×

தெளிவு பெறுவோம்!

தினசரி வாழ்க்கை என்பது போராட்டமாகவும் சவால்கள் நிறைந்த தாகவும் தானே இருக்கிறது?

– சந்தோஷ், சென்னை.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். சவால்களும் சிக்கல்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை. எந்தக் கப்பலும் துறைமுகத்தில் பாதுகாப்பாகவே இருக்கும். ஆனால், அதற்காக கப்பல் கட்டப்படுவதில்லை. கடலில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பயணம் செய்வதற்காகத்தான் கப்பல் தயாரிக்கப்படுகிறது. நாம் வாழ்வதும் ஒரு பயணம்தான். இதை எதிர்கொண்டு சமாளிப் பதற்காகத்தான் நமக்கு அறிவும் ஆற்றலும் வழங்கப்பட்டு இருக்கிறது. தெய்வ பலமும் துணை நிற்கிறது.

அபரான்னகாலம் என்றால் என்ன?

– அர்ச்சனா ரங்கநாதன், கோவை.
பகல் பொழுதை ஐந்து பாகமாகப் பிரித்து அதில் நான்காம் பாகத்தில் உள்ள கால அளவே அபரான்னம் எனப்படும். அபரான்னமே பிதுர்களுக்கு உகந்த காலமாகும். திதி, திவசம், பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற முன்னோர் வழிபாட்டை வீடு மற்றும் புனித ஸ்தலங்களில் ‘‘அபரான்னகாலம்’’ என அழைக்கப்படும். பிற்பகல் 1:12 முதல் 3:36 வரையிலான காலத்தில் செய்ய வேண்டும். இந்த அபரான்ன காலத்தில்தான் பித்ருக்கள் நாம் அளிக்கும் எள்ளும் தண்ணீரையும் உணவாக அருந்தி நம்மை ஆசீர்வதிக்க வருகிறார்கள். ச்ராத்த திதி இரண்டு நாட்களிலும் இருந்தால், அபரான்ன காலத்தில் திதி அதிகமாக உள்ள அன்றுதான் சிராத்த திதி கடைபிடிக்க வேண்டும். திதி ‘‘அபாரன்ன’’ காலத்தில் இல்லாத நாட்களில் ‘‘குதப காலம்’’ என அழைக்கப்படும் நண்பகல் 11:36 முதல் 12:24 மணி வரையிலான காலத்தில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யவேண்டும்.இந்த காலத்தில் திதி இருக்கும் அடிப்படையில்தான் பஞ்சாங்கத்தில் ‘‘சிரார்த்த திதி’’ தீர்மானிக்கப்படுகிறது. அப்போது ராகுகாலம் எமகண்டம் வந்தால் என்ன செய்வது என்பார்கள் சிலர். ராகு காலம், எமகண்டம் போன்ற விஷயங்களுக்கும் முன்னோர் வழிபாட்டிற்கும் தொடர்பில்லை.

ஞானம் வந்துவிட்டது என்பதை எப்படித் தெரிந்து கொள்ளலாம்?

– ஸ்ரீதர், மடிப்பாக்கம் – சென்னை.
ஒரு சின்ன கதை. முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் சொன்ன கதை. ஆன்மிக சொற்பொழிவுக்கு ஒருவர் தினசரி வருவார். சுவாரஸ்யமாகக் கேட்பார். ஒரு நாள் அவர் கவலையுடன் இருந்தார். காரணம், அவர் அதுவரை விரலில் அணிந்திருந்த விலை உயர்ந்த மோதிரம் ஒன்று தொலைந்துவிட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அது அவர் திருமணத்தின்போது அவருடைய மாமனார் போட்ட வைர மோதிரம். இப்படித் தொலைந்து விட்டதே என்று மிகவும் வருந்தினார். அவருக்கு மோதிரத்துடன் இருந்த தொடர்பு 40 வருடங்கள். ஆனால், அந்த மோதிரம் இவ்வளவு வருடங்களாக அவருடைய விரலை அலங்கரித்தேனே என்று ஏதாவது யோசனை செய்கிறதா? செய்யவில்லையே. செய்யாது. காரணம் என்ன என்று சொன்னால், மோதிரம் அறிவில்லாத பொருள். உலக வாழ்வில் மோதிரம் போன்றவர்கள்தான் நாம். நம்மை இந்த பிரகதி மண்டலத்தில் தொலைத்துவிட்டு கவலைப்பட்டுக் கொண்டிருப்பவன் இறைவன். நம்மைப் பற்றியும் சிந்திக்காமல், பரமாத்மாவைப் பற்றியும் சிந்திக்காமல் அந்த மோதிரம் வாழ்ந்தது போல வாழ்ந்து கொண்டிருக்கும். நம்மை நல்வழிப்படுத்த பகவான் படாதபாடு படுகிறான். அதற்குத்தான் பல விதமான சாத்திரங்கள், கோயில்கள் எல்லாம். அந்த இறைவனைப் பற்றிய கவலை இந்த ஆன்மாவுக்கு வந்துவிட்டால், ஞானம் வந்துவிட்டது என்று பொருள்.

எல்லோருடனும் மிக எளிதாக அன்பாக இருக்க முடியவில்லை, காரணம் என்ன?

– லட்சுமி பிரசன்னா, மணப்பாறை.
சின்ன காரணம்தான். நாம் முதலில் நம் தகுதியைப் பார்ப்பதில்லை. பிறர் தகுதியை எடை போடத் துவங்கி விடுகின்றோம். நம் அன்புக்கு தகுதியானவர் தானா இவர் என்று பார்க்கும்போது, அன்பு செலுத்தும் தகுதி நமக்குப் போய்விடுகிறது. எனவே அன்பு என்பது போலித்தனமான உணர்வாகி விடுகிறது. அன்பு செலுத்துவது போல் நடித்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுகிறோம். பிறரையும் ஏமாற்றுகிறோம். அன்பாக இருக்கிறேன் என்று வாயால் சொல்லிக் கொள்ளலாம். ஒவ்வொருவரையும் சீர்தூக்கி பார்த்துக் கொண்டிருந்தால், அவர்களை நேசிக்க நேரம் எங்கே கிடைக்கப் போகிறது?

The post தெளிவு பெறுவோம்! appeared first on Dinakaran.

Tags : Santosh ,Chennai ,
× RELATED வாக்காளர் பட்டியல் முறைகேடு பற்றி...