×

கிளாம்பாக்கத்தில் நள்ளிரவு பஸ்சுக்காக காத்திருந்த சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் கைது


தாம்பரம்: கிளாம்பாக்கத்தில் பஸ்சுக்காக காத்திருந்த சிறுமியை நள்ளிரவில் ஆட்டோவில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த 3ம் தேதி இரவு 11.30 மணி அளவில், சேலம் மாவட்டத்தில் இருந்து மாதவரம் செல்வதற்கு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர், எங்கு செல்ல வேண்டும் என்று சிறுமியிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுமி, தான் மாதவரம் செல்வதற்காக பஸ்சுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன், என கூறியுள்ளார். அதற்கு அந்த ஆட்டோ டிரைவர், நள்ளிரவாகி விட்டது. இனிமேல் பஸ்கள் எதுவும் இங்கு வராது. எனவே மாதவரத்தில் எங்கு செல்ல வேண்டும் என்று சொல்லுமா, அங்கு நான் உன்னை விட்டு விடுகிறேன், என தெரிவித்துள்னார்.

அதற்கு சிறுமி பரவாயில்லை அண்ணா நான் பார்த்துக் கொள்கிறேன், என மறுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த ஆட்டோ டிரைவர் போன் செய்து தனது நண்பர்கள் 2 பேரை அங்கு வரவழைத்துள்ளார். இவர்கள் மூவரும், சிறுமியிடம் பேச்சு கொடுப்பது போல் நடித்து, திடீரென ஆட்டோவில் கடத்தி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, என்னை காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என கதறி கூச்சலிட்டுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பயணிகள் சிலர் அந்த ஆட்டோவை விரட்டிச்சென்று சென்று பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் ஆட்டோ மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றுவிட்டது.இதை தொடர்ந்து அங்கிருந்த பயணிகள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, 3 பேர் சேர்ந்து ஆட்டோவில் சிறுமியை கடத்தி செல்வதாக, ஆட்டோ பதிவு எண்ணுடன் தகவல் கொடுத்தனர்.

உடனே காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தாம்பரம் போலீசார் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த பயணிகளிடம் விசாரணை செய்தனர். சிறுமியை கடத்திய ஆட்டோ எந்த வழியாக சென்றது என்று கேட்டு அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் ஆட்டோவில் சிறுமியை கடத்தி செல்வது தெரியவந்தது. அந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் தெரிந்த ஆட்டோ எண்ணை வைத்து தாம்பரம் துணை ஆணையர், பல்லாவரம் உதவி ஆணையர் மற்றும் பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை போலீசார் அந்த ஆட்டோவை தேடி வந்தனர். இந்நிலையில் மறுநாள் அதிகாலை கோயம்பேடு அடுத்த நெற்குன்றம், மாதா கோயில் அருகே அந்த ஆட்டோ நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே, அந்த இடத்திற்கு போலீசார் விரைந்தனர். போலீசார் வருவதை பார்த்த மர்ம நபர்கள், சிறுமியை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பித்து சென்றனர். அதன் பின்னர் போலீசார், சிறுமியை மீட்டு தாம்பரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணையில் ஆட்டோவில் 3 பேர் என்னை கடத்திச் சென்று வாயை துணியால் கட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தனர், என்று தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வந்தனர்.இந்நிலையில், இந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ்செல்வன் (56), தயாளன் (45) ஆகிய இருவரை நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், தயாளன் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

The post கிளாம்பாக்கத்தில் நள்ளிரவு பஸ்சுக்காக காத்திருந்த சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kalampakkam ,Tambaram ,Odisha ,
× RELATED தாம்பரம் மாநகராட்சியில் ரூ.45.3 கோடியில் திட்ட பணிகள்: ஆணையர் நேரில் ஆய்வு