குலதெய்வம் தெரியவில்லை. எப்படிக் கண்டுபிடிப்பது? எப்படி வணங்க வேண்டும்?
– ஜி.வினோத்குமார், தர்மபுரி.
குலதெய்வத்தை அவசியம் வணங்க வேண்டும். குலதெய்வத்தின் அனுமதி இல்லாமல் நாம் ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முடியாது. இதை, இன்றும் நமது கிராமத்தில் பின்பற்றுகிறார்கள். குலதெய்வத்தை வம்சாவளியாக வழிபட்டு வருபவர்கள், ஏதோ சில காரணத்தினால் நடுவில் விட்டுவிட்டால், நம்முடைய முன்னோர்கள் எந்த குல தெய்வத்தை வணங்கினார்கள் என்பது தெரியாமல் போய்விடும். அப்படித் தெரியாமல் போன குடும்பங்கள் நிறைய உண்டு. அதே சமயம் யாராவது ஒருவர் சொன்னார் என்பதற்காக தவறான ஒரு விஷயத்தை நாம் செய்து விடக்கூடாது. குலதெய்வம் தெரியவில்லை என்று சொன்னால், ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்துக் கொள்ளுங்கள். அதையே குல தெய்வமாக பாவித்துக் கொண்டு, அதற்கு மஞ்சள், குங்குமம், புஷ்பங்கள் சாற்றுங்கள். குலதெய்வம் அதில் வந்து இருக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து அதையே குலதெய்வமாக பாவித்து வழிபட்டு வந்தால், ஒரு நாள் உங்கள் குலதெய்வம், தான் இருக்கும் இடத்தையும், தான் யார் என்பதையும் வழிகாட்டும். குலதெய்வத்தை நீங்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், குலதெய்வம் உங்களை அறியும்.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அனைவரும் சொல்லலாமா?
– லட்சுமி, சென்னை
அனைவரும் சொல்ல வேண்டும். மஹாபாரதத்தில், தருமர் பீஷ்மரிடம் “கிமேகம் தெய்வதம், லோகே கிம் வாப்யேகம் பாராயணம், கோ தர்ம ஸர்வ தர்மாநாம்?” என்று கேட்கிறார். அதாவது, “இந்த உலகில் அனைவருக்கும் ஒரே அடைக்கலம் யார்? உலகில் மிகப் பெரிய தெய்வம் யார்? யாரைப் புகழ்ந்து பேசுவதன் மூலம் ஒருவர் மங்களத்தை அடைய முடியும்? யாரை வணங்கினால் ஒருவன் ஐஸ்வர்யத்தை அடைய முடியும்? உங்கள் கருத்துப்படி, எல்லா தர்மங்களிலும் மிகப் பெரிய தர்மம் எது? யாருடைய பெயரை உச்சரிப்பதன் மூலம், ஒரு உயிரினம் சம்சார பந்தங்களுக்கு அப்பால் செல்ல முடியுமா?’’
எல்லா உலகங்களுக்கும் அதிபதியும், உன்னத ஒளியும், பிரபஞ்சத்தின் சாரமுமான விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை உச்சரிப்பதன் மூலம் மனிதகுலம் எல்லா துக்கங் களிலிருந்தும் விடுபடும் என்று பீஷ்மர் பதிலளித்தார். இப்படிப்பட்ட விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் மிக மிக உயர்வானது. பகவானே அமர்ந்து கேட்டது. ஆண்கள், பெண்கள் என்று எந்தவிதமான பாலின வேறுபாடும் இல்லாமல் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லலாம். இன்றைக்கு பல இடத்தில் விஷ்ணு சகஸ்ரநாம மண்டலி என்று ஏற்படுத்தி, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்கிறார்கள். ஒரு விளக்கு ஏற்றி வைத்து, பூஜை அறையிலோ, இல்லை ஒரு குழுவாக அமர்ந்து கோயில்களிலோ, விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்யலாம். அதனுடைய பலன் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனுபவத்தில்தான் தெரிந்து கொள்ள முடியும்.
தேங்காய் ஏன் உடைக்கிறோம்? அதில் ஏதேனும் நியமனங்கள் உண்டா?
– கார்த்திக், திருவான்மியூர்.
