×

பால்நல்லூர் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பால்நல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு, அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் ரசீது வழங்கும் முறையை ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பால்நல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பார்வையிட்டு, மாணவ – மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினை ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆய்வு செய்தார். முன்னதாக, ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாதத்தின் முதல் வியாழக்கிழமை அன்று நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாமினை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

இம்முகாமில், கலந்துகொண்ட 56 மாற்றுத்திறனாளிகளில் 40 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு புதிய அடையாள அட்டையும், 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு புதுப்பித்தும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரிய பதிவு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கான பதிவும் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விஷ்ணுபிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post பால்நல்லூர் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Palnallur Panchayat ,Sriperumbudur ,Kanchipuram District ,Collector ,Kalaichelvi Mohan ,Palnallur Panchayat Council ,Sriperumbudur Union ,Palnallur Panchayat Union Primary School ,Dinakaran ,
× RELATED சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்து...