சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். சென்னை உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் விழாவில் ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். குடியரசு தின விழாவில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். ராணுவம், கடற்படை, விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ரவி ஏற்கிறார்.
நாடு முழுவதும் 76வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இதற்காக, மெரினா கடற்கரை அருகே உழைப்பாளர் சிலை அமைந்துள்ள பகுதியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
தேசியக்கொடி ஏற்றப்பட்டதும், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடிக்கு மலர் தூவப்பட்டது. தொடர்ந்து முப்படை வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையின் அணி வகுப்பு நிகழ்ச்சி மற்றும் மாணவ – மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
மேடைக்கு வருகை தரும் ஆளுநரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முடிந்ததும் முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார். குடியரசு தின நிகழ்ச்சியில் நீதிபதிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மெரினா காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் மேற்பார்வையில் இணை கமிஷனர்கள் மற்றும் துணை கமிஷனர்கள் தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையம், முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் நகர் பகுதிகளில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை பகுதியில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post 76வது குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். appeared first on Dinakaran.