நம்முடைய பூஜையில் தேங்காய் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. தேங்காய் ஒரு அற்புதமான பொருள். மனிதனின் மும்மலங்களாகிய ஆணவம், கண்மம் மற்றும் மாயை ஆகியவற்றைக் குறிக்கிறது. இதை கோவிலில் உடைப்பதன் மூலம் என்னுடைய மும்மலங்களையும் உன் முன்னே உடைத்தெறிகிறேன் என்பது தான் தேங்காய் உடைப்பதன் பின்னால் இருக்கும் முக்கிய தாத்பர்யம். ஆயினும் அதை உபயோகப்படுத்துவதில் சில நியமங்கள் உண்டு. உதாரணமாக சதுர் தேங்காய் உடைப்பதாக இருந்தால் அதை ஆண்கள் தான் உடைக்க வேண்டும். பெண்கள் உடைக்க கூடாது. சில நேரங்களில் தேங்காய் தவறாக வாங்கி விடுவோம். தேங்காய் அழுகிவிட்டது என்றால் மனது சங்கடப்படும். இதை நேர்மறையாகவும் எடுத்துக் கொள்ளலாம். கண்திருஷ்டியும், நம்மைப் பிடித்த தீயசக்திகளும் அழுகி விட்டது என்றும் கருதலாம். தேங்காய் கொப்பரையாக இருந்தால் அவர்களின் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும் என்பார்கள். சில குருக்கள் இருக்கிறார்கள் அவர்கள் கருவறையில் தேங்காய் உடைக்கும் போது மறைவாக உடைப்பார்கள். தேங்காய் சரியாக இல்லாவிட்டால், வந்தவர் மனம் சங்கடப்படும் என்று அவர்கள் வைத்திருக்கக் கூடிய நல்ல மூடியை வைத்து பிரார்த்தனை செய்து, தரும் உயர்ந்த உள்ளமும் அவர்களுக்கு உண்டு. பொதுவாக தேங்காய் உடைக்கும்
பொழுது ஜாக்கிரதையாக உடைக்க வேண்டும். சமமாக உடைக்க வேண்டும். குடுமியை நீக்கிவிட்டுத்தான் நிவேதனமாக வைக்க வேண்டும்.எது விஷம்?
– பாஸ்கரராவ், திருப்பூர்.
எது அளவுக்கு மீறி இருக்கிறதோ அது விஷம் என்று தமது அர்த்த சாஸ்திரம் நூலில் சொல்லுகின்றார் சாணக்கியர். இதைத்தான் “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்று தமிழில் பழமொழியாக சொல்லி வைத்தார்கள். எவ்வளவு உண்ண முடியுமோ அவ்வளவுதான் உண்ண முடியும். அப்பொழுது தான் ஆரோக்கியம் இருக்கும். நம்மிடம் இருக்கிறது என்று அளவுக்கு மீறி உண்டால் அது ஜீரணமாகாது. அது நம்முடைய உடலில் பல்வேறு வியாதிகளை உண்டு பண்ணும். அதைப்போலவே அதிகமான செல்வம் ஒருவருக்கு மகிழ்ச்சியையும் திருப்தியான வாழ்க்கையும் தரும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதிகமான செல்வம் படைத்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பது அவர்களிடம் கேட்டுப் பார்த்தால்தான் தெரியும். இதை ஆழ்வார் ‘‘செல்வமே பெரு நெருப்பாய்’’ என்று பாடினார்.வீட்டில் சமையல் அறையில் அடுப்பில் நெருப்பு மூட்டி வைத்து பல்வேறு பண்டங்களைச் சமர்ப்பிக்கின்றோம் நெருப்பு அதிகமாகவும் போய் விடக்கூடாது. குறைந்தும் போய்விடக்கூடாது. அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் சமையலறையில் உணவு தயாரிப்பதற்காக வைக்கப்பட்ட, நெருப்பானது வீட்டையே எரித்து விடும் நம்முடைய உடம்பில் ஜடராக்கினி என்கிற நெருப்பு இருக்கிறது. அந்த நெருப்பு குறைந்துவிட்டால் உண்ணுகின்ற உணவு செரிக்காது. அந்த நெருப்பு அதிகமாகி விட்டால் அது குடலையே (அசிடிட்டி, பெப்டிக் அல்சர்) அழித்துவிடும். எனவே எதுவுமே அளவுக்கு மீறி விட்டால் அது நஞ்சு.
The post தெளிவு பெறுவோம்! appeared first on Dinakaran.