×

கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி, ஜன.26: கிருஷ்ணகிரியில், 15வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், 15வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சரயு கொடியசைத்து தொடங்கி வைத்து, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாளான 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி, தேசிய வாக்காளர் தினமாக 2011ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 15வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.

இவ்வருடத்திற்கான மையக்கருத்து “வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்” என்பதாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1096 வாக்குச்சாவடி மையங்கள், அனைத்து தாசில்தார் அலுவலக தலைமையிடங்களிலும், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலக தலைமையிடங்களிலும் மற்றும் மாவட்ட தலைமையிடத்தில் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் 15வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. மயிலாட்டம், சிலம்பாட்டம், நாடக கலைஞர்கள் தாரை, தப்பட்டை, இசைக்கருவிகள் முழங்க இப்பேரணி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.

இந்த பேரணியில் கல்லூரி மாணவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தினவிழா கொண்டாடப்பட்டது. தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, மாவட்டத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே ஓவியம், கட்டுரைப் போட்டி, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கோலப் போட்டியும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டு, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கும் கேடயம், பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர் அனைவரும், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்கலாம்.

அனைத்து வாக்காளர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்திடவும், ஏதேனும் பிழைகள் இருப்பின் அதனை திருத்தம் செய்யவும், தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும், மாணவ, மாணவிர்கள் இந்திய நாட்டின் இறையாண்மையையும், தேசப் பற்றையும், நாட்டின் வளர்ச்சியையும் தேர்தலின் போது 100 சதவீதம் வாக்களிப்பதன் மூலமாக நிலை நாட்ட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில், 15வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை, கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) குமரன், கிருஷ்ணகிரி ஆர்டிஓ ஷாஜகான், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் நடராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) முனிராஜ், தனி தாசில்தார்கள் ஜெய்சங்கர், கிருஷ்ணமூர்த்தி, மதுச்செழியன், தாசில்தார் வளர்மதி, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) கணேசன், துணை தாசில்தார் சகாதேவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில், வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை தாசில்தார் கோகுல்நாத், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரணியில் தலைமையிடத்து தாசில்தார் சுபாஷினி, தேர்தல் துணை தாசில்தார் சந்திரன், வருவாய் ஆய்வாளர் சென்னம்மாள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வருவாய்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,15th National Voters Day ,Krishnagiri New Bus Stand ,Signature ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைமை...