மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி உயிர் காப்பாளருக்கு ரூ50 ஆயிரம் மதிப்பீட்டில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. மாமல்லபுரம் உலகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாக திகழ்ந்து வருகிறது. இங்கு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் ஏராளமானோர் வந்து ஆபத்தை உணராமல் கடலில் குளிக்கின்றனர். அப்படி, குளிக்கும்போது சில சமயங்களில் ராட்சத அலையில் சிக்கி பயணிகள் உயிரிழந்து விடுகின்றனர். மாமல்லபுரம் கடற்கரையில் தொடர்ந்து உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருவதால், உயிர் காப்பாளரை போர்க்கால அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் மாமல்லபுரம் மீனவர் குப்பத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவரை கடந்த 7 மாதத்துக்கு முன்பு நியமனம் செய்து, அவருக்கு மாத சம்பளம் வழங்க பேரூராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். உயிர்காப்பாளர் கிருஷ்ணராஜ் இதுநாள் வரை ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்ட பலரை காப்பாற்றி உள்ளார். கடந்த, 7 மாதங்களாக உயிர்காப்பாளர் கிருஷ்ணராஜ் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பணியாற்றி வருகிறார். எனவே, உயிர் காப்பாளருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, தினகரன் நாளிதழில் பலமுறை படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, ரோட்டரி சங்கம் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க முன் வந்தது.
இந்நிலையில், உயிர் காப்பாளர் கிருஷ்ணராஜிக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாமல்லபுரம் கடற்கரையொட்டி நடந்தது. இதில், ரோட்டரி கிளப் சங்க தலைவர் போஸ் தர்மலிங்கம் கலந்துகொண்டு, உயிர் காப்பாளருக்கு ரூ50 ஆயிரம் மதிப்பீட்டில் படகு, லைப் ஜாக்கெட், மிதவை வலையம், துடுப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், தொல்லியல் துறை அலுவலர் ஸ்ரீதர், பேரூராட்சி கவுன்சிலர் மோகன் குமார், ரோட்டரி கிளப் செயலாளர் முருகன், துணை தலைவர் மகேஷ்குமார், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post மாமல்லபுரம் உயிர் காப்பாளருக்கு ரூ50 ஆயிரத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் appeared first on Dinakaran.