×

கற்கால செஞ்சாந்து நிற பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு வேட்டவலம் அடுத்த சொரத்தூர் காட்டுப்பகுதியில்

திருவண்ணாமலை, பிப்.6: வேட்டவலம் அருகே கற்கால செஞ்சாந்து நிற பாறை ஓவியங்கள் பொலிவுடன் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகா, வேட்டவலம் அடுத்த சொரத்தூர் காட்டுப்பகுதியில் கற்காலத்தை சேர்ந்த செஞ்சாந்து நிற ஓவியங்கள் இருப்பது குறித்து அப்பகுதி வரலாற்று ஆர்வலர்கள் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன், பழனிசாமி, பாரதிராஜா, சீனுவாசன் ஆகியோர் கொண்ட குழுவினர் கள ஆய்வு நடத்தினர். அதைத்தொடர்ந்து, சொரத்தூர் அருகே காட்டுப்பகுதியில் குன்றின் மேல் உள்ள பாறையின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் 3 பிரிவுகளாக பாறை ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தது. அதனை படியெடுத்து ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து, பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் தெரிவித்ததாவது: பாறையின் தெற்கு பகுதியில் உள்ள கோட்டோவியத்தில் ஒரு பெரிய மனித உருவம் 2 கைகளை வீசிக்கொண்டு தனக்கு முன்னால் உள்ள விலங்கு ஒன்றை துரத்துவது போல காணப்படுகிறது. அதற்கு கீழே மற்றொரு இதே தோற்றத்தையுடைய மனித உருவம் கைகளை வீசிக்கொண்டு ஓடி வருவது போல சிறிய அளவில் வரையப்பட்டுள்ளது. தூரத்தில் இருந்து ஒருவர் ஓடி வருவதை காட்டப்பட்டிருக்கலாம் என இந்த ஓவியந்தின் மூலம் தெரிகிறது. கிழக்குப் பகுதியின் அடிப்புறம் உள்ள 2 நீள்வட்ட பாறை குன்றாக இருக்கலாம். அதன் அருகே வரையப்பட்ட இரு வட்டங்கள், நீர்நிலையாக இருக்கலாம். இதற்கு முன்னதாக உள்ள இரு வரைவுகள் மனித உருவங்கள் போல காணப்படுகிறது. பாறையின் மேற்புறப்பகுதியின் வலது பக்கத்தில், 3 கோடுகளாலான அரை வட்டங்களும் அதன் மத்தியப் பகுதியில் புள்ளிகளின் தொகுப்பும் காட்டப்பட்டுள்ளது.

இவை, ஒரு நீர்நிலையின் கரையையும் அதிலுள்ள தண்ணீரையும் காட்டுவது போல வரையப்பட்டுள்ளது. அதற்கு முன்புறம் குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் பின்னலிட்டு வரையப்பட்டுள்ளது. நீர்நிலை அருகில் மரக்கொடிகளைக் கொண்டு வலை அடித்து, நீர் பருக வரும் விலங்கை வலை கட்டப்பட்டிருக்கும் பகுதியை நோக்கி விரட்டி வலையில் விலங்கை சிக்க வைத்து வேட்டையாடும் முறையாக இருந்துள்ளதை இக்காட்சி நினைவுபடுத்துகிறது. ஓவியங்களில், சிவப்பு வண்ணம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருசில இடங்களில் ஓவியங்கள் மங்கிய நிலையிலும், அழிந்து போன நிலையிலும் இருப்பதால், அதனுடைய முழு விவரங்களை அறிய முடியவில்லை. இவை, பெருங்கற்காலத்திற்கு முந்தைய காலமாக இருக்கக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கற்கால செஞ்சாந்து நிற பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு வேட்டவலம் அடுத்த சொரத்தூர் காட்டுப்பகுதியில் appeared first on Dinakaran.

Tags : Sorathur forest ,Vettavalam ,Tiruvannamalai ,Kilpennathur taluka, ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு...