×

இன்று குடியரசு தினவிழா; மாவட்டம் முழுவதும் 700 போலீசார் பாதுகாப்பு: முக்கிய இடங்களில் தீவிர சோதனை

நாமக்கல், ஜன.26: நாமக்கல்லில் இன்று குடியரசு தினவிழா கொண்டாட்டத்தையொட்டி, மாவட்டம் முழுவதும் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதத்தை தடுக்க, முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், இன்று(26ம் தேதி) 76வது குடியரசு தினவிழா கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. காலை 8.05 மணிக்கு மாவட்ட கலெக்டர் உமா தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். குடியரசு தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள், கடந்த 3 நாட்களாக மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது. நேற்று காலை இறுதி ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையொட்டி, விழா நடைபெறும் மைதானத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு அலுவலகங்களில் இன்று குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க, காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட எல்லையில் உள்ள வாகன சோதனைச்சாவடிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேர வாகன தணிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதிகள், ஓட்டல்களில் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். அங்கு, சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கியுள்ளனரா என விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் 76வது குடியரசு தின விழா மற்றும் கிராமசபை கூட்டங்கள் நாளை(இன்று) நடைபெறுகிறது. இதனையொட்டி, மாவட்டம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் 700க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், வெடிபொருள் கண்டுபிடித்தல் செயலிழக்க செய்யும் போலீசாரால் முக்கிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகள் கண்காணிக்கப்படுகிறது. மாவட்டத்தில் தங்கி உள்ள வெளிநாட்டினர் குறித்து சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 326 இடங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து இடங்களுக்கும் காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். குடியரசு தின நாளில், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் டிஎஸ்பிக்கள் தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு எஸ்பி ராஜேஸ்கண்ணன் தெரிவித்தார்.

The post இன்று குடியரசு தினவிழா; மாவட்டம் முழுவதும் 700 போலீசார் பாதுகாப்பு: முக்கிய இடங்களில் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Tags : Republic Day ,Namakkal ,Republic Day… ,Dinakaran ,
× RELATED நீதி, சமத்துவம், மாண்பை உறுதி செய்யும்...