சென்னை: ஓட்டேரி எஸ்.வி.எம் நகர் குடிசை பகுதியில் வசித்து வருபவர் ஞானவேல் (38), ஆட்டோ டிரைவர். வீட்டின் அருகே இவரது அண்ணன் சற்குணவேல் குடும்பத்துடன் வசிக்கிறார். ஏற்கனவே இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 3ம் தேதி இருசக்கர வாகனத்தை எரித்த வழக்கு தொடர்பாக சற்குணவேலுக்கும், ஞானவேலுக்கும் தகராறு ஏற்பட்டு தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பினர். அதன் பிறகு சற்குண வேலுவின் மூத்த மகன் நிர்மல் குமார், தனது சித்தப்பா ஞானவேல் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதுகுறித்து ஞானவேல் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக நிர்மல் குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது நிர்மல் குமாரின் தம்பி சதீஷ்குமார் ஞானவேல் வீட்டுக்கு சென்று, ‘‘எனது அண்ணன் மீது ஏன் புகார் கொடுத்தாய்,’’ எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஞானவேலின் கையில் வெட்டினார். இதில் ஞானவேல் பலத்த காயமடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பிறகு அவர் கொடுத்த புகாரின் பேரில் தலைமைச் செயலக குடியிருப்பு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். நிர்மல் குமார் (28), அவரது தம்பி சதீஷ்குமார் (22) ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
The post முன்விரோதம் காரணமாக சித்தப்பாவை வெட்டிய அண்ணன், தம்பி கைது appeared first on Dinakaran.