ஓசூர்,ஜன.26: பெங்களூரு விலிருந்து ஓசூர் வழியாக காரில் குட்கா கடத்திய நபரை போலீசார் கைது செய்து கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனை சாவடியின் அருகில், கர்நாடக மாநிலம் இருப்பதால் அங்கிருந்து கர்நாடக மதுபான பாட்டில்கள், போதைப் பொருட்கள் கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்கும் வகையில், சிப்காட் போலீசார் 24 மணி நேரமும் ஜூஜூவாடி சோதனையில் கண்காணித்து வருகின்றனர். நேற்று போலீசார் ஜூுஜூவாடி சோதனை சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 27 கிலோ குட்கா, மதுபானம் 48 பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து குட்கா, மதுபானம் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து, காரை ஓட்டி வந்த தேன்கனிக்கோட்டை தாலுகா தொட்டமெட்டரையை சேர்ந்த சந்தோஷ் (31) என்பவரை கைது செய்தனர்.
The post காரில் குட்கா கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.