×

காஞ்சிபுரம் பல்லவர்மேடு முதல் நத்தப்பேட்டை வரை மஞ்சள்நீர் கால்வாய் பணி விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம், பிப். 6: காஞ்சிபுரம் பல்லவர்மேடு முதல் நத்தப்பேட்டை வரை மந்தகதியில் நடந்து வரும் மஞ்சள் நீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப்பபகுதியின் வழியாக மஞ்சள் நீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய், முறையாக தூர்வராததால் கால்வாயில் ஆங்காங்கே அதிக அடைப்புகள் ஏற்பட்டு பெருமழையின்போது கழிவுநீர் மற்றும் மழைநீர் முறையாக வெளியேறாமல் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகும் அபாயம் இருந்தது. ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப்பகுதியில் மஞ்சள் நீர் கால்வாய், வேகவதி ஆற்றில் இருந்து பிரிந்து தாமல், புத்தேரி, சாலபோகம் கிராமப்பகுதிகள் வழியாக வந்து காஞ்சிபுரம் மாநகராட்சியில் கைலாசநாதர் கோயில் பகுதி, கிருஷ்ணன் தெரு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை மற்றும் திருக்களிமேடு வழியாக செனறு நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது. இந்த மஞ்சல் நீர் கால்வாய் 20 அடி ஆழமும், 30 அடி அகலமும் கொண்ட, 20 கிமீ நீளம் கொண்டது. இந்த கால்வாய் காஞ்சிபுரம் மாநகர பகுதியில் மட்டும் சுமார் 6 கிமீ தூரம் ஓடி நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது.

முதலில் மழைநீர் செல்லும் கால்வாயாக மட்டுமே இந்த மஞ்சள் நீர் கால்வாய் இருந்தது. நாளடைவில் இந்த கால்வாயில் சாயப்பட்டறை கழிவுகள், அரிசி ஆலை கழிவுகள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் விடப்பட்டு கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. மேலும், காஞ்சிபுரம் மாநகர பகுதியில் ஓடும் இந்த கால்வாயில் பல்வேறு இடங்களில் கோரை புற்கள் வளர்ந்து நீர் செல்லும் பாதையை அடைத்து கொண்டது. மேலும், பாலித்தீன் பைகள், குப்பைகள் ஆங்காங்கே கால்வாய்க்குள் கொட்டப்பட்டதால் முறையாக தண்ணீர் செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நின்றது. இதனால், இந்த கால்வாய்க்கு அருகே உள்ள மக்கள் வசிப்பிடங்களில் துர்நாற்றம் வீசுவதுடன், அவர்களுக்கு சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டு வந்தன.

மழைக்காலத்தில் பல்வேறு குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் நீர் இந்த கால்வாய் வழியாக சென்றுதான் நத்தப்பேட்டை ஏரியை அடையும். இந்த கால்வாய் தூர்வாரப்படாவிட்டால் தண்ணீர் முறையாக வெளியேறாமல் தேங்கி கொசு உற்பத்தி மையமாகவும் இருந்து வந்தது. இந்நிலையில், மஞ்சள் நீர் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதனால், 2023-2024ல் சுமார் ₹40 கோடி மதிப்பீட்டில் பல்லவர்மேடு முதல் நந்தப்பேட்டை வரை கால்வாயின் இருபுறம் தடுப்பு அமைக்க பணிகள் தொடங்கியது.

இந்நிலையில், மஞ்சள் நீர் கால்வாய் தடுப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்போது பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், பணிகள் நடந்து வரும் பகுதியில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதால் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை காணப்படுகிறது. எனவே, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் பல்லவர்மேடு முதல் நத்தப்பேட்டை வரை மஞ்சள்நீர் கால்வாய் பணி விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Pallavarmedu ,Natthappettai ,Kanchipuram ,Kanchipuram Corporation.… ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில்...