×

மழையால் வெடிப்பு ஏற்படாது, வெயிலில் தார் உருகாது கிளாஸ் கிரிட் தொழில்நுட்பத்துடன் சாலை: படிப்படியாக பல இடங்களில் பயன்படுத்தப்படும்; சோதனை அடிப்படையில் ஆம்பூரில் அமைப்பு

* சிறப்பு செய்தி
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பவை சாலைகள். இந்த சாலைகளின் வளர்ச்சி மற்றும் போக்குவரத்து பெருக்கமே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரத்த ஓட்டமாக மாறுகிறது. நமது நாட்டின் தொழில் மற்றும் போக்குவரத்து வளர்ச்சியை நவீனமாக்க அதிநவீன வடிவில் விரைவு சாலைகளை அரசு தற்போது அமைத்து வருகிறது. காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலைகள் அமைக்கபட்டு வருகின்றன. இதில் சாலை விரிவாக்கம், உயர் மட்ட சாலைகள், ரயில் தண்டவாளங்களை கடந்து செல்ல மேம்பாலங்கள், சாலை விபத்து ஏற்படாத வகையில் சாலையை கடப்போர் செல்ல குகைவழி பாதை ஆகியவை அடங்கும்.

இதில் அதிக நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது என்எச் 48. சென்னையில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, வேலூர் மாவட்டத்தில் வேலூர், பள்ளிகொண்டா வழியாக திருப்ப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர், ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி வழியே தேசிய நெடுஞ்சாலை என்எச் 48 பெங்களூர் வரை செல்கிறது. கிருஷ்ணகிரி- வாலாஜா இடையேயான சுமார் 148 கிமீ தூர சாலையை தேசிய நெடுஞ்ச்சாலைதுறை ஆணையத்தின் கீழ் பராமரிக்கபட்டு வருகிறது. பள்ளிகொண்டா, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் செயல்படும் சுங்க சாவடிகள் கொண்ட பகுதிகள் பல இந்த பகுதியில் அடங்கும்.

இந்த சாலையில் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் மேம்பாலம் மற்றும் ஆம்பூரில் ஓஏஆர் சிக்னல் துவங்கி மங்களாபுரம் வரை 1.40 கிமீ தொலைவிற்கு அதிநவீன உயர்மட்ட 6 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக சுமார் 25 அடி ஆழத்தில் உயர்தரத்திலான 32 தூண்கள் கட்டும்பணி முடிவடையும் தருவாயில் உள்ளன. சுமார் 25 அடி அகலமுள்ள இந்த 6 வழி சாலையை இந்த தூண்கள் தாங்கி நிற்கின்றன. இதில் ஆம்பூர் ஓஏஆர் சிக்னலையொட்டி உள்ள அரசு நிதியுதவி மேனிலைபள்ளி, ரயில்நிலையம் மற்றும் நேதாஜி ரோடு சந்திப்பு, பஸ் நிலையம், பேர்ணாம்பட்டு சாலை சந்திப்பான ராஜிவ்காந்தி சிலை சிக்னல் ஆகிய இடங்களில் குகைவழி பாதைகள் அமைக்கபட்டு வருகின்றன.

இதில் மெட்ரோ நகரங்களுக்கு இணையாக ராஜிவ்காந்தி சிலையருகே குகைவழி பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை 2024ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளபட்டன. ஆனால், இந்த சாலையில் ஒரு இடத்தில் கட்டுமான பணியில் சரிவு ஏற்பட்டதால் அந்த இடத்தில் பணிகள் விரைவில் துவங்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் இந்த மேம்பாலம் மற்றும் சாலைகள் அமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறை ஆணையம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது.

டெக், விங்க்ஸ் அடிப்படையில் நடுதூணில் ஒட்டுமொத்த பாலத்தை தாங்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கட்டமாக ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரத்தில் இருந்து சுமார் 1.2 கிமீ தொலைவிலான ஓஏஆர் சிக்னல் வரை நெடுஞ்சாலையில் கிளாஸ் கிரிட் எனும் தொழில்நுட்பத்தை புகுத்தி உள்ளனர். தாருடன் கூடிய இந்த வலைபின்னல்களை சாலை முழுவதும் பரப்பி இதன் மீது தார் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை அமைக்க சற்று கூடுதல் செலவு ஆனாலும் இந்த தொழில்நுட்பத்தால் சாலையின் தரம் உயர்கிறது.

சாலையின் ஆயுள் காலம் 30 சதவீதம் வரை உயரவும், மழை மற்றும் வெயில் காலங்களில் சாலையில் ஏற்படும் வெடிப்பு, தார் உருகுதல் ஆகியவற்றை தவிர்க்கவும் சோதனை ரீதியாக இந்த சாலை வடிவமைப்பு மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் ரோடு கிரிப் அதிகரித்து தருவதால் விபத்தை தடுக்கவும் வழிவகை உருவாகும் என சாலை அமைத்து வரும் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் இந்த சாலையில் இந்த தொழில்நுட்பம் வெற்றி பெறும் நிலையில், படிப்படியாக பல்வேறு இடங்களில் பயன்படுத்தி சாலையின் தரம் மற்றும் பாதுகாப்பு உயர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* கிளாஸ் கிரிட் எப்படி
கிளாஸ் கிரிட் என்பது பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த கிளாஸ் கிரிட் ஒருவிதமான பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கலந்த கலவையில் வலைப்பின்னல் உருவாக்கி தாரில் தொய்த்து எடுக்கப்படுகிறது. தொடர்ந்து சாலையில் ஜல்லி கற்கள் கொட்டி ரோடு ரோலர் மூலம் நன்றாக அழுத்தம் கொடுக்கப்பட்டு பின்னர், கிளாஸ் கிரிட் வலைப்பின்னல் போடப்படுகிறது. அதன் மீது படிப்படியாக தார் ஊற்றப்பட்டு அதிநவீன ரோடு ரோலர் மூலம் பல டன் எடை அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் சாலையின் மீது முழுமையான ஒரு லேயர் உருவாகிறது. இதன் மூலம் சாலையின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. சாதாரண சாலை அமைப்பதைவிட கிளாஸ் கிரிட் சாலை அமைக்க ஒன்றரை மடங்கு செலவு அதிகரிக்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மழையால் வெடிப்பு ஏற்படாது, வெயிலில் தார் உருகாது கிளாஸ் கிரிட் தொழில்நுட்பத்துடன் சாலை: படிப்படியாக பல இடங்களில் பயன்படுத்தப்படும்; சோதனை அடிப்படையில் ஆம்பூரில் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED அறியாமல் வரும் உறவுகள்!