×

திருப்போரூர் அருகே ஜப்பான் சிட்டி தொழிற்பேட்டையில் புதியதாக வரும் தொழில் நிறுவனங்களால் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: தமிழக அரசின் அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி

திருப்போரூர்: திருப்போரூர் அருகே குண்ணப்பட்டில் அதிவேக வளர்ச்சி அடைந்து வரும் ஜப்பான் சிட்டி தொழிற்பேட்டையில் புதியதாக வரிசை கட்டும் 25 தொழில் நிறுவனங்களால், வரும் 2030ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இது தமிழக அரசின் அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியாகும். தென் மாநிலங்களில் தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் முதலிடத்தையும், இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தையும் பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது. இந்த சாதனை பயணத்தின் மற்றும் ஒரு மைல் கல்லாக சென்னை அருகே 50 கிமீ தூரத்தில் தொழிற்பேட்டை ஒன்று உருவாகி வருகிறது.சிங்கப்பூரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான கேப்பிட்டல் லேண்ட் என்ற நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தொழிற்பேட்டைகளை உருவாக்கி வருகிறது.

புதிய தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு தேவையான நிலங்களை கிரையம் பெற்று குத்தகை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது, அந்த நாட்டின் சட்ட திட்டங்களின்படி அந்த நிறுவனங்களுக்கு தேவையான அனுமதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை செய்து வருகிறது. அந்த அடிப்படையில், அந்த நிறுவனம் அசன்டாஸ் நிறுவனத்துடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே குண்ணப்பட்டில் சுமார் 2000 ஏக்கர் நிலங்களை தனியாரிடமிருந்து பணம் கொடுத்து வாங்கி பிரம்மாண்ட தொழிற்பேட்டையாக உருவாக்கி உள்ளது. இந்த, தொழிற்பேட்டையில் மொத்தம் 6 பிரிவுகள் உள்ளன. சிறு தொழில்கள், நடுத்தர தொழில்கள், பிரம்மாண்ட தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இவை தரம் பிரிக்கப்பட்டு, அவரவர் தேவைக்கேற்ப நிலங்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த, 2010ம் ஆண்டு தொடங்கிய இந்த தொழிற்பேட்டை அப்போதைய அதிமுக அரசின் தவறான அணுகுமுறையின் காரணமாக வளர்ச்சியின்றி தொழில் நிறுவனங்களின் வருகை இன்றி 2016 வரை ஒரே ஒரு நிறுவனத்துடன் இயங்கி வந்தது. கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி தொடங்கியதும் தொடக்கத்தில் தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் பின்னர் தொழில் துறை அமைச்சராக பதவி ஏற்று செயல்பட்டு வரும் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரின் வேகமான முன்னெடுப்பின் காரணமாக, தற்போது 8 நிறுவனங்கள் இந்த வளாகத்தில் தங்களது தொழில் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகின்றன. இதுவரை, 25 நிறுவனங்களுடன் குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது, நடைபெற்று வரும் 8 நிறுவனங்களின் மூலமாக மட்டும் 3000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இது மட்டுமின்றி 17 நிறுவனங்கள் கட்டுமானப் பணிகளையும், தொடக்கப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன. முதல் பிரிவில் 1250 ஏக்கர் நிலத்தில் 100 அடி சாலைகள், சாலைகளின் இரு புறமும் மரங்கள், மழை நீர் வடிகால்வாய்கள் என அற்புதமான உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, தொழிற்சாலைகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் பொதுப் பயன்பாட்டு தண்ணீர் ஆகியவை தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 220 கே.வி மற்றும் 110 கே.வி. மின் திறன் வழங்கும் இரண்டு துணை மின் நிலையங்களும், இந்த தொழிற்பேட்டை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது.இதன்மூலம், தொழில் தொடங்க முன் வரும் நிறுவனங்களின் அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தற்போது வரை இந்த தொழிற்பேட்டையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யமஹா, அஜினோமோட்டா, மருஷன் அஜினோமோட்டோ, டாக்காசரோ, ஹிட்டாச்சி, டைசர், துங்கா ஆகிய நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை தொடங்கி உள்ளன. இதனால், இப்பகுதி மக்கள் இந்த தொழிற்பேட்டையை ஜப்பான் சிட்டி என்றே அழைக்கின்றனர். இதில், துங்கா என்ற நிறுவனம் இந்திய பாதுகாப்பு துறைக்கு தேவையான ட்ரோன்களை தயார் செய்து வருகிறது. மற்ற தொழிற்சாலைகளில் இருந்து மசாலாப் பொருட்கள், கிடார், கீ போர்டு, நூடுல்ஸ், உணவு பதப்படுத்தும் பொருட்கள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. மேலும், தற்போது கட்டப்பட்டு வரும் தொழிற்சாலைகளின் மூலமாக எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், மருந்துகள், உணவுப்பொருட்கள், துணி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு அதற்காண பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிரமாண்ட மேம்பாலம்
கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி என்ற இடத்தில் நான்கு முனை சந்திப்பு உள்ளது. மாமல்லபுரம், புதுச்சேரி, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய நான்கு இடங்களுக்கு செல்லும் வகையில் இந்த சாலை பிரிகிறது. இந்த இடத்தில் சென்னை கத்திப்பாராவில் உள்ளது போன்ற பிரம்மாண்ட பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கிருந்து வெளிவட்டச்சாலை துவங்கி பெருமாளேரி, மானாம்பதி, குண்ணப்பட்டு, காரணை, கரும்பாக்கம், அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோயில் வழியாக வண்டலூர் வரை சென்று அந்த சாலையுடன் இணைக்கப்படுகிறது. இதன்மூலம் பூஞ்சேரியில் இருந்து மீஞ்சூர் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு நேரடியாக ஒரே சாலையில் பயணிக்க முடியும். மிகப்பெரிய தொழில்துறை பாதையாக இது மாற உள்ளது. இந்த சாலைக்கும் ஜப்பான் சிட்டி தொழிற்பேட்டைக்கும் 4 கிமீ தூரம் மட்டுமே உள்ளது. இந்த தொழிற்பேட்டையில் இருந்து வெளி வட்டச்சாலையை இணைக்கும் பணியையும் அந்த நிறுவனம் தொடங்கி உள்ளது.

அமைதியான சுற்று சூழல்
தொழிற்சாலை வளாகம் அல்லது ெதாழிற்பேட்டை என்றாலே தூசு, கரும்புகை, குப்பைகள், கழிவுகள் என இருப்பது வழக்கம். ஆனால், இந்த தொழிற்பேட்டையில் 100 அடி சாலைகள், சாலையின் இரு புறமும், மரங்கள், எப்போதும் தண்ணீர் ஓடும் கால்வாய்கள், அமைதியான சுற்றுச்சூழல் என சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகிறது. இது, தொழிற்பேட்டையா? அல்லது ஏதோ வெளிநாடுகளில் உள்ள நகரங்களில் ஒன்றா? என்ற அளவுக்கு பராமரிக்கப்படுகிறது.

12ம் தேதி திறப்பு
இந்த தொழிற்பேட்டையில் 27 ஏக்கர் பரப்பளவில் கோத்ரேஜ் நிறுவனம் தனது முதல் பிரிவை தொடங்கி உள்ளது. இந்த, தொழிற்சாலையில் சோப்பு, பேஸ்ட் போன்றவை தயாரிக்கப்பட உள்ளது. முதல் பிரிவில் மட்டும் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ள இந்த நிறுவனம் அடுத்தடுத்த இரண்டு பிரிவுகளை தொடங்கியதும், சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் என தெரிகிறது. இந்த, கோத்ரேஜ் தொழிற்சாலையை வருகிற 12ம்தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

கிராமங்கள் தத்தெடுப்பு
இந்த தொழிற்பேட்டையை வடிவமைத்த நிறுவனமானது தனது சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் சுற்றியுள்ள கிராமப்புற பள்ளிகளை தத்தெடுத்து வண்ணம் பூசுதல், கழிப்பறை கட்டித்தருதல், கல்வி உபகரணங்கள் வழங்குதல், பெற்றோர்-ஆசிரியர் சங்க ஆசிரியர்களுக்கு ஊதியம் அளித்தல் போன்ற சமூக பணிகளை செய்து வருகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகள்
ஜப்பான் தொழிற்பேட்டை வளாகத்தில் தொழிற்சாலைகள் மட்டுமின்றி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. பிரபல தொழிலதிபர் கே.வி.ரமணியின் சாய் பல்கலைக்கழகம் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு கலை, அறிவியல், சட்டம், மேலாண்மை போன்ற படிப்புகள் உள்ளன. விரைவில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை போன்றவையும் வர உள்ளது. இந்த தொழிற்பேட்டை வளாகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கென அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொழிற்சாலையும் அவர்களின் தேவைக்கேற்ப இந்த குடியிருப்புகளை வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம்.

The post திருப்போரூர் அருகே ஜப்பான் சிட்டி தொழிற்பேட்டையில் புதியதாக வரும் தொழில் நிறுவனங்களால் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: தமிழக அரசின் அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி appeared first on Dinakaran.

Tags : Japan City Industrial Estate ,Tiruporur ,Tamil Nadu government ,Kunnapattu ,Dinakaran ,
× RELATED தெற்காசியாவிலேயே முதலீடுகளை...