×

450க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்திய சர்வதேச தோல் மற்றும் தோல் பொருட்கள் கண்காட்சி: இன்று முதல் 3 நாள் நடக்கிறது

சென்னை,பிப்1: சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் விடுதியில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக் கழக செயல் இயக்குநர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதிக் கழகம் இணைந்து நடத்தும் 38வது இந்திய சர்வதேச தோல் மற்றும் தோல் பொருட்கள் கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி 3ம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படும். இது 12000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தோல் பொருட்கள் மற்றும் காலணி தொழில் தொடர்பான அனைத்து மூலப் பொருட்கள், ரசாயனங்கள், இயந்திரங்கள் இதில் காட்சிப்படுத்தப்படும். பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகள் தனி அரங்குகளை இதில் அமைத்துள்ளன.

இந்த கண்காட்சியில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக் கழகம் வடிவமைப்பாளர் கண்காட்சியையும் இங்கு நடத்துகிறது. இதில் 36 வடிவமைப்பாளர்கள், வடிவமைப்பு முன்மாதிரிகள் மற்றும் புதுமைகளை காட்சிப்படுத்துகின்றனர். இந்தியத் தோல் பொருட்கள் மற்றும் காலணி துறை அடுத்த 5 ஆண்டுகளில் இப்போதுள்ள 23.69 பில்லியன் டாலரில் இருந்து 47 பில்லியன் டாலர் உற்பத்தியை எட்டும். இதன் மூலம் இந்தியாவில் 25 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின் போது தோல் பொருட்கள் ஏற்றுமதிக் கழக தென் மண்டல தலைவர் அப்துல் வஹாப், இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பின் பொது மேலாளர் ஹர்ஷ் கொண்டிலியா, துணை பொது மேலாளர் விவேகானந்த் விவேக் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் கொள்கையால் வளர்ச்சி
தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை வெளியிடப்பட்ட பின் தமிழ்நாட்டில் காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி சிறப்பாக அமைந்துள்ளது. கொள்கை வெளியிடப்பட்ட பின் 24 பில்லியன் டாலர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்கை மூலமாக 6 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு தற்போது 3 நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளது, முதலிடுகளும் அதிகரித்துள்ளது என தோல் பொருட்கள் ஏற்றுமதிக் கழக செயல் இயக்குநர் செல்வம் தெரிவித்தார்.

The post 450க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்திய சர்வதேச தோல் மற்றும் தோல் பொருட்கள் கண்காட்சி: இன்று முதல் 3 நாள் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Indian International Leather and Leather Products Exhibition ,Chennai, ,Selvam ,Leather Products Export Corporation ,Anna Salai, Chennai ,38th Indian International Leather and Leather Products Exhibition ,Indian Trade Promotion Organization ,Dinakaran ,
× RELATED ஓபிஎஸ்ஸுக்கு அதிமுக திடீர் வேண்டுகோள்