×

மாவட்ட நிர்வாகம் சார்பில் சேலம் காந்தி ஸ்டேடியத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்: கலெக்டர் பிருந்தாதேவி கொடியேற்றுகிறார்

சேலம், ஜன.26: சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (26ம்தேதி) காந்தி ஸ்டேடியத்தில் நடக்கும் குடியரசு தினவிழாவில், கலெக்டர் பிருந்தாதேவி கொடியேற்றுகிறார். நாடு முழுவதும் குடியரசு தினவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில், காந்தி ஸ்டேடியத்தில் குடியரசு தினவிழா நடக்கிறது. காலை 8.05மணிக்கு, மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் கௌரவிக்க உள்ளார். விழாவில், சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறையினருக்கு காவலர் பதக்கங்களும், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. அத்துடன், பல்வேறு துறைகளின் சார்பில், அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கப்படவுள்ளது.

இதில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர். விழாவை முன்னிட்டு நேற்று 2வது நாளாக போலீசார் அணிவகுப்பு மற்றும் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி ஒத்திகை நடைபெற்றது. இதனிடையே, குடியரசு தினவிழாவை முன்னிட்டு சேலம் காந்தி ஸ்டேடியத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழாவில் கலந்துகொள்ளும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்காக சாமியானா பந்தல் போடப்பட்டு, தகுந்த குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விழாவையொட்டி காந்தி ஸ்டேடியம் முழுவதும் போலீசார் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அதன்ஒருபகுதியாக நேற்று ஸ்டேடியம் முழுவதும் போலீசார் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் கொண்டு சோதனையிட்டனர்.

1,250 மாணவர்களின் கலைநிகழ்ச்சி
குடியரசு தினத்தை முன்னிட்டு, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தேசபக்தி, மனிதநேயம், நாட்டுப்புற நடனம், பரதம் மற்றும் கிராமிய நடனம், தமிழ்மொழியின் மேன்மை உள்ளிட்ட தலைப்புகளில் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில், ஆட்டையாம்பட்டி அரசு மகளிர் பள்ளி, நெத்திமேடு ஜெயராணி மெட்ரிக் பள்ளி, குகை செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, கோகுலம் மெட்ரிக் பள்ளி மற்றும் தாரமங்கலம் ெசங்குந்தர் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1,250 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்துகின்றனர்.

The post மாவட்ட நிர்வாகம் சார்பில் சேலம் காந்தி ஸ்டேடியத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்: கலெக்டர் பிருந்தாதேவி கொடியேற்றுகிறார் appeared first on Dinakaran.

Tags : Republic Day ,Salem Gandhi Stadium ,Collector Brindadevi ,Salem ,Gandhi Stadium ,Salem District Administration ,Salem District Administration… ,Collector ,Brindadevi ,Dinakaran ,
× RELATED டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற கல்லூரி மாணவருக்கு பாராட்டு