×

முதல் ஒருநாளில் இங்கிலாந்து தோல்வி: இந்தியா அணி அமர்க்களம்; ராணா, ஜடேஜா தலா 3 விக்கெட் கில், ஸ்ரேயாஸ், அக்சர் அரை சதம்

நாக்பூர்: இந்தியா-இங்கிலாந்து இடையேயான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் விசிஏ மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் அறிமுக வீரர்களாக ஜெய்ஸ்வால், ஷர்ஷத் ராணா ஆகியோர் களமிறங்கினர். இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக பில் சால்ட், பென் டக்கட் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி 75 ரன் எடுத்திருந்த நிலையில், பில் சால்ட் 43 ரன்னில் (26 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) ரன் அவுட்டானார்.

தொடர்ந்து பென் டக்கட் 32 ரன் (29 பந்து, 6 பவுண்டரி), ஹேரி புரூக் ரன் எதுவும் எடுக்காமலும் ஷர்ஷித் ராணா பந்துவீச்சில் அடுத்தடுத்து நடை கட்டினர். அடுத்து வந்த ஜோ ரூட் 19 ரன்னில் (31 பந்து, ஒரு பவுண்டரி) வெளியேற இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்திருந்தது. 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் ஜேக்கப் பெத்தேல் நிதனமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஜோஸ் பட்லர் 52 ரன் (67 பந்து, 4 பவுண்டரி) எடுத்திருந்த நிலையில் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டயாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 59 ரன் சேர்த்தது.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 5 ரன், பிரைடன் கார்ஸ் 10 ரன்னில் நடையை கட்ட, ஜேக்கப் பெத்தேல் 51 ரன்னில் (64 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) வெளியேறினார். தொடர்ந்து ஆதில் ரஷித் 8 ரன்னிலும், சாகிப் மஹ்மூத் 2 ரன்னில் ஆட்டமிழக்க 47.4 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன் இங்கிலாந்து எடுத்தது. இந்திய அணி பந்துவீச்சில் ஹர்ஷீத் ராணா, ஜடேஜா தலா 3 விக்கெட் எடுத்தனர். முகமது ஷமி, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 249 ரன் என்ற இலக்குடன் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.

ஜெய்ஸ்வால் 15 ரன்னிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் 94 ரன் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 59 ரன்னில் (36 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். அடுத்த வந்த அக்சர் பட்டேல், சுப்மன் கில்லுடன் இணைந்து அதிரடியாக விளையாடி 52 ரன்னில் (47 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி சுப்மன் கில் 87 ரன்னில் (96 பந்து, 14 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார்.

அடுத்த வந்த கே.எல்.ராகுல் 2 ரன்னில் வெளியேற, ஹர்திக் பாண்டிய மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்திய அணி யை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். 38.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 251 ரன் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்டியா 9 ரன்னிலும், ஜடேஜா 12 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆதில் ரஷித், சாகிப் மஹ்மூத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

* விராட் கோஹ்லி ஆப்சென்ட்
விராட் கோஹ்லி சமீப காலமாக சொற்ப ரன்னில் வெளியேறியதாலும், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான முன்னோட்டம் என்பதால் இங்கிலாந்து தொடர் முக்கியமானதாக கருத்தப்பட்டது. ஆனால், மூட்டு வலி காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் இருந்து கோஹ்லி விளையாடதது, ரசிர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.

The post முதல் ஒருநாளில் இங்கிலாந்து தோல்வி: இந்தியா அணி அமர்க்களம்; ராணா, ஜடேஜா தலா 3 விக்கெட் கில், ஸ்ரேயாஸ், அக்சர் அரை சதம் appeared first on Dinakaran.

Tags : England ,India ,Rana, Jadeja ,Shreyas ,Axar ,Nagpur ,VCA Stadium ,Nagpur, Maharashtra ,Jaiswal ,India team ,Dinakaran ,
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன்: சாம்பியன் பட்டம் வென்ற சீன வீரர்