மதுராந்தகம்: பெருநகர் கிராமத்தில் இருந்து பூந்தமல்லி வரை புதிய அரசு பேருந்து வழித்தடத்தை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான க.சுந்தர் தொடங்கி வைத்தார். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் கிராமத்தில் இருந்து பூந்தமல்லி வரை அரசு பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தரிடம் கோரிக்கை மனு அளித்த இருந்தனர். அதன்படி, விழுப்புரம் கோட்டம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பரிந்துரை செய்தார்.இதனைத் தொடர்ந்து, பெருநகர் கிராமத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக பூந்தமல்லிக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பெருநகர் பேருந்து நிறுத்தத்தில் நேற்று காலை நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மேலும், ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் ருத்ரகோட்டி அனைவரையும் வரவேற்றார். இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கொடியசைத்து வைத்து பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்து பயணச்சீட்டு பெற்று சிறிது தூரம் பேருந்தில் பயணம் செய்தார். இந்த பேருந்து போக்குவரத்து கிடைத்ததற்காக கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு வங்கி திட்டத்தின் மூலம் ரூ3.29 கோடி மதிப்பில் 3 அடுக்குகள் கொண்ட 14 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினர். இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் மங்கலகவுரி வடிவேலு, துணை தலைவர் வசந்தி முருகன், போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் வினோத், நாராயணன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சீனிவாசன், உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
The post பெருநகர் கிராமத்தில் இருந்து பூந்தமல்லி வரை புதிய அரசு பேருந்து வழித்தடம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்: கிராம மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.