×

வெளிநாட்டு தமிழர்களுக்கு பயிற்றுவிக்க ரூ.10கோடி தமிழக நாட்டுப்புற கலைகள் உலக அரங்கில் ஒளிர வாய்ப்பு: கவனம் ஈர்த்த முதல்வரின் அறிவிப்பு, கலைபண்பாட்டு அமைப்புகள் பெருமிதம்

இயல்பாக தோன்றி, இயற்கையோடு இணைந்து, உணர்ச்சியின் உறைவிடமாய் நின்று, மக்களை களிப்பில் ஆழ்த்துவதே நாட்டுப்புறக் கலைகளின் தனிச்சிறப்பு. இந்த வகையில் தெருக்கூத்து, கரகாட்டம், வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தோற்பாவை கூத்து, சிலம்பாட்டம், குறவன்குறத்தி, மயிலாட்டம், கும்மிப்பாட்டு, பொய்க்கால் குதிரை என்று தமிழ்மண்ணின் தனித்துவத்தை உணர்த்தும் நாட்டுப்புறக்கலைகள் ஏராளம். இந்தக்கலைகள் ஒவ்வொன்றும், நமது வீரம் சார்ந்த மரபுகளின் மாண்புகளை பறைசாற்றியது.

ஒவ்வொரு புதுக்கலையின் வளர்ச்சியும், மற்றொரு கலையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்பதும் உண்மை. உதாரணமாக ஆதிக்கலையான தெருக்கூத்தில் இருந்து நாடகமும், அதன் தொடர்ச்சியாக சினிமாவும் தோன்றியது. இப்படி ஒவ்வொரு கலையும் ேதய்ந்து ஓய்வதற்கு காரணங்கள் ஏராளம். ஆனாலும், அதன் சுவடுகள் இன்றும் நம்மிடையே அழியாத கோலங்களாய் நின்று மண்வாசம் வீசிக்கொண்டிருக்கிறது. இப்படி நமது முன்னோர் ஊட்டி வளர்த்த கலைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. இவற்றை வெறும் பொழுதுபோக்கு என்ற ஒற்றை வரியில் கடந்து சென்று விடமுடியாது.

வீரம் விதைத்த களங்களில், விவேகம் பரப்பிய பெருமை இந்த கலைகளுக்கு உண்டு. இப்படி நமது முன்னோர் உருவாக்கித்தந்த அரிய கலைகளை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும். அதன் வேர்கள் சோர்ந்து விடாமல் இருப்பதற்கு, உற்சாகம் என்னும் நீரூற்றி வளர்க்க வேண்டும் என்பது கலைபண்பாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அரசு விழாக்கள், பாரம்பரிய பண்டிகை கொண்டாட்டங்களில் நாட்டுப்புற கலைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்கெல்லாம் சிகரமாக, வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு நாட்டுப்புற கலைகளை பயிற்றுவிக்க ரூ.10 கோடி ஒதுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது தமிழ் மண்ணின் நாட்டுப்புற கலைகளை உலக அரங்கில் கொண்டு சேர்க்கும் என்கின்றனர் கலைபண்பாட்டு ஆய்வாளர்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு கலைபண்பாடு மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழர்களின் பாரம்பரிய கலைகளும், மண்ணின் மகிமை கூறும் விளையாட்டுகளும் தேய்பிறையாகி வருகிறது. உதாரணமாக தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 3நாட்கள் கொண்டாடப்படும். அப்போது முக்கிய நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டிகள் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

அதே நேரத்தில், கடந்த காலங்களில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு மட்டுமன்றி பரிவேட்டை, சிலம்பம், சடுகுடு ஓட்டம், இளவட்டக்கல் தூக்குதல், வழுக்குமரம் ஏறுதல், வண்டி ஓட்டம், ஆடுபுலி ஆட்டம் என்று ஆண்களுக்கான விளையாட்டு போட்டிகளும் அதிகளவில் நடக்கும். பெண்கள், சிறுவர்களுக்கான தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், நொண்டியாட்டம், கண்ணாமூச்சி, கிச்சுகிச்சு தாம்பூலம் என்று நூறுக்கும் மேற்பட்ட விளையாட்டுகள் நடக்கும்.

இது மட்டுமன்றி கரகாட்டம், ஒயிலாட்டம், குறவன்குறத்தி, கோலாட்டம், கும்மியாட்டம் என்று கலைநிகழ்ச்சிகளும் களை கட்டும். ஆனால் விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி, காலப்போக்கில் இவை அனைத்திற்கும் தடைக்கல்லாகி விட்டது. இதனால் அரிய கலைகள் அனைத்தும் அழிவின் பிடியில் சிக்கியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு நடத்தும் ஒவ்வொரு விழாவிலும் இது போன்ற கலைகளுக்கு புத்துயிர் ஊட்டி வருகிறது.

அரசு விழாக்களில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், பள்ளிகளில் மாணவர் கலைத்திருவிழா, புத்தக கண்காட்சியில் தமிழர் மரபியல் கலைகளுக்கு முக்கியத்துவம், தமிழ்நாடு கலைசங்கமம் போன்ற நிகழ்வுகள் நமது பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் ஊட்டி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு, நாட்டுப்புற கலைகளை பயிற்றுவிக்க ரூ.10கோடி ஒதுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். தமிழரின் முகவரியாய் வெளிநாடுகளில் வசிக்கும் நமது சகோதரர்கள், அங்கு நடக்கும் திருவிழாக்களில் நமது கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிலிருந்து அங்கு சிறந்த கலைஞர்களை அனுப்பி, தலைமுறைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்பது மிகவும் உற்சாகமூட்டும் செயலாகும். நமது மண்ணின் கலைகளை தமிழர் தலைமுறை அயல்மண்ணில் நிகழ்த்தும் போது அங்குள்ளவர்களுக்கு அவை பரிட்சயமாகும். இதன்மூலம் கலைகள், அடுத்தடுத்த நிலைகளுக்கு சென்று உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் வாய்ப்பு உருவாகும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

* ஒவ்வொன்றிலும் பல ரகம் இருக்கு
நாட்டுப்புற கலைகள் என்றதும், நமது நினைவுக்கு முதலில் வருவது கரகாட்டம். கரகாட்டம் என்பது தலையில் பூரணகும்பம் என்னும் சிறியகுடத்தை வைத்து கீழே விழாமல், உடலை வளைத்து ஆடும் ஒரு அற்புதம். இப்படி வைக்கப்பட்ட குடத்தில் நீர்நிரப்பி, தேங்காய் வைத்து மூடியிருப்பார்கள்.

சந்தனம், வேப்பிலை, பூமாலை, எலுமிச்சை போன்றவற்றால் அலங்கரித்து தலைமேல் வைத்துக் கொள்வார்கள். இது எந்தநிலையிலும் கீழே விழுந்து விடாமல் ஆடுவது தான், கரகாட்ட கலையில் தனிச்சிறப்பு. இந்த கரகாட்ட கலையிலும் பூங்கரகம், சக்திகரகம், ஆட்டக்கரகம் என்று பலவகைகள் உண்டு. ஒவ்வொரு கலைக்கும் உட்கலை என்ற ரீதியில் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைகள் நம்மிடம் இருந்தது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

* வலிமைக்கும் காரணமானது
‘‘தமிழர்கள் நாம் கண்டுபிடித்த விளையாட்டுகள் அனைத்தும் நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாச்சாரம், பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கைமுறை, விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் நம் மனதுக்கும், உடலுக்கும் நம்பிக்கை வழங்கக்கூடிய விளையாட்டாகவே இருந்தது. இதில், ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு நன்மை உள்ளது.

வழுக்குமரம் ஏறுதல் ஆடவரின் உடல் திறனை அதிகரித்தது. ஆடுபுலி ஆட்டம் அறிவுத்திறனை வளர்த்தது. உறியடி மனஉறுதியை கொடுத்தது. ஜல்லிக்கட்டு தமிழரின் ஒப்பற்ற வீரத்திற்கு சாட்சியமானது. சிலம்பம் காலுக்கும், உடலுக்கும் உரமூட்டியது. இதன் காரணமாகவே நமது முன்னோர்கள் உடல் வலிமையோடு வாழ்ந்தனர்,’’ என்பது மரபுக்கலை ஆய்வாளர்கள் கூறும் தகவல்.

* கலைகள் தோன்றிய வரலாறு இதுதான்
‘‘முதன் முதலில் தமிழர்களின் வாழ்க்கை மலைச்சாரல்களில் தான் தோன்றியது. அப்போது அவர்கள் வேட்டையாடி உணவை பெற்றனர். இதற்காக வில், அம்பு, கவண், ஈட்டி போன்றவற்றை கருவிகளாக பயன்படுத்தினர். காய், கனி, கிழங்குகளை தேடி உண்டு வாழ்க்கை நடத்தினர். ஒரு கட்டத்தில் மிகச்சிறிய அளவில் புன்செய் பயிர் செய்யவும் அறிந்து கொண்டனர். அதற்கு பிறகு புல்பூண்டுகள், இலை தழைகளால் வேயப்பட்ட குடிசைகளில் குடியேற ஆரம்பித்தனர்.

மலைநாட்டு மக்கள் என்று பெயர் சூட்டிக்கொண்ட இவர்கள், தம்மை போன்ற வடிவங்களில் தெய்வங்களையும் உருவாக்கி வழிபட ஆரம்பித்தனர். அவற்றில் தங்கள் வாழ்க்கை முறை சார்ந்த பொழுது போக்கு அம்சங்களிலும் மனதை திருப்ப ஆரம்பித்தனர். இது பாட்டு, விளையாட்டு, பறையிசை, குழலிசை, தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கரகாட்டம், ஓயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் என்று அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்ல ஆரம்பித்தது,’’ என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

The post வெளிநாட்டு தமிழர்களுக்கு பயிற்றுவிக்க ரூ.10கோடி தமிழக நாட்டுப்புற கலைகள் உலக அரங்கில் ஒளிர வாய்ப்பு: கவனம் ஈர்த்த முதல்வரின் அறிவிப்பு, கலைபண்பாட்டு அமைப்புகள் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Poikkal ,
× RELATED இரு மொழிக் கொள்கையில் உறுதியாக...