- தாய் கிரிதிகை திருவிழா
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம் முருகன்
- அமைச்சர்
- பி.கே.சேகர்பாபு
- திருப்பூருர்
- கந்தசுவாமி கோயில்
* பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்து வழிபாடு
திருப்போரூர்: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைக்கிருத்திகை விழா கோலாகலமாக நடந்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். காவடி எடுத்தல், மொட்டை அடித்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன் செலுத்தி பக்தர்கள் சாமியை வழிப்பட்டு சென்றனர். முருகன் கோயில்களுள் புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் தைக்கிருத்திகை விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று அதிகாலை முதற்கொண்டே ஏராளமான பக்தர்கள் சரவணப்பொய்கையில் நீராடி மொட்டை அடித்து, வேல் தரித்து பால் காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடி எடுத்தப்படி “அரோகரா, அரோகரா’’ கோஷத்துடன் நான்கு மாடவீதிகளிலும் உலா வந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். முன்னதாக, அதிகாலை 6 மணிக்கு குளத்தில் நீராடி முருகப்பெருமானை தரிசித்து, பக்தர்களுக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பார்வையிட்டார். கோயிலுக்கு வந்த அவரை அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் வரவேற்றனர். நேற்று, இரவு தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் புகழ்பெற்ற ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த, கோயிலுக்கு மாதந்தோறும் கிருத்திகை நாட்களில் திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். முருகப்பெருமானை கார்த்திகை பெண்கள் அறுவர் வளர்த்தனர். முருகன் அருளால் அவர்கள் கார்த்திகை நட்சத்திரமாக விளங்கும் பேறு பெற்றனர். அதனால், மாதந்தோறும் கார்த்திகை நாளில் முருகன் வழிபாடு சிறப்பு பெற்று விளங்குகின்றது. வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தைக்கிருத்திகை உற்சவம் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதேபோல், இந்த ஆண்டும் தைக்கிருத்திகையினை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, கோ பூஜை நடைபெற்றது. பின்னர், மூலவர் வள்ளி – தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார். தொடர்ந்து, சஷ்டி மண்டபத்தில் உற்சவர் ரத்தினாங்கி சேவையில் மஞ்சள் நிற படிமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில், ஏராளமான பக்தர்கள் செவ்வாடை, பச்சையாடை அணிந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் “அரோகரா, அரோகரா’’ என்ற கோஷத்துடன் முருகனை வழிபட்டனர். தைக்கிருத்திகை முன்னிட்டு சென்னை மாதவரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி சுமந்து வந்தனர். புஷ்ப காவடி, பால் காவடி ஆகியவைகளை சுமந்து பச்சையாடை அணிந்து விரதமிருந்து “அரோகரா, வெற்றிவேல்’’ கோஷத்துடன் வந்து முருகப்பெருமானை வணங்கினர்.
அப்போது, பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் பிரசாதங்களை நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர்கள் செந்தில்தேவராஜ், விஜயகுமார் ஆகியோர் வழங்கினர். மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே வஜ்ராபுரம் கிராமத்தில் உள்ள வள்ளி தேவசேனை உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை கிருத்திகை விழா கோலாகலமாக நடந்தது. இந்த விழா, நேற்று காலை 6 மணிக்கு மங்கல இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவடி மற்றும் பால்குடம் திருவீதி உலா உடுக்கை சலங்கை, மேளதாளம் முழங்க நடனம் ஆடியபடி கோயிலை சென்றடைந்தனர்.
அதன் பின்னர், சுப்ரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரமும், மகாதீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தி சென்றனர்.
The post செங்கல்பட்டு, காஞ்சிபுரம் முருகன் கோயில்களில் தை கிருத்திகை விழா கோலாகலம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.