ஆடிப்பூரம் என்றாலே ஆண்டாள் நினைவு வராமல் இருக்காது. அந்த ஆண்டாளைப் பற்றிய இங்கே உங்களுக்காக மாலையாகத் தொடுத்து வழங்குகிறோம்.ஆண்டாள் அவதரித்தது பூரம் நட்சத்திரம். சிம்மராசிக்கு உரிய நட்சத்திரம். சுக்கிரனுக்கு உரிய நட்சத்திரம். எனவே ஆடிப் பூரத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு மகாலட்சுமியின் பூரண அருளும், சுக்கிரபகவானின் பூரணஅருளும், ஆண்டாளின் பூரணஅருளும் அவசியம் கிடைக்கும்.அவதாரம் என்பது மேலிருந்து கீழே இறங்கி வருவது. பூமாதேவி நம்மை எல்லாம் மேல்நிலைக்கு அழைத்துச் செல்வதற்காக, வைகுந்தத்தில் இருந்து கீழே நமக்காக இறங்கி வந்தாள் என்பதே அவள் அவதாரச் சிறப்பாகும்.
இதை மாமுனிகள் ‘‘இன்றோ திருவாடிப்பூரம்!எமக்காகவன்றோ இங்கே ஆண்டாள் அவதரித்தாள்’’ எனப் பாடுகின்றார். நாம் கர்மத்தைக் கழிப்பதற்காக பிறந்திருக்கின்றோம். நம்மை மீட்டெடுப்பதற்காக ஆண்டாள் அவதரித்தாள்.ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர்களில் இரண்டு ஆழ்வார்கள் ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள். ஒருவர் பெரியாழ்வார். மற்றவர் அவர் பெண் பிள்ளையான ஆண்டாள். இவர்களுக்குள் தந்தை மகள் என்கின்ற உறவோடு ஆசாரியன் சீடன் என்கிற உறவும் உண்டு. பெருமாளுக்கு இரண்டு ஆழ்வார்கள் பெண் கொடுத்து மாமனார் ஆனார்கள். ஒருவர் பெரியாழ்வார்.
‘‘ஒரு மகள் தன்னை உடையேன்; உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்; செங்கண்மால் தான்கொண்டு போனான்’’ என்று தன் திருமகளான ஆண்டாளை பெருமாளுக்கு மணம்செய்து தந்தவர். இன்னொரு ஆழ்வார் குலசேகர ஆழ்வார். சேரகுலவல்லி நாச்சியாரை அரங்கனுக்குத் திருமணம் செய்து கொடுத்து மாமனார் ஆனவர்.ஆண்டாள் இரண்டு பிரபந்தங்களை அருளிச் செய்திருக்கிறாள். ஒன்று திருப்பாவை. இரண்டு நாச்சியார் திருமொழி. இரண்டும் மாதத்தின் பெயரோடு துவங்குகிறது. திருப்பாவை “மார்கழி” என்ற மாதத்தின் பெயரோடு துவங்குகிறது. நாச்சியார் திருமொழி “தையொரு திங்களும்” என்று தை மாதத்தின் பெயரோடு துவங்குகிறது.
மார்கழியும் தையும் அடுத்தடுத்த மாதங்கள் என்பது மற்றுமொரு சிறப்பு.வேதத்தின் உச்சிப் பாகம் வேதாந்தம் என்று சொல்லப்படும் உபநிடதம். உபநிடதத்தின் கருத்துக்களை எளிய தமிழில் எல்லோரும் புரிந்துகொள்ளும்படி பாடியவள் ஆண்டாள். அவளுக்கு கோதை என்கிற திருநாமமும் உண்டு. அவள் பாடிய திருப்பாவை வேதம் அனைத்திற்கும் வித்தாகும். பாதகங்கள் தீர்த்து பரமன் அடி காட்டும் பெருமையைப் பெற்றது. அதனால் கோதை உபநிடதம் என்றே வழங்கப்படுகிறது.ஆழ்வார்கள் பன்னிரண்டு பேரில் ஒரே ஒரு பெண் ஆண்டாள். மீதியுள்ள 11 பேரும் ஆண்கள். அவர்களின் ஒட்டுமொத்த வாரிசாக ஆண்டாள் திகழ்கிறாள்.
எனவே இவளுக்கு ‘‘ஞானப்பூங்கொடி’’ என்று பெயர். ‘‘அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய்” என்பது மாமுனிகள் பாடியுள்ளார்.மிகச் சிறிய வயதில், மிகப் பெரிய வேதாந்த விஷயத்தைப் பாடியவள். மன உறுதியோடு “பெருமாளைத்தான் திருமணம் செய்துகொள்வேன்; வேறு யாரையும் மணம்செய்து கொள்ள மாட்டேன்’’ என்று கனவு கண்டு பாடி, அதை நனவாக்கிக் கொண்டவள் என்பதால், “பிஞ்சாய்ப் பழுத்தாள்” என்கிறோம். ஞானத்தின் ஏற்றத்தைக் கருதி இந்த அடைமொழி கொடுத்து அழைக்கின்றனர்.பெருமாள் ஆலயங்களில் எல்லாம் தனக்கு ஒரு தனிச் சந்நதி பெற்ற பெருமை உடையவள்.
பெருமாளுக்கு இடது புறம் ஆண்டாள் சந்நதியும், வலது புறம் தாயார் சந்நதியும் இருக்கும். தாயார் பெரும்பாலும் அமர்ந்த கோலத்தில் காட்சி தர, ஆண்டாள் நின்ற கோலத்தில் காட்சி தருவாள்.எல்லாப் பெருமாள் கோயில்களிலும் ஆண்டாள் இருப்பாள். ஆனால் வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெருமாள் இருப்பார். வில்லிபுத்தூர் கோயிலை பெருமாள் கோயில் என்று சொல்லமாட்டார்கள் ஆண்டாள் கோயில் என்பார்கள். வைணவர்கள் இன்னும் நைச்சியமாக ‘‘நாச்சியார் திருமாளிகை’’ என்பார்கள். வீட்டோடு மாப்பிள்ளையாக பெருமாள் இங்கே ஆண்டாள் மாளிகையில் இருக்கிறார். ஆண்டாள் வைத்த சட்டம்தான் அங்கு செல்லுபடியாகும்.திருவில்லிபுத்தூரில் நாச்சியாரும் பெரியாழ்வாரும் வணங்கிய பெருமை வடபத்ரசாயி என்கின்ற பெருமாளுக்கு உண்டு.
அவர் தான் இங்கே ஆதிதெய்வம். அவருக்குத் தனிக்கோயில் உண்டு. அது பழமையான கோயில். “வட” என்றால் ஆலமரம். ‘‘பத்ரம்” என்றால் இலை. “சாயி” என்றால் சயனம். உலகமெல்லாம் தன் வயிற்றில் அடக்கி பிரளயகாலத்தில் ஆலிலைமீது துயில் கொண்ட பெருமாள் இவர். எனவேதான் திருப்பள்ளி எழுச்சியாக பெருமாளை மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி துயில் எழுப்பினாள் ஆண்டாள்.ஸ்ரீ வில்லிபுத்தூரில் பற்பல தீர்த்தச் சிறப்புக்கள் உண்டு. திருமுக்குளம், திருவேணி தடாகம், திருப்பாற்கடல், சக்கர தீர்த்தம், கண்ணாடித் தீர்த்தம், கோனேரி தீர்த்தம், கண்வ தீர்த்தம், பஞ்ச தீர்த்தம், மண்டூகநதி என்று பல தீர்த்தங்கள் இங்கு உண்டு.
இதில் திருமுக்குளம் ஆண்டாள் நீராடிய தீர்த்தம்.ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வார், ஆண்டாளைச் சேவிக்க ஸ்ரீ வில்லிபுத்தூர் வந்தார். ஆண்டாள் நீராடிய திருமுக்குளத்தில் இறங்கி நீராடினார். நெடுநேரம் அவர் தண்ணீரில் முழுகுவதும் எழுவதுமாக இருந்தார். கரை ஏறுவது போலத் தெரியவில்லை. சீடர்கள் கேட்டனர். ‘‘குளத்தில் என்ன தேடுகிறீர்கள்.?’’ அப்பொழுது அனந்தாழ்வார் சொன்னார். ‘‘என் தாயார் ஆண்டாள், ஒரு காலத்தில் நீராடிய இந்தக் குளத்தில், அவள் பூசிய மஞ்சள் துண்டு ஏதாவது இருந்தால், பிரசாதமாக எடுத்துக்கொள்ளலாமே என்று தேடுகிறேன்’’ என்றாராம்.பாண்டியன் அவையில் வாதம்செய்து வென்றவர் பெரியாழ்வார்.
அப்பொழுது ஒரு பெரியாழ்வாருக்கு பொற்கிழி கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு வளமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைக்கவில்லை. தான் வழிபட்ட பெருமானுக்குத் திருப்பணிகள் செய்ய வேண்டும் என்று ராஜகோபுரத் திருப்பணியைச் செய்தார். நந்தவனம் ஒன்றை அமைத்து மாலை கட்டித் சமர்பித்தார். அந்த நந்தவனத்தின் துளசிச் செடியில் தான் ஆண்டாளைக் கண்டெடுத்து வளர்த்தார். அந்த நந்தவனம் “ஆண்டாள் நந்தவனம்” என்று வழங்கப்படுகிறது.மகாலட்சுமி சூடிய மாலையைக்கூட எம்பெருமான் ஏற்பதில்லை. பெருமாள் சூடிக்களைந்த மாலையைத்தான் பிராட்டி ஏற்றுக்கொள்வாள். ஆனால் முதல் முதலில் ஆண்டாள் சூடிய மாலையை ஏற்ற பெருமை பெருமானுக்கு உண்டு.
ஆண்டாள் சூடிக் களைந்த மாலையையே எம்பெருமானுக்கு சூட்டியதால் “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்ற திருநாமம் ஏற்பட்டது.மஹாலட்சுமித் தாயார் அவதரித்த பங்குனி உத்திரத்தில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் அமோகமாக நடக்கும். பொதுவாக எல்லாத் திருக்கோயில்களிலும் திருக்கல்யாணம் செய்தபின்தான் மாலை மாற்றுவார்கள். ஆனால் ஸ்ரீ வில்லிபுத்தூரில் மாலை மாற்றியபின்தான் திருக்கல்யாணம் நடக்கும். இந்த மாலைதானே பெருமாளை ஆண்டாள் மீது காதல் கொள்ளச் செய்தது.ஆண்டாள், தான் சூடிய மாலை தனக்கு அழகாக இருக்கும் என்று பார்க்கமாட்டாள். பெருமாளுக்கு அழகாக இருக்குமா? அவன் கழுத்துக்குச் சரியாக பொருந்துமா? என்று அழகு பார்த்து, பின் பெருமாளுக்குச் சமர்பிப்பாள். அப்படி அழகு பார்த்து மாலை தந்தவள் ஆண்டாள். அவள் அழகு பார்த்த இடம் திருக்கோயில் பிரகாரத்தில் இருக்கும் கண்ணாடிக் கிணறு.
ஆண்டாள்மீது பெரும் பக்திகொண்டவர் கம்ப நாட்டாழ்வார். ஆண்டாளின் நீராட்ட உற்சவத்தை சேவிக்க ஒருமுறை அவர் விரைந்து வில்லிபுத்தூருக்கு வந்து கொண்டிருந்தார். வெகுதூரம் நடந்த களைப்பில் சற்று நேரம் அவர் அருகில் உள்ள கிருஷ்ணன் கோயில் என்ற இடத்தில் படுத்தார். எழுந்தபோது, நீராட்ட உற்சவம் இந்நேரம் நிறைவு பெற்றிருக்கும் என்று தவித்து வேகமாகக் கிளம்பினார்.ஆண்டாளின் நீராட்ட உற்சவ ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அங்கே வைரத்தால் ஆன ஒரு அணிகலனைக் காணாமல் தேடிக்கொண்டு இருந்ததால் நீராட்டம் தாமதமாகிக் கொண்டேயிருந்தது.நீராட்ட உற்சவம் இந்நேரம் நிறைவுபெற்றிருக்கும் என்ற வருத்தத்தோடு வந்த கம்பர், திருமஞ்சனம் தொடங்கவில்லை என்று மகிழ்ந்தார். அப்போது அவர் கண்ணில் பட்டது அந்த வைர அணிகலன். அதை எடுத்து பட்டர்களிடம் கொடுக்க திருமஞ்சனம் நடைபெற்றது.
கம்பரும் ஆண்டாளின் அருட்கருணையை நினைத்து மகிழ்ந்தார். தைமாதப்பிறப்பன்று நடக்கும் இந்த திருமஞ்சனத்தின்போது சூட்டப்படும் அந்த அணிகலனுக்கு “கம்பர் கொச்சு” என்று பெயர்.“வேங்கடவற்கு என்னை விதி’’ என்று திருமலையப்பனிடம் காதல் கொண்டு பாடினாள் ஆண்டாள். அந்தக் காதலை வேங்கடவன் மறக்கவில்லை. எம்பெருமானார் மூலம் ‘ஆண்டாளின் திருமாலையை’ சூட விரும்புவதாக ஒரு முறை பட்டர்கள் மூலமாகத் தெரிவித்தார். ராமானுஜர் அதற்கான ஏற்பாட்டைச் செய்தார். புரட்டாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் ஆண்டாள் அனுப்பிய சூடிக் களைந்த மாலையை, தன் கழுத்தில் சூட்டிக்கொண்டு தான் திருவேங்கடவன் உற்சவம் கண்டருளுகிறான்.திருமாலிருஞ்சோலை அழகருக்குத் தன்னுடைய மனதால் நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்கார அடிசிலும் சமர்ப்பிக்க எண்ணினாள் ஆண்டாள்.
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ!
– என்ற பாடலில் இதை அவள் விண்ணப்பித்தாள்.எம்பெருமானார் நிஜமாகவே ஆண்டாளின் மனதின் விருப்பத்தை நிறைவேற்றினார். இதனால் உள்ளம் பூரித்த ஆண்டாள், ராமானுஜர் ஸ்ரீவில்லிபுத்தூர் வருகின்றபொழுது, தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றிய தமையனாகக் கருதி, ‘‘அண்ணா’’ என்று அழைத்து, கர்ப்பக்கிரகத்தை விட்டு சற்று வெளியே வந்தாள்.அதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உற்சவமூர்த்திகள் கர்ப்பகிரகத்தில் மூலவரோடு இல்லாமல் அர்த்த மண்டபத்தில் எழுந்தருளி இருக்கின்றனர். “கோயிலண்ணன் புறப்பாடு” என்று இங்கே ஒரு புறப்பாடு ராமானுஜருக்கு உண்டு.பெரியாழ்வாரின் திருவாராதனப் பெருமாளாகிய லட்சுமி நாராயணப்பெருமாளை ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார்திருமாளிகை, முதல் பிரகாரத்தில், தென்கிழக்கு மூலையில், வடதிசை நோக்கி அருளும் நிலையில் எப்பொழுதும் நாம் சேவிக்கலாம்.
ஒருமுறை சுவாமி வேதாந்த தேசிகன் மௌனவிரதம் இருந்தார். பிரதோஷம் அன்று மௌன விரதம் இருப்பது அவருக்கு வழக்கம். அனுஷ்டானத்தை அவர் எக்காரணத்தை முன்னிட்டும் மாற்ற விரும்பமாட்டார். அத்தனை வைராக்கியம் உடையவர். ஆனால் மௌன விரதத்தை கலைத்து, அவர் வாயால் ஸ்லோகம் பாடுவதைக் கேட்க விரும்பிய ஆண்டாள், தான் வழக்கமாகப் போகும் பாதையை மாற்றிக்கொண்டு, அவர் இருந்த வீதிக்கு எழுந்தருளினாள். ஆண்டாளை வரவேற்ற தேசிகன், தன் மௌனத்தைக் கலைத்துக் கொண்டு ஆண்டாள் மீது 29 ஸ்லோகங்களால் “கோதாஸ்துதி” என்ற நூலை அருளிச் செய்து சமர்ப்பித்தார். அதைக் கேட்டு மகிழ்ந்த ஆண்டாள், அவருக்கு தீர்த்தப் பரிவட்டமாலை மரியாதைகளைச் செய்து ஆஸ்தானத்துக்கு எழுந்தருளினாள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கக்கூடிய ஆடிஉற்சவத்தில் மிகச் சிறப்பான உற்சவம் திருத்தேரோட்டமும், ஐந்து கருடசேவையும், முத்துக்குறிசேவையும் ஆகும். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். பஜனை, கும்மி, கோலாட்டம் என்று ஸ்ரீவில்லிபுத்தூரே அமர்க்களப்படும்.கிருஷ்ண தேவராயர் இத்தலத்து எம்பெருமானின் மீதும், ஆண்டாளின் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கிருஷ்ணதேவராயர் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆலயத்தில் ஏராளமான திருப்பணிகளைச் செய்திருக்கிறார். அது மட்டுமன்றி, அவர் மிகப்பெரிய கவிஞராகவும் இருந்ததால், ஆண்டாளின் பெருமைகளை ‘‘ஆமுக்த மால்யதா’’ என்று ஒரு காவியமாகப் படைத்து ஆண்டாளுக்குச் சமர்ப்பித்தார்.
ஸ்ரீ ரங்கநாதனும் திருவேங்கடநாதனும் விரும்பிய மாலையை, திருமாலிருஞ்சோலை அழகன் விரும்பாமல் இருப்பானா? சித்ரா பௌர்ணமியன்று வைகையில் எழுந்தருளும்போது, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டுதான் லட்சக்கணக்கான பக்தர்களுக்குக் காட்சி தருகிறான்.இப்படித் தொட்ட இடமெல்லாம் “ஆடிப் பூர நாயகியான” ஆண்டாளின் பெருமை விரிந்துகொண்டேயிருக்கும். நீங்கள் ஒருமுறை ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று வாருங்கள். உங்கள் வாழ்வில் நடக்கும் அற்புதங்களைக் காணுங்கள்.
The post அற்புதங்கள் நிகழ்த்தும் ஆண்டாள் appeared first on Dinakaran.