- கொல்லிமலை மலை
- Senthamangalam
- Kollimalai
- நாமக்கல் மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆந்திரப் பிரதேசம்
- கர்நாடக
- தின மலர்
சேந்தமங்கலம், ஜன.26: கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி விட்டு வீசிச் செல்லும் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் வகையில் ஆங்காங்கே இரும்புத் தொட்டி வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, அறப்பளீஸ்வரர் கோயில், சினி பால்ஸ், மாசிலா அருவி, எட்டிக்கை அம்மன் கோயில், நம் அருவி, சந்தன பாறை அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சீக்குப்பாறைப்பட்டி காட்சி முனையம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர்.
கொல்லிமலையில் ஏற்கனவே பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் முற்றிலுமாக தடை விதித்துள்ளது. மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு பொழுதுபோக்கு தலங்களுக்கு செல்லும்போது எடுத்து வரும் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்களை காலியானவுடன் அங்கேயே வீசி செல்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கு தலங்கள் மற்றும் மலைச்சாலையில் 34, 43, 50, 54 ஆகிய கொண்டை ஊசி வளைவுகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் காலியான தண்ணீர், குளிர்பான பாட்டில்களை போட்டுச் செல்ல இரும்பினால் அமைக்கப்பட்ட பாட்டில் போன்ற வடிவத்தில் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் கூறுகையில், ‘ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகள் வீசிச்செல்லும் பாட்டில்களை சேகரிக்க அதிக நேரம் செலவிட வேண்டி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பொழுதுபோக்கு இடங்களிலும் இரும்பு கூண்டு போல பாட்டில் சேகரிப்பு தொட்டி வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை அதில் போட்டுச் செல்லலாம்,’ என்றார்.
The post கொல்லிமலை மலைப்பாதையில் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க இரும்பு தொட்டி வைப்பு appeared first on Dinakaran.