×

ஜெயதேவர்

பக்த விஜயம் பகுதி – 7

‘‘சந்தேக நிவர்த்தி செய்ய பண்டிதர் வந்திருப்பதாக ஜெயதேவரிடம் போய்ச் சொல்லுங்கள்!’’ என்றார். வாசல் காவலாளி உள்ளே ஓடினார்; ஜெயதேவரிடம், ‘‘சுவாமி! சந்தேக நிவர்த்தி செய்ய ஒரு பண்டிதர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார். நீங்கள் விரைவாக வந்து, அவரைச் சந்திக்க வேண்டும்’’ என்றார். இதுவரை சென்ற இதழில் பார்த்தோம். இனி…

காவலாளி சொன்னதும் ஜெயதேவருக்கு சந்தேகம் ஏற்பட்டது; ‘‘சூரியன் உதிப்பதற்கு முன், எந்தப் பண்டிதர், சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வருவார்? கனவில் வந்த காசி விஸ்வநாதனே, பண்டிதராக வந்திருப்பாரோ?’’ என்று எண்ணிய ஜெயதேவர், வெகுவேகமாகப் போய்ப் பண்டிதரை வணங்கினார். ஜெயதேவருடன் மடத்தின் உள்ளே சென்ற பண்டிதர், ஜெயதேவரின் பாடல் சுவடிகள் அடங்கிய மூட்டையை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார்; காசி நகர்ப் புலவர்களை எல்லாம் அழைத்து, ஜெயதேவரின் பாடல்களை படித்துக் காண்பித்தார்.

அதன்பின், ‘‘காசி நகர்ப் பண்டிதர்களே! என்ன இது நியாயம்? மிகவும் புனிதமான வேதங்களின் உச்சியில் பகவான் திருவடிகள் இருப்பதாகச் சாஸ்திரங்கள் பலவும் கூறுகின்றன. அப்படி இருக்கும்போது, இந்த ஜெயதேவர், பகவானின் திருமுடிமேல், ராதையின் திருவடிகள் இருப்பதாகப் பாடி இருக்கிறார். நீங்கள் எல்லாம் இதை ஒப்புக் கொள்கிறீர்களா?’’ எனக் கேட்டார். இவ்வாறு சந்தேக நிவர்த்தி பண்டிதர் கூறியதும், ஜெயதேவருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது; ‘‘என்ன இது? கனவில் தோன்றி என் சந்தேகத்தை நீக்குவதாகச் சொன்ன காசி விஸ்வநாதர், இந்தப் புலவர் மூலம் இவ்வாறு வெளிப்படுத்திவிட்டாரே!’’ என்று வெட்கப்பட்டார்.

அத்துடன் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்; ‘‘பண்டிதர்களே! அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்! ஏதோ ஞாபகமறதியாக இவ்வாறு பாடிவிட்டேன். அதற்காக நீங்கள் அனைவரும் என்னை மன்னித்துவிட வேண்டும்’’ என்று வேண்டினார். அதைக் கேட்ட சந்தேக நிவர்த்தி பண்டிதர், பரிகாசமாகச் சிரித்தார்; ‘‘ஜெயதேவா! ஞாபக மறதியாகப் பாடினால், ஒரு பாட்டில் குற்றம் வரும். ஆனால், நீ பாடிய எல்லாவற்றிலுமே அப்படி இருக்கிறதே! இப்படியெல்லாம் கவிதை எழுதும் உன்னைப் போன்ற கவிஞர்களால், கவிதை களின் சாரமும் கவிதை பாடும் மொழியும் விரைவாக அழிந்துவிடுமே! உன் பாடல்கள் எங்கு சிறப்படைந்தாலும் இந்தக் காசியில் அதெல்லாம் நடக்காது. சிறப்படையாது. முக்கால் மூடனை, முழு மூடர்கள்தான் கொண்டாடுவார்கள். உன் பாடலைக் கல்வியறிவு இல்லாதவர்கள்தான் பெரிதாகப் பாராட்டுவார்கள். உன்னுடையதெல்லாம் கட்டுக்கதைகள்; பொய்யான புனைந்துரைகள். ஆகையால் உன்னுடைய இந்த அஷ்டகப் பாடல்களை கங்கையில் விட்டுவிடுவோம்.

கங்கையில் இவை எதிரேறி வர வேண்டும்; இவற்றை அங்கீகரித்தேன் என்று கங்கையும் சொல்ல வேண்டும். அவ்வாறு நடக்காவிட்டால், நீ எழுதிய மற்ற நூல்களையும் கங்கையிலே போட்டுவிட வேண்டும்’’ என்றார் சந்தேக நிவர்த்தி பண்டிதர். அதை அங்கிருந்த புலவர்கள் அனைவரும் ஏற்றார்கள். அப்போது, ஜெயதேவரின் சந்தேகத்தை விரைவாக நீக்குவதற்காக, புலவராக வந்திருந்த சிவபெருமான், ஜெயதேவரின் அஷ்டகங்களை கையில் எடுத்துச் சென்று கங்கையை நெருங்கினார்; ‘‘கங்காதேவி! உன் மணவாளன் சிவபெருமான் மீது பாடியிருக்கும் ஐந்து அஷ்டகங்களிலும் கண்ணன் மீது பாடியிருக்கும் இருபத்தைந்து அஷ்டகங்களிலும் ஒரு தவறும் இல்லை என்பது சத்தியமானால், உன்னிடம் விடப்படும் இவைகளை உன் திருக்கரங்களால் எடுத்து என்னிடம் தரவேண்டும்’’ என்று சொல்லி தன் கையிலிருந்த ஓலைச் சுவடிகளை கங்கையில் விட்டார்.

அனைத்து அஷ்டகங்களும் கங்கையில் மூழ்கி நீராடி வெளிப்பட்டு, நீரோட்டத்தை எதிர்த்துச் செல்லத் தொடங்கின. அப்போது கங்காதேவி, ‘‘சிவபெருமானின் திருமுடியில் இருந்து பிரிந்து வெகுநாட்களாகிவிட்டன. இப்போது அவரைத் தரிசிக்கவும் அவர் கரங்களைத் தொடவும், நல்ல வாய்ப்பு உண்டாகி இருக்கிறது. இவையெல்லாம் ஜெயதேவரால் அல்லவா கிடைத்தன!’’ என்று எண்ணி நீரோட்டத்தை எதிர்த்துப் பொன் ஓலைகளையெல்லாம் கரங்களில் தாங்கி, தன் வடிவத்துடன் வெளிப்பட்டாள். அனைவரும் பார்த்து வியந்தார்கள். வெளிப்பட்ட கங்காதேவி,

‘‘சந்தேக நிவர்த்தி பண்டிதரே! எதுகை, மோனை, அணி, வரிசை, சீர், பொருள், சொல் என அனைத்தும் ஒரு சிறிதும் குறைவில்லாமல் அமைந்துள்ள இந்த அஷ்டகப் பாடல்களை ஏற்றுக் கொள்ளுங்கள்!’’ என்று சொல்லி, ஒவ்வோர் ஏடாகக் கொடுத்தாள். காரணம், அவ்வளவு நேரமும் சிவபெருமானைத் தரிசிக்கலாம் அல்லவா? அதற்காகத்தான் அப்படிச் செய்தாள். பண்டிதராக வந்திருந்த சிவபெருமான், கங்கையை நோக்கி, ‘‘கங்கையே! கண்ணன் திருமுடி மேல் ராதையின் திருவடிகள் இருப்பதாக ஜெயதேவன் பாடியிருப்பது உனக்குச் சம்மதம் தானா? இதை நான் ஏற்க மாட்டேன்’’ என்றார்.‘‘நான் ஏற்றுக்கொள்கிறேன். மும்மூர்த்தி களுக்கும் இது சம்மதம்தான்’’ என்றாள் கங்காதேவி. பண்டிதரான சிவபெருமான் சும்மா விடவில்லை;

‘‘கங்காதேவியே! நீ சிவபெருமானின் திருமுடி மேல் இருப்பதால், உன் காலடிகள் அவர் திருமுடிமேல் படுகின்றன. அதன் காரணமாகவே, ராதையின் கால்கள் கண்ணன் திருமுடியில் உள்ளன எனும் இப்பாடல்களை ஏற்றுக் கொண்டிருக்கிறாய். ஆனால், நான் ஏற்க மாட்டேன்’’ என்று சொல்லித் தம் கைகளில் இருந்த ஓலைகளை எல்லாம் அப்படியே கங்கையில் வீசி எறிந்தார். அதே விநாடியில் பகவான் ராதையுடன் கருட வாகனத்தில், கங்கையில் வீசப்பட்ட ஓலைகளுடன் ஆகாயத்தில் காட்சி கொடுத்தார்;

‘‘இந்த இருபத்தைந்து அஷ்டகங்களும் எனக்கு உரியவை. மற்றவையெல்லாம் உமக்கே உரியவை’’ என்றார். மேலும், பண்டிதராக வந்திருந்த சிவபெருமானும் ரிஷப வாகனத்தில் அம்பிகையுடன் காட்சி தந்தார். ஜெயதேவர் கீழே விழுந்து வணங்கி, கண்ணனையும் சிவபெருமானையும் பலவாறாகத் துதித்தார்.

(விஜயம் தொடரும்)

V.R.சுந்தரி

The post ஜெயதேவர் appeared first on Dinakaran.

Tags : Jayadevar ,Bhagtha ,Jayadev ,Jayadeva ,Swami ,
× RELATED ஜெயதேவர்