×

ஏஐ மட்டுமல்ல… அனைத்திலும் ஷாக்: அமெரிக்காவுக்கு ஆட்டம் காட்டும் சீனா

உலகத்துக்கே தலைமை தான்தான் என்ற மனப்பாங்கை அமெரிக்கா என்றுமே கைவிட்டதில்லை. அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் வல்லரசு நாடு அது என்பதில் பலருக்கும் மாற்றுக்கருத்து இருந்ததில்லை. டிரம்ப் அதிபரானதும் பழி தீர்க்காத குறையாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கனடா, மெக்சிகோ மற்றும் சீன பொருட்கள் இறக்குமதிக்கு வரியை உயர்த்திவிட்டார். இவற்றில், அமெரிக்காவின் பரம வைரியான சீனா, வேறு விதமாக ஷாக் கொடுத்திருக்கிறது. ‘டீப் சீக்’ என்ற ஏஐ செயலிதான் அது.

ஏஐ என்றாலே (செயற்கை நுண்ணறிவு) சாட் ஜிபிடி தான் என்ற மாயையை உடைத்ததோடு, மிகக் குறைந்த செலவில் அதனை உருவாக்கியிருக்கிறது சீனா. நவீன சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்திருந்தது. ஆனால், இதுதான் , தரம் குறைந்த சிப்களை பயன்படுத்தி குறைந்த செலவில் டீப் சீக் ஏஐ உருவாக்க காரணமாக அமைந்து விட்டது. இது ஒருபுறம் இருக்க, 64 தொழில்நுட்பங்களில் 57ல் அமெரிக்காவை சீனா பின்னுக்கு தள்ளி விட்டது, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

2007ம் ஆண்டு வெறும் 3 தொழில் நுட்பங்களில் மட்டுமே முன்னணி வகித்த சீனா, 17 ஆண்டுகளில் தொழில்நுட்ப உலகை வியாபித்திருக்கிறது. உத்தி கொள்கைகளுக்கான ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில், எந்தெந்த தொழில்நுட்பங்கள், துறைகளில் சீனா முன்னணியில் உள்ளது என்ற விவரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஏசிஎம் எனப்படும் எடை குறைந்த வலுவான கான்கிரீட் போன்றவற்றை உருவாக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தில் சீனா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா 3வது இடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதுபோல் மேம்பட்ட பாதுகாப்பில் சீனா முதலிடமும், அமெரிக்கா 2வது இடமும் பிடித்துள்ளன.

இதுமட்டுமின்றி, கோட்டிங், உயர் திறன்வாய்ந்த கருவிகள், செமி கன்டக்டர், மருந்து போன்றவற்றில் பயன்படுத்தப்படும் நுண் தொழில்நுட்பங்கள், அரிய தாதுக்களை பிரித்தெடுத்தல், செமி கண்டக்டர்கள், 3டி பிரிண்டிங், தரவு ஆராய்ச்சி, தடுப்பூசி, பயோ கெமிக்கல் போன்றவற்றை தயாரிக்கும் தொழில்நுட்பம் உட்பட 57 தொழில்நுட்பங்களில் சீனா முதலிடத்தில் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஒருங்கிணைந்த சர்க்யூட் வடிவமைப்பு, நவீன விமான இன்ஜின்கள், டிரான்கள், மின்சார பேட்டரிகள், ஒளிமின்னழுத்தவியல், மேம்பட்ட ரேடியோ அதிர்வெண் தொடர்பு போன்றவற்றில் சீனா சிறந்து விளங்குவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஆய்வுகளுக்கு ரூ.2,700 கோடி ஒதுக்கீடு
பல தொழில் நுட்பங்களிலும் சீனா முதலிடத்துக்கு வருவதற்கு அதிபர் ஜி ஜின்பிங்கின் ‘மேட் இன் சீனா 2025’ திட்டம் தான் காரணம் என கூறப்படுகிறது. முக்கிய தொழில்நுட்பங்களில் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்காக 2,700 கோடிக்கு மேல் சீன அரசு நிதி வழங்கியுள்ளது. இதற்கேற்ப தொழில்துறை கொள்கைகள் வகுக்கப்பட்டன. சீன உற்பத்தி துறைக்கு பொருட்கள் சப்ளையும் தடைபடாத அளவு மேம்பாடுகள் செய்யப்பட்டன. இதுதான் பல துறைகளில் சீனா அமெரிக்காவை பின்னுக்குத் தள்ள காரணம் என கூறப்படுகிறது.

* பல துறைகளில் 3ம் இடம் முன்னேறும் இந்தியா
அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக பல ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த துறைகள், ஆராய்ச்சிகளில் இந்தியா முன்னேறி வருவது ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. பல துறைகளில் 3வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. குறிப்பாக, கடலுக்கு அடியில் வயர்லெஸ் தகவல் தொடர்பு, ரேடியோ அதிர்வெண் தொடர்பு, சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் தொழில் நுட்பங்கள், கோட்டிங், செமிகன்டக்டர்கள், தரவு ஆராய்ச்சி, ஒருங்கிணைந்த சர்க்யூட் வடிவமைப்பு, சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ஏஐ தொழில்நுட்பம், நவீன விமான இன்ஜின்கள் தயாரிப்பு, அணுசக்தி கழிவு மேலாண்மை மற்றும் மறு சுழற்சி, போட்டோனிக் சென்சார்கள் போன்ற 17 துறைகளில் 3வது இடம் பிடித்துள்ளது. ஒரு சில துறைகளில் இரண்டாவது இடம் வகிக்கிறது.

The post ஏஐ மட்டுமல்ல… அனைத்திலும் ஷாக்: அமெரிக்காவுக்கு ஆட்டம் காட்டும் சீனா appeared first on Dinakaran.

Tags : China ,America ,Trump ,Canada ,Mexico ,
× RELATED அமெரிக்காவில் கல்வித் துறை கலைப்பு.....