திருப்பூர், பிப். 6: திருப்பூர் பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளார்களா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள், கோழிப்பண்ணைகள் மற்றும் விசைத்தறி பட்டறைகளில் கொத்தடிமைகளாக தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனரா? என்பது தொடர்பாக தொழிலாளர் உதவி ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறைக்கு எதிரான மாவட்ட கண்காணிப்பு குழுவினை சார்ந்த உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகள், கோழிப்பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் கொத்தடிமை தொழிலாளர்கள் எவரும் கண்டறியப்படவில்லை. மேலும் தமிழ்நாட்டினை 2030ம் ஆண்டிற்குள் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற அரசின் இலக்கினை விரைவில் அடைந்திடும்பொருட்டு, கொத்தடிமை தொழிலாளர் முறைக்கு எதிரான கூட்டாய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post தொழில் நிறுவனங்களில் கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளார்களா? appeared first on Dinakaran.