×

விழுப்புரம் அருகே நூதன முறையில் மாந்திரீகம் செய்வதாக இளம்பெண்ணிடம் நகை அபேஸ் கவரிங் நகை கொடுத்து ஏமாற்றிய பெண் கைது

விழுப்புரம், பிப். 6: விழுப்புரம் அருகே நூதன முறையில் மாந்திரீகம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் இருந்து நகை அபேஸ் செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே சின்னகுப்பத்தை சேர்ந்தவர் பாலா மனைவி சூர்யகலா(22). இவரது கால்பவுன் கம்மல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொலைந்துவிட்டதாம். இந்நிலையில் பக்கத்துவீட்டை சேர்ந்த மணிபாலன் மனைவி கவுரி (26) என்பவரிடம் சென்று கம்மலை காணவில்லை என்று சூர்யகலா கூறினார். அப்போது அவர் மாந்திரீகம் செய்தால் சரியாகிவிடும், தொலைந்துபோன நகை கிடைத்துவிடும் என கூறினாராம். மேலும் வீட்டில் உள்ள மற்ற நகைகளை கொண்டு வருமாறும், அதனை வைத்து மாந்திரீகம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய சூர்யகலா தன்னிடமுள்ள 3அரை பவுன் நகைகளை கவுரியிடம் கொடுத்துள்ளார்.

அந்த நகைகளை பெற்றுக்கொண்ட கவுரி மாந்திரீகம் செய்து கொடுக்கிறேன் என்று கூறினாராம். பின்னர் 2 நாட்கள் கழித்து விபூதி மற்றும் நகைகளை கொடுத்துள்ளார். நகைகளை வாங்கிய சூர்யகலா பீரோவில் வைத்துள்ளார். பின்னர் சில நாட்களுக்கு முன்பு சூர்யகலா அந்த நகைகளை அடகு வைக்க சென்றபோது அது கவரிங் நகை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சூர்யகலா இதுகுறித்து வளவனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நேற்று கவுரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன், டிஜிட்டல் என வளர்ந்து வரும் நவீன காலத்திலும் கிராமப்புறங்களில் மாந்திரீகம் போன்ற கட்டுக்கதைகளை கூறி பணம், நகை அபேஸ் செய்யும் சம்பவம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. எனவே பொதுமக்கள் தான் உஷாராகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post விழுப்புரம் அருகே நூதன முறையில் மாந்திரீகம் செய்வதாக இளம்பெண்ணிடம் நகை அபேஸ் கவரிங் நகை கொடுத்து ஏமாற்றிய பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Suryakala ,Bala ,Chinnakuppat ,Kammal… ,
× RELATED விழுப்புரம் மாவட்டம் தேவனூர்...