எதையும் செய்யவில்லை. இந்த மக்கள் ஏன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது? இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
* பிரியங்கா சதுர்வேதி (சிவசேனா யுபிடி): நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட விதம் வெட்கக்கேடானது. இது இந்தியாவுக்கே அவமானம். அந்த சட்டவிரோத குடியேறிகள் குற்றவாளிகள் அல்ல.வாய்ப்புகளை வழங்கத் தவறியதால் அவர்கள் நல்ல வாழ்க்கைக்காக அங்கு சென்றனர். தோல்வியுற்ற வெளிநாட்டு உறவுகள் மற்றும் கொள்கைகளால் அவர்கள் திரும்பி வருகிறார்கள். இதை ஏற்க முடியாது, பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர், வெளிவிவகார அமைச்சர் என அனைவரும் பதில் சொல்ல வேண்டும். உங்களின் கொள்கைகளால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
* கவுரவ் கோகாய் (காங்கிரஸ் எம்பி): பெண்கள் நடத்தப்பட்ட விதம் மற்றும் குற்றவாளிகளைப் போல கையை கட்டிக்கொண்டு திரும்ப அழைத்து வரப்பட்ட விதம், அதன் மூலம் நாட்டை அவமதிப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பிரதமர் மோடிக்கு, நமது நாட்டின் நிலைப்பாட்டை விட, அவரது தனிப்பட்ட பெருமையே முக்கியம். இது ஒரு கறுப்பு நாள். ஆனால் பிரதமர் அமைதியாக இருக்கிறார்.
* திரிணாமுல் எம்பி கீர்த்தி ஆசாத்: இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்ட விதம் வேதனைக்குரியது.
* சசிதரூர் (காங்.எம்பி): இந்திய குடிமக்களை கைகளில் விலங்கிட்டு நாடு கடத்திய டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை நாட்டுக்கான அவமானம். இது இந்தியர்களின் கண்ணியத்துக்கான அவமானம்.
* சிறிய நாடுகளுக்கு இருக்கும் தைரியம் மோடிக்கு இல்லையா?
இந்தியர்களை நாடு கடத்திய விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது மார்க்சிஸ்ட் மாநிலங்களவை எம்பி ஜான் பிரிட்டாஸ் கூறுகையில்,’ டிரம்ப் நிர்வாகத்தின் மனிதாபிமானமற்ற அணுகுமுறையை எதிர்த்துப் போராட மோடி அரசுக்கு தைரியம் இல்லை.
சிறிய நாடுகளுக்கு கூட டிரம்ப் அரசாங்கத்தை எதிர்த்து நிற்க தைரியம் இருந்தது, ஆனால் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அழுத்தத்தில் உள்ளது. நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் போல் பேசினார். இந்த அரசாங்கத்திற்கு அமெரிக்கா போபியா, டிரம்ப் போபியா உள்ளது. அவர்கள் அமெரிக்காவுக்காக பேசுகிறார்கள், எங்களுக்காக அல்ல. இது மிகவும் தீவிரமான கவலையை எழுப்புகிறது’ என்றார்.
* கைதிகளை வேனில் ஏற்றியது ஏன்? பஞ்சாப் முதல்வர் கண்டனம்
பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் கூறுகையில்,’அமெரிக்கா செய்ததற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். எங்கள் குடிமக்களை கைவிலங்கு மற்றும் சங்கிலியால் கட்டி திருப்பி அனுப்புவது நம் நாட்டிற்கு மிகவும் அவமானகரமான விஷயம். அமெரிக்காவில் இருந்து மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சிதைந்த நிலையில் வந்த இந்தியர்களின் காயங்களை ஆற்றுவதற்குப் பதிலாக, மோடி தலைமையின் கீழ் அரியானா அரசு, அவர்களை காவல் கைதிகளின் வேன்களில் ஏற்றி அழைத்துச் சென்றது, அவர்களின் காயங்களில் உப்புத் தேய்ப்பதற்கு சமம்’ என்றார்.
* டெல்லியில் ஏன் தரையிறங்கவில்லை?
பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவரும், மாநில அமைச்சருமான அமன் அரோரா கூறுகையில்,’ ஒவ்வொரு பிரச்னையிலும் பஞ்சாபை மாற்றாந்தாய் மனப்பான்மையில் ஒன்றிய அரசு நடத்துகிறது. பஞ்சாபை விட மற்ற மாநிலங்களில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் அதிகம். ஆனால் விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. அவர்கள் இங்கு வருவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் டெல்லியில் ஏன் தரையிறங்கவில்லை’ என்று கேள்வி எழுப்பினார்.
* எங்கள் சட்டம் எங்களுக்கு முக்கியம் அமெரிக்கா விளக்கம்
இந்தியர்கள் கைவிலங்கிட்டு நாடு கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று விளக்கம் அளித்தது. அதில் கூறியிருப்பதாவது: எங்கள் நாட்டின் குடியேற்றச் சட்டங்களை அமல்படுத்துவது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது. அனைத்து வகையிலும் அனுமதிக்க முடியாத மற்றும் வெளியேற்றக்கூடிய வெளிநாட்டினர் மீது குடியேற்ற சட்டங்களை உண்மையாக செயல்படுத்துவது அமெரிக்காவின் கொள்கை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
* நாடு கடத்தப்படுவது புதிதல்ல இந்தியர்களை கண்ணியத்துடன் நடத்த அமெரிக்காவுடன் பேச்சு: வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியதாவது: வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், தங்கள் நாட்டினரை திரும்பப் பெறுவது அனைத்து நாடுகளின் கடமையாகும். இது இயற்கையாகவே அவர்களின் தேசியம் பற்றியது. இது எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிற்கும் பொருந்தக்கூடிய கொள்கை அல்ல.
மேலும் இந்தியாவால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் கொள்கை அல்ல. விமானம் மூலம் நாடு கடத்தப்படுவதற்கான நிலையான இயக்க நடைமுறையானது 2012ம் ஆண்டு முதல் அமெரிக்கா கடைபிடித்து வருகிறது. உணவு மற்றும் பிற தேவைகள், மருத்துவ அவசரநிலைகள் உட்பட நாடுகடத்தப்பட்டவர்களின் கூடுதல் தேவை கவனிக்கப்படுகிறது. கழிவறை தேவைப்பட்டால் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்படுவதில்லை. இது ராணுவ விமானங்களுக்கும் பொருந்தும்.
இருப்பினும் நாடுகடத்தப்பட்டவர்கள் விமானத்தில் வரும் போது எந்த வகையிலும் தவறாக நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் நிச்சயமாக அமெரிக்க அரசுடன் பேசுவோம். 2009ல் இருந்து அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் விவரங்களை அளிக்க விரும்புகிறேன். 2009ல் 734 பேர், 2010ல் 799 பேர், 2011ல் 599 பேர், 2012ல் 530 பேர், 2013ல் 515 பேர், 2014ல் 591 பேர், 2015ல் 708 பேர், 2016ல் 1303 பேர், 2017ல் 1024 பேர், 2018ல் 1180 பேர், 2019ல் 2042 பேர், 2020ல் 1889 பேர், 2021ல் 805 பேர், 2022ல் 862 பேர், 2023ல் 617 பேர், 2024ல் 1368 பேர், 2025ல் 104 பேர் என்று 2009ல் இருந்து இன்று வரை 15,668 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இங்கே திரும்பி வந்தவர்கள் இந்தியர்கள் என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். அவர்கள் எப்படி அமெரிக்கா சென்றார்கள், யார் ஏஜென்ட், எப்படி இந்த சட்டவிரோத தொழில் நடந்தது, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பற்றிய தரவுகள் எங்களிடம் இல்லை. இவ்வாறு கூறினார்.
* நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
இந்தியர்களை விலங்கிட்டு நாடு கடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி, ஆ.ராசா எம்பி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர்கள் கைவிலங்கு அணிந்து நாடு கடத்தப்பட்டதை கண்டிக்கும் வகையில்,’மனிதர்கள். கைதிகள் அல்ல’ என்ற வாசகங்கள் இடம் பெற்ற பதாகைகளை ஏந்தியபடி,’ இந்தியாவை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டோம், இந்தியர்களை அவமதித்தால் இந்தியா அமைதியாக இருக்காது’ என்று கோஷம் எழுப்பினர்.
* பாதுகாப்பான குடியேற்றத்திற்கு புதிய சட்டம் வருகிறது
பாதுகாப்பான, ஒழுங்கான இடம்பெயர்வுக்கான புதிய சட்டம் இயற்றுவது குறித்து ஒன்றிய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதற்காக குடியேற்றம் தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டம் (வெளிநாட்டு நடமாட்டம் (வசதி மற்றும் நலன்) மசோதா, 2024) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
The post அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம் கை, கால்களில் விலங்கிட்டதால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி: மக்களவை நாள் முழுவதும் முடங்கியது appeared first on Dinakaran